மரணத்தின் வணிகர்கள் : கோவிட்-19 மற்றும் பெருவணிகம்

தனிமைப்படுத்தலின் தனிமை மற்றும் புதிய நோய்த் தொற்றுகளின் துயரம் மற்றும் தொற்று நோய் காரணமாக வழமையான வாழ்வில் இருந்து வேறொரு புதிய நெருக்கடியான வாழ்நிலைக்கு மாறியவர்களின் துயரம் தாங்க முடியாதது. நாமும் ஓர் ஆழமான கோபத்திற்கு உள்ளாகிறோம். ஏனெனில் முதலாளித்துவத்தின் பல தவறான சமூக மதிப்பீடுகளின் கொடூரமான அம்சங்களில் ஒன்று துருத்திக் கொண்டு வெளிவருகிறது. அது மக்களின் வாழ்வு மற்றும் மரணத்தையே தனது லாபத்திற்கான ஒரு வணிகமாக செய்து கொண்டிருக்கிறது.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளுக்கு காப்புரிமை பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் எதிர்த்தன. இந்த முன்மொழிவு 2020 அக்டோபரில் உலக வர்த்தக அமைப்பின் முன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவால் சமர்ப்பிக்கப்பட்டது.

பார்க்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது அறிவுசார் சொத்து தடைகளை அகற்றுவதை உள்ளடக்கிய நகர்வு. இதனால், நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தையும் அறிவையும் மற்ற உற்பத்தி ஆலைகளுக்கு கொடுக்க முடியும். இதன் மூலம் உலக மக்களுக்கு முடிந்தவரை விரைவாக தடுப்பூசிப் போடுவதற்கு தேவையான அளவு  தடுப்பூசிகளை மிகப் பெரிய அளவில் உத்தரவாதமாக உற்பத்தி செய்ய முடியும். உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் கருத்துப்படி, பல நாடுகளிலும் இதற்கான உற்பத்தி திறனும் ஆற்றலும் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான ஒப்பந்தம், பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலுக்கான முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு பிரத்யேக உரிமைகளை ஒதுக்கும் அளவிற்கு ஏகபோகங்களின் சட்டரீதியான உருவாக்கத்தை தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பயன்படுத்தும் வாதம் என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்ய ஒரு ஊக்கத்தொகை உள்ளது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இந்த காப்புரிமைகள் மட்டுமே ஒரே வழி.

“ஊக்கத்தொகை” அவர்களின் வலுவான வாதமாக இருப்பதால், இது பற்றிப் பரிசீலிப்போம். காப்புரிமை மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் அடைவது என்னவென்றால், இந்த உலகில் யார் வாழ்வது, யார் இறப்பது, அதே போல் நாம் எப்படி வாழ்வது, எப்படி இறப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மருந்து நிறுவனங்களுக்கு வழங்குவதாகும். மருந்து நிறுவனங்கள் தான் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். மிகவும் இலாபகரமானதாக இருக்கும் மருந்துகளை மட்டும் உற்பத்தி செய்வதாக இது இருக்கும்.

நோய்களை நாள்பட்டதாக ஆக்குவதும், தற்செயலான ஒன்று அல்ல. உண்மை என்னவென்றால், ஆராய்ச்சிக்கான நிதி தனியார் மருந்து தொழில் ஆதாரங்களில் இருந்து வரவில்லை. இது வரலாற்று ரீதியாக நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்த அரசாங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் முக்கியமான பொது நிறுவனங்கள் தான் ஆராய்ச்சியை உருவாக்கியுள்ளன. பின்னர், மருந்துத் தொழில் நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தைக் கையகப்படுத்தியுள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 1390 கோடி டாலர்களில், அரசாங்கங்கள் 860 கோடி டாலர்களை வழங்கியுள்ளன; அரசு சாரா நிறுவனங்கள் 190 கோடி டாலர்களை வழங்கியுள்ளன. அதே நேரத்தில் தனியார் மருந்து நிறுவனங்கள் 340 கோடி டாலர்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மொத்த செலவில் வெறும் 25 சதவீதம் மட்டுமே. தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தை உள்ளது என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும். உண்மையில், டிசம்பர் 2020 வரை, வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுபவை 1038 கோடி டோஸ்களை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா கோவிட்-19க்கு எதிராக 100 சதவீதம் பொது நிதியுடன் 250 கோடி டாலர்களைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 78 கோடி டோஸ்கள். இது சுமார் 2400 கோடி டாலர்கள் அமெரிக்க வருவாயை உருவாக்கும். இந்த வணிகத்தின் இலாபங்கள் என்னவாக இருக்கும் என்பதை சாதாரணமான மக்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

ஃபைசர் / பயோஎன்டெக், மேலும் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்க ஆதாரங்களில் இருந்து சுமார் 195 கோடி டாலர் பெற்றது. அவர்கள் ஆராய்ச்சிக்கு செலவழித்ததில் சுமார் 66 சதவீதம். 128 கோடி டோஸ்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 18.50 டாலர் என்ற விலையில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டன. இது சுமார் 2368 கோடி டாலர்கள் வருவாய் ஆகும். ஆங்கில மூலதனத்திற்கு சொந்தமான அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டு, 329 கோடி டோஸ்களுக்கு முன் ஆர்டர்களைப் பெற்றது.

இது ஒவ்வொன்றும் 6 டாலருக்கு விற்கப்பட்டு, 1974 கோடி டாலர்கள் வருவாயைப் பெறும். ஆனால், ஆராய்ச்சிக்காக அது செலவழித்த 220 கோடி டாலர்களில் 67 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து வந்தது. ஜான்சன் & ஜான்சன் 127 கோடி டோஸ் தடுப்பூசிக்கான ஆர்டர்களைக் கொண்டுள்ளது. இது ஒரு டோஸ் ஒன்றுக்கு 10 டாலரில் விற்கப் படுகிறது. இதன் மூலம் 1270 கோடி டாலர்கள் வருமானத்தை உற்பத்தி செய்யும். அவர்கள் ஆராய்ச்சியில் 81.9 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இதில் 100 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து நிதியளிக்கப்பட்டது.

தடுப்பூசிகளின் விலைகள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 4 முதல் 37 டாலர்கள் வரை : ஸ்புட்னிக்-V $ 10 / டோஸ்; சனாபி / ஜி.எஸ்.கே ஒரு டோஸ் மருந்துக்கான விலை 10 முதல் 21 டாலர் வரை; நோவாக்ஸ் $ 16 / டோஸ்; மாடர்னா ஒரு டோஸ் மருந்துக்கான விலை 25 முதல் 37 டாலர் வரை; சினோவாக் $13 முதல் $29 வரை / டோஸ்; (ஏற்கனவே குறிப்பிடப் பட்டவற்றுக்கு கூடுதலாக.)

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் ஒரு வளர்ந்து வரும் வணிகமாக, எங்கள் காலத்தின் சிறந்த வணிக வாய்ப்பாகத் தோன்றுகிறது. ஆராய்ச்சி முதலீட்டின் பொறுப்பை அரசுகள் எடுத்துக் கொண்டு தனியார் மருந்துத் தொழில்களுக்கு நிதியளித்தன. அவர்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அதே அரசாங்கங்கள் அவர்கள் நிதியளித்த பெருநிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அனைத்து இலாபமும் மருந்துத் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும். அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள். மேலும், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான உடன்படிக்கையால் அதே அரசாங்கங்கள் வழங்கிய ஏகபோகத்தின் காரணமாக, பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலின் பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளன.

இந்த காப்புரிமைகளின் விளைவாக, தடுப்பூசியைப் பெறுவதற்கான இந்த கட்டுப்பாடு, தினமும் 5,00,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் கோவிட்-19 காரணமாக ஒவ்வொரு நாளும் 8,000 பேர் இறக்கின்றனர்.

முதலாளித்துவத்தின் இதயமற்ற லாபவெறிக்கான எடுத்துக்காட்டு அல்லவா இது?

இன்று, அதிக வருமானம் பெறும் நாடுகள் வினாடிக்கு ஒரு நபருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடப்படவில்லை என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது. இன்று வரை தயாரிக்கப்பட்ட 12.8  கோடி தடுப்பூசி அளவுகளில், உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 60 சதவீதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வெறும் 10 நாடுகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான தடுப்பூசிகள் குவிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 250 கோடி மக்களைக் கொண்டுள்ள 130 நாடுகளில், தடுப்பூசி செயல்முறைக் கூட தொடங்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நாம் 2021-க்குள் ஆறு மாதங்கள் இருக்கும் நேரத்தில், மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த சூழ்நிலையில், இந்த மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள். (ஆக்ஸ்பாம்) இது இந்த நாடுகளின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதையும் தாமதப்படுத்தும். உலகில் கிடைக்கக் கூடிய அனைத்து தடுப்பூசிகளிலும் அமெரிக்கா 25 சதவீதம் பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12.6 சதவீதம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தின் திமிர்த்தனம் மிகவும் பெரியது. அவற்றின் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக, அவர்கள் 2001-ல் உலக சுகாதார நிறுவனத்தில் உடன்பட்டாலும், பொது சுகாதார அவசரநிலை சந்தர்ப்பங்களில் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க காப்புரிமைகளில் இருந்து விலக்கு அளிக்க மறுத்து விட்டனர். (தற்போது அமெரிக்கா சற்று கீழிறங்கி, இந்த விலக்கு அளிப்பதற்கான பேச்சு வார்த்தைக்கு உதவுவதாக கூறியுள்ளது.) (மொ.ர்).

“… டிரிப்ஸ் ஒப்பந்தம் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்காது மற்றும் தடுக்கக் கூடாது. இது தொடர்பாக, தோஹா பிரகடனம், உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக பகிரங்கமாக வாதிட்டு, முன்வைத்தக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. அதாவது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், ஏழை நாடுகள் மருந்துகளை எளிதாகப் பெறுவதை அதிகரிக்கவும் டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துதல்.”

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

மேலே உள்ள அனைத்தும் போதாது என்பது போல், ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 15 டாலர் என்ற விலையில், உலகின் 790 கோடி மக்களுக்கு தலா இரண்டு டோஸ்கள் வழங்கப் படுகின்றன என்பதை கணக்கெடுத்தால், உலக மக்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 23100 கோடி டாலர்கள் தேவைப்படும் என்பது மிகவும் ஆத்திரமூட்டுகிறது.

ஏனெனில், இது உலகிலுள்ள 2,000 கோடீஸ்வரர்கள் தொற்று நோயின் போது அடித்த கொள்ளை லாபத்தில் 5 சதவீதம் கூட கிடையாது. இப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்த அதே நேரத்தில், 50 கோடி மக்கள் தீவிர வறுமையில் வாழ்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த பட்டியல் இப்போது சுமார் 400 கோடி மக்கள் என உயர்துள்ளது.

[குறிப்பு : பாஸ்குவாலினா கர்சியோ வெனிசுலாவில் உள்ள Simón Bolívar பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்]

கட்டுரையாளர் : பாஸ்குவாலினா கர்சியோ
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : Frontierweekly

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க