நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் (5 ஆண்டுகள்) இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்” என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சவடாலடித்தார் மோடி. 8 ஆண்டுகள் ஆண்டுவிட்டார் தேவதூதர். இந்தியா எப்படி இருக்கிறது?

கருப்புப் பண ஒழிப்பு, 5 டிரில்லியன் பொருளாதாரம், 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என அடுக்கடுக்கான புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரையும் வாழ வழியில்லாமல் ஆக்கியிருக்கிறார். ‘இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்’ என்று அவர் கூறியதன் உண்மைப் பொருளை இன்று நாடு கண்டுவருகிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் அன்றாட வாழ்வாதாரச் செலவிற்கே திண்டாடுகிறது. 2014-ல் 66 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 110-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது; 400 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலை 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வாலும் ஜி.எஸ்.டி. வரி உயர்வாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவருகிறது.

பால், தயிர், அரசி உள்ளிட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் வரியை 5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது மோடி அரசு. எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலை ஏற்கெனவே மோசம். ஜி.எஸ்.டி. வரி கூட்டிய பிறகு 10 ரூபாய்க்கு விற்ற டீ 12 ரூபாய் ஆகிவிட்டது. ஐந்து, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டிக் கடை இட்லி, தோசை கூட இரண்டொரு ரூபாய் கூடிவிட்டது. அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட நம்மை அல்லாட வைத்துவிட்டது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னார் மோடி. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் வறுமை செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு வோர்ல்ட் பாவர்ட்டி கிளாக் (World Poverty Clock) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, அதீத வறுமையுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம். மேலும் ஏழைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம். இந்திய மக்கள் தொகையில் 68.8 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 160 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.

ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் ஆய்வறிக்கையின்படி, 20 கோடிக்கு மேலான இந்தியர்கள் நாள்தோறும் பசியோடு உறங்கச் செல்கிறார்கள். மேலும் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவில்லாமல் பசியால் இறந்துபோவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

***

கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது; இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிக்கைப் படி, இவற்றில் கிராமப்புறத்தில் 57 சதவிகிதமும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளார்கள். கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். இதுவெறும் கொரோனா காலத்தில் மட்டும் நிகழவில்லை. மோடியின் மக்கள் விரோத கொள்கைகளால் விளைந்த விளைவு இது.

சான்றாக, கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை. பண மதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டு விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் நட்டமடைந்த பல சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 35 லட்சம் பேர் வேலை இழந்தனர். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மேலும் இந்நடவடிக்கைக்குப் பிறகு 96 சதவிகிதம் ரொக்கப்பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது. செல்லாத பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்றே 140 பேர் உயிரிழந்தனர்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது அடுத்த தாக்குதல். கடந்த 2018-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) நடத்திய ஆய்வில், 6.3 கோடி சிறுகுறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்கள் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு பின்னர் தனது லாபத்தில் 20% வீழ்ச்சியைக் கண்டது; இதனால் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது என்று குறிப்பிடுகிறது.

அதேபோல இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டின்படி, ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்ட ஆண்டில் கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். இதனால் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 4.1 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்டில், அதாவது ஒரே மாதத்தில் 6.4 சதவிகிதமாக உயர்ந்தது.

இச்சிறுகுறு தொழில்கள்தான் இந்தியப் பொருளாதாரத்திற்கு 32% பங்களிப்பை வழங்குகின்றன. விவசாயம் ஒழிக்கப்பட்டுவரும் நிலையில், முறைப்படுத்தப்பட்ட ஆலைத்தொழில்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவான வேலைவாய்ப்பையே வழங்குகின்றன. 40 சதவிகிதத்திற்கும் மேலானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் சிறுகுறு தொழில்கள் மோடி ஆட்சியில் திட்டமிட்டு ஒழித்துக் கட்டப்பட்டது இப்படித்தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது.

2018 – 2020க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். இதை தற்கொலை என்று சொல்வதைவிட மோடி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் செய்த இனப்படுகொலை என்றே சொல்ல வேண்டும்.

விவசாயம் பொய்த்துப் போய், போதுமான வேலைவாய்ப்பில்லாமல் சொந்த மாநிலங்களைவிட்டு நாட்டுக்குள்ளேயே புலம்பெயரும் தொழிலாளர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிமைகள் ஏதுமற்ற நிலையில், அடிமாட்டுக் கூலிக்கு வேலைசெய்யும் இத்தொழிலாளர்கள் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழக்கூடியவர்கள். மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் 10 கோடி பேர் இருப்பதாக மோடி அரசே கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

கொரோனா பெருந்தொற்றின்போது, எவ்வித முன்னறிவிப்பு இன்றி மோடி அறிவித்த ஊரடங்கால் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், உணவிற்கும் பணத் தேவைக்கும் வழியின்றி நூற்றுக்கணக்கான மைல்கள் நாட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்தே கடந்தனர். போகும் வழியிலேயே பட்டினியால் மாண்டவர்கள் பல பேர். பட்டினி மயக்கத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அநியாயமாக மடிந்த செய்தி நம்மில் பலரது நெஞ்சையும் உலுக்கியது. 2௦20-ஆம் ஆண்டில் மட்டும் 8,733 பேர் இவ்வாறு இறந்தனர்.

தனியார்மய கொள்கைகளின் விளைவாக மொத்த பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. அரசு வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் கூட தமது வேலை எப்போது பிடுங்கப்படும் என்ற பயத்தில்தான் வாழ்கின்றனர். மேலும் தொழிலாளர் சட்டத் திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை உள்ளிட்டு மொத்த உரிமைகளும் காவு வாங்கப்படுகின்றன. ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கப்படுகிறது. இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமைமயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

வெவ்வேறு வடிவங்களில் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு செய்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வேளாண்மைக்கான நிதி துண்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய மானியங்கள் ஆகியவை வெட்டபட்டுகொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோடி அரசின் தொடர் வஞ்சனை காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2014-2020 ஆண்டுகளில் மட்டும் 9.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


படிக்க : தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அரசு, குறைந்தபட்ச ஆதாரவிலையை ஒழித்துக் கட்டவும் விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வேளாண் சட்டத்தைத் திருத்தியது. டெல்லியை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்வரை போராடிய விவசாயிகள் மோடியை பணியவைத்தனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகியானார்கள்.

வேளாண் சட்டங்களை இரத்துசெய்யும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றுவேன் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களைக் கொண்டே குழு அமைத்துள்ளது.

வேளாண் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், நீம் – எஃப்.டி.இ சட்டங்கள், மீன்வள பாதுகாப்பு மசோதா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு 100 சதம் அனுமதி, ஜி.எஸ்.டி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம், நிலத்தடி நீருக்கு கட்டணம், மின்சாரத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டு எண்ணற்ற மக்கள் விரோத – கார்ப்பரேட் நலக் கொள்கைகளைக் கொண்டுவந்து நாட்டையும் உழைக்கும் மக்களையும் தாக்கிவருகிறது இந்த பாசிசப் பேயாட்சி.

பா.ஜ.க. ஆட்சி நீட்டித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுகுறு வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக ஒரு மறைமுகப் போரைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டாமல் உழைக்கும் நிம்மதியாக வாழ முடியாது.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க