கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, சுனாமியை போல நாடு முழுவதும் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. எங்கும் கொரோனா அச்சம். எப்போது நம்மை, நம் வயதான பெற்றோரை தாக்கும் என்று அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் மக்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனையில் சேர்ப்பதே குதிரை கொம்பாகி விடுகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளதா?, ஏற்றிச் செல்ல ஆம்புலன்சு உள்ளதா?, அப்படியே சென்றாலும் அனுமதிக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம். பின்னர் ஆக்சிஜன் தட்டுப்பாடு என இலட்சக் கணக்கானோரை  மரணத்தை நோக்கித் தள்ளியிருக்கிறது கொரோனா.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. சுடுகாட்டில் எரிக்க மணிகணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. வடஇந்தியாவில் முறையாக எரிக்க ரூ.20,000 வரை செலவு செய்ய வேண்டியிருப்பதாலும் ஆங்காங்கே சாலை ஓரங்களில் பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. நாற்பது கோடி மக்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் ‘புனித’ கங்கையில் கொரோனா பிணங்கள் மிதக்கின்றன. கங்கை மட்டும் அல்ல. மத்திய பிரதேசத்தில் யமுனா நதிக்கரையிலும் பிணங்கள் புதைக்கப்பட்டு சுகாதாரம் மேலும் மேலும் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் அலையிலிருந்து பாடம் கற்ற சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், இரண்டாம் அலை தாக்காமல் தங்களை காத்துக் கொண்டன. மோடியோ தேர்தலுக்கும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும், வேளாண் சட்டம், மின்சார சட்ட திருத்தம் போன்ற கார்ப்பரேட் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கும் முன்னுரிமை கொடுத்தார். இது குறித்து விமர்சனம் செய்தவர்களை கைது செய்கிறது மோடி அரசு. மோடியின் சகபாடியான யோகி ஆதித்யநாத் ஒரு படி மேலே போய்,  விமர்சிப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் போடுவேன் என்கிறார்.

கோவிட் வைரசுக்கும் உயிர்வாழ உரிமை இருக்கிறது, கங்கை தண்ணீரை ஆராய்ச்சி செய்தால் கொரோனா மருந்து தயாரிக்கலாம், மாட்டு சாணம் மற்றும் மூத்திரத்திற்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது என்றெல்லாம் மத்தியில் ஆளும் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களுமே பேசி வருகின்றனர்.

தமது பாசிச நடவடிக்கைகளை விரிவுபடுத்த தேர்தல் வெற்றியை பயன்படுத்த வேண்டும் என்று உ.பி-யில் உள்ளாட்சி தேர்தலையும் 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் மும்மரமாக அமித்ஷாவும் மோடியும் வேலை செய்தனர். உத்தர்காண்ட்-கும்பமேளாவை பல இலட்சம் பேரை திரட்டி நடத்தினார்கள். குஜராத்தில் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் மக்களின் எதிர்ப்பையும் மீறி பல முறை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். இதன் விளைவாக கொரோனா பரவி, பல இலட்சக் கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க  உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்களும் பல அறிவுத்துறையினர், விஞ்ஞானிகள் என பலரும் கூக்குரலிடும் போது ஆமை வேகத்தில் கூட நடவடிக்கை எடுக்காமல் மோடியும், அமித்ஷாவும் ஓடி ஒளிந்துக் கொண்டனர் என்று அவுட்லுக் பத்திரிகை, ராகுல் போன்றோர் விமர்சித்தனர். அதையெல்லாம் கிண்டல் செய்து உதாசீனப்படுத்திய கும்பல், பிரச்சனை கைமீறிப் போனதும் கையை விரித்து மாநில அரசுகளிடம் பொறுப்பைத் தள்ளிவிட்டது.

ஒரே நாடு ஒரே கொள்கை என்று முழங்கியவர்கள், பேரிடர் காலத்தில் மாநிலங்கள் சுயமாக பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை பேசி தடுப்பூசியை வாங்கி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து, அதில் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே துடித்தனர்.

இமாலச்சலப் பிரதேசத்தில் இருந்த மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஐ), தமிழ்நாட்டில் குன்னூரில் இருந்த பாஸ்டியர் இன்ஸ்டிட்டியூட் ஆப் இந்தியா, சென்னையில் இருந்த பிசிஜி -தடுப்பூசி ஆய்வகம் (பிசிஜிவிஎல்) ஆகிய மூன்று பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களையும் 2009-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்புமணி ராமதாஸ் இழுத்து மூடினார். அதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வந்த பின்னர், செங்கல்பட்டில் ஒரு பொதுத்துறை தடுப்பூசி நிறுவனம் துவங்கப்பட்டது.

அந்த தடுப்பூசி நிறுவன கட்டுமானத்தில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் மீதம் 10 சதவீதம் பணிகளை முடித்து கடந்த ஆண்டே தடுப்பூசிகளை தயாரித்திருக்க முடியும். ஆனால், எடப்பாடியும், மோடியும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் அந்த செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை கிடப்பில் போட்டுள்ளனர். மக்கள் தடுப்பூசி இன்றி செத்தாலும் பரவாயில்லை, முழுக்க முழுக்க தனியார் தடுப்பூசிக் கொள்ளையர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் மோடியும் அதனை சிரம் மேல் ஏற்றுக் கொண்டு எடப்பாடியும் அமைதி காத்தனர்.

இதே போல, எச். எல். எல். பயோடெக் நிறுவனம்,

உத்திரப் பிரதேசத்தில் உள்ள நோய் எதிர்ப்பு கழகம், மகாராஷ்டிரத்தில் ஹப்கினே இன்ஸ்டிட்டியூட், பயோ பார்மாசிட்டிக்கல் கழகம், தெலுங்கானாவில் உள்ள மனித உயிரியல் நிறுவனம் ஆகிய அரசு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு எந்த முயற்சியையும் மோடி அரசு எடுக்கவில்லை என டான் டூ எர்த் – என்கிற பத்திரிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

எப்படி மற்ற பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்ததோ அதே போல பொதுத்துறை நிறுவனங்களான தடுப்பூசி நிறுவனங்களை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட்டுகள் பிணத்தில் பணம் அள்ள வழிவகை செய்துள்ளனர்.

சீரம், பயோடெக் என்ற இரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 4,500 கோடி நிதியை வாரி வழங்கி, மாநில அரசுகளையும், மக்களின் பணத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைத்துள்ளது.

அரசு-பொதுத்துறை நிறுவனமான ஹப்கினே இன்ஸ்டிட்டியூட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனம்,  “கோவாக்சின் தொழில்நுட்பத்தைக் கொடுங்கள், நாங்கள் உற்பத்தி செய்கிறோம்” என்று கேட்டும் மோடி அரசு இன்று வரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

காப்புரிமை தளர்வை ஏற்படுத்துவது குறித்து இந்திய அரசு நாடகம்தான் நடத்திக் கொண்டிருக்கிறது.

பேரிடர் காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி அதில் தளர்வை ஏற்படுத்தி தடுப்பூசியை தயாரிக்க உச்சநீதிமன்றம் கூறியும் மோடி அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியையும் தரவில்லை. அதோடு பலரும் வலியுறுத்தியும் கோவிட் சிகிச்சைக்கான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை தள்ளபடி செய்யவும் இல்லை.

இக்கட்டான தருவாயிலும் போதிய நிதி ஒதுக்கி மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, பாராளுமன்ற கட்டிடம் கட்டவும், பிரதமர் குடியிருப்பு கட்டவும் பல்லாயிரம் கோடியை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு. ஒரு பாசிஸ்ட்டால் மட்டுமே இத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியும்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் கார்ப்பரேட் கொள்கைகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் மாறி மாறி அமல்படுத்தியதன் தொடர்ச்சிதான் இன்று மருத்துவம் 75 சதவீதம் தனியாரின் பிடியில் இருப்பதற்குக் காரணம். தனியார்மயத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் ஒழித்துக் கட்டத் தவறினால், மூன்றாம் அலையையும் தடுக்க முடியாது.

அதோடு ஏற்படவிருக்கும் மிகப்பெரும் மனிதகுல இழப்பையும் தடுக்க முடியாது என்பது தான் வரலாறு நமக்கு இன்று கற்பித்திருக்கும் பாடம். அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டு தவறுகளைத் திருத்தத் தவறினால், நம் அன்பானவர்களை இந்தக் கொள்ளை நோய்க்கு இழப்பதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
கைபேசி 63845 69228

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க