அண்மை காலமாக தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகிறது. தனியார்மய – தராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை வடிவங்களில் பல புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளது. தனியார் முதலாளித்துவ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் அரசுத் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா துறைகளிலும் காண்ட்ராக்ட்மயம் புகுத்தப்படுகிறது.
காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்திற்கு அவர்களின் உழைப்பானது மிகக் கொடுமையான முறையில் சுரண்டப்படுகிறது. பெரும்பாலான காண்டிராக்ட் தொழிலாளர்கள் தினக்கூலியாக அல்லது வாரக்கூலிகளாக மாற்றபட்டுள்ளனர்.
கூலியை குறைக்கும் விதமாக பெரும்பான்மையான தொழில்நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு பல கிலோமீட்டர் தொலைவிற்கு வேலைதேடி பயணம் செய்து, இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி, ராஜஸ்தான், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு அதிகப்படியான வெளிமாநில தொழிலாளர்கள் படையெடுக்கின்றனர்.
படிக்க : பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!
வெளிமாநில தொழிலாளர்களிடம் குறைந்த கூலிக்கு உழைப்பை சுரண்டுவதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள பணிநிரந்தர தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு என்பது எல்லாம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.
தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடினால், நாம் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவோம்; கூலி குறைக்கப்படும் என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் தமிழக தொழிற்பேட்டைகளில் பணிநிரந்தரம் கேட்டு நடத்திய போராட்டங்கள் எல்லாம் தற்போது மிக கணிசமான அளவு குறைந்து உள்ளது.
***
கடந்த 2011-14 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திய ஊதிய உயர்வு போராட்டம் மிக முக்கியமான போராட்டமாகும். போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மிகத்தீவிரமான வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களால் போர்க்குணமிக்க முறையில் நடத்தப்பட்ட போராட்டம், மிகக் கடுமையான முறையில் அரசால் ஒடுக்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா போன்ற கடும் ஒடுக்குமுறை சட்டங்கள் எல்லாம் போடப்பட்டன. அரசு இயந்திரங்கள் முடங்கின. தொழிலாளர்களின் போரட்டங்களை கண்டு ஆவேசம் அடைந்த பாசிச ஜெயலலிதா, 1.5 லட்சம் பேரை கைது செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் மீது பாசிச அடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழக தொழிலாளர்களின் மீதான தாக்குதலில் மிக முக்கியமான நிகழ்வாகும்.
இத்தாக்குதலுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட பரிணாமமே மாறிவிட்டன. போராட்டங்கள் மேலும் மேலும் சுருங்கிவிட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டங்களின் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன. போராட்டத்தின் தன்மையே மாறியது.
***
தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்துள்ள, அடிப்படை உரிமைகளுக்காக போராடக்கூடிய தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் பொருளாதாரப் போராட்டம் என்ற வரம்புக்குள்ளேயே பெயரளவிலான போராட்டங்கள் நடத்துவது என்ற வரம்புக்குள் சுருக்கப்பட்டுவிட்டன. கடந்த காலங்களில் இவ்வாறான தொழிற்சங்களில் செல்வாக்கு செலுத்திய குசேலர், மைக்கெல் பெர்ணாண்டர்ஸ், வி.பிரகாஷ் போன்ற தொழிற்சங்க தலைவர்களெல்லாம் செல்வாக்கு இழந்து பொய்க்கொண்டிருக்கிறார்கள்
புரட்சிகர தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக நேர்மையாக போராடுவது என்ற நிலை இருக்கிறது. ஆனால் குறைந்த அளவே தொழிலாளர்கள் போரட்டங்களில் பங்காற்றுகின்றனர். தற்போது 44 தொழிலாளர் சட்டங்கள் 4 சட்டத்தொகுப்பாக திருத்தப்பட்டதும், பெயரிலாவிலான உரிமைகளைக் கூட சட்டப்போராட்டம் நடத்தி பெறுவது என்பது எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக சங்கமாக திரளும் உரிமை தற்போது பல்வேறு தொழிற்சாலைகளில் மறுக்கப்பட்டு வருகிறது.
***
அண்மைகாலங்களில் தொழிலாளர்கள் அமேசான், ஸ்விகி, சுமேட்டோ போன்ற நிறுவனங்களில் விற்பனை பிரதிநிதிகளாகவும், டெலிவிரிபாய் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறான தொழிலாளர்கள் சமூகத்தில் உருவாவதன் மூலம், தொழிலாளர்களை அமைப்பாக்கும் நடவடிக்கை என்பது மேலும் மேலும் குறைத்து வருகிறது. மிகப்பெரிய மால்கள், விற்பனையகங்கள், ஜவுளி ஸ்டோர்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் ஒன்று சேராத வண்ணம் தனித்தனியாக பிரிக்கபட்டு பணியமர்த்தப் படுகின்றனர். இந்நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு பணிநிரந்தரம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, வைப்புத்தொகை போன்ற எவ்வித உரிமையும் கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்ற கொடுமையான அடக்குமுறை, இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
***
ஆலைக்குள் இல்லாமல், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட முதலாளியின் கீழ் பணி புரியும் நிலை அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களை ஒரு வர்க்கம் அல்லது தொழிலாளி என்று உணரும் போக்கு என்பது அண்மை காலங்களில் சுருங்கி வருகிறது.
ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்டோ தொழிலாளியோ அல்லது ஸ்விகி போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களோ, தன்னை ஒரு தொழிலாளி என்று கருதுபவதை விட தன்னை ஒரு நிறுவனத்தின் ஊழியராக கருதிக் கொள்கின்றனர். நினைத்தால் வேலைக்கு செல்லலாம், வேலைக்கு சென்றால் ஊதியம் என்ற ஒரு சுருக்கப்பட்டுவிட்டது.
இதன் மூலம் ஊதியம் என்று சொல்லப்படுகின்ற சட்டபூர்வமான வரைமுறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஊதியம் என்ற மதிப்பீடுகள் மறைந்து அத்துக்கூலி என்ற நிலைமை வந்தடைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், அடிப்படை உரிமைகளான வீட்டு வாடகைப்படி, மருத்தவ வசதி, நீண்ட கால வைப்பு நிதி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டது.
இன்று வந்தாய், வேலை செய்தாய், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று அதன் ஒட்டு மொத்த சாராம்சம் சுருக்கப்பட்டு கொடுரமான ஒரு உழைப்பு சுரண்டல் அரங்கேறி கொண்டு இருக்கிறது.
ஊதிய உரிமை என்பது பல நாடுகளின் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி பெற்ற உரிமையாகும். தற்போது தொழிலாளர்களிடம் அந்த போராட்ட உணர்வும் மறைந்து வருகின்றது.
படிக்க : தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !
தொழிலாளர்கள் மனநிலையானது, ஒரு நாள் 500 ரூபாய் சம்பாதித்தால் போதும், அதைகொண்டு வாழ்நிலைமைகளை சமாளித்துவிடலாம் என்ற நிலைமையில் உள்ளது. அதற்குமேல் அதிக ஊதியம் பெறுவதற்கு அதற்கு ஏற்றாற்போல அதிக நேரம் வேலைபார்க்கின்றனர்.
ஆனால், அன்றாடம் விலைவாசியானது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கல்வி கட்டணம், மருத்துவக் கட்டனம், போக்குவரத்துக் கட்டனம் அதிகரிப்பால் மக்களின் சேமிப்பானது கரைந்துக்கொண்டே செல்கிறது. இப்பொருளாதார நெருக்கடியானது மக்களை வாழவழியில்லாத நிலையை நோக்கி தள்ளுகிறது.
ஆகவே, நாம் வாழ வேண்டும் என்றால் போராட்டங்களின் மூலம் நம்முடைய உரிமையை நாம் நிலைநாட்டிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
நாம் ஒரு ஆலை தொழிலாளியாகவோ, அரசு தொழிலாளியாகவோ அல்லது எவ்வாறாக செயல்பட்டாலும், லாரிஓட்டுநர், ஆட்டோ ஒட்டுநர், அரசு ஊழியர், சலவைத் தொழிலாளி, மின் ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என்று பல வகையில் பிரிந்து இருந்தாலும் எல்லோரும் அத்துக்கூலிகள், அன்றாடங் காட்சிகள்தான். எல்லோரும் தினக்கூலி என்ற நிலைமையை நோக்கி மிக விரைவாக நாம் வந்துக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச மோடி ஆட்சி விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், மக்களுக்கு எதிரான வரிக்கொள்கை போன்ற எண்ணற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் ஆலைத்தொழிலாளி, அரசு ஊழியர், ஸ்விகி ஊழியர் என்று தனித்தனியாக நம்மை நாம் பிரித்து பார்த்து கொள்ளக் கூடாது. மாறாக இன்றைய நவீன ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக நாம் அனைவரும் தொழிலாளர் வர்க்கமாக ஒன்று திரள்வதற்கான வாய்ப்புகள் பலவாறு பெருகிவிட்டன. இந்த வாய்ப்பினை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது குறித்து சிந்திப்பதே காலத்தின் கட்டாயம்.
நாம் ஓரணியில் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் திரண்டு எழுந்து நமக்கான நமது உரிமையை நிலைநாட்டிட வீதி போராட்டங்களில் இறங்கிவிட வேண்டும். தொழிலாளர்கள் தனது உரிமையை பெற மறுத்து நிற்கும் முதலாளிகளுக்கு பணிவிடை செய்யும் இந்த காவி கும்பலையும், முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் சமூக அமைப்பையும் அடியோடு மாற்றி அமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
ராமசாமி
உ.பி, ராஜஸ்தான், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு அதிகப்படியான வெளிமாநில தொழிலாளர்கள் படையெடுக்கின்றனர்.
இதில் முதலாளித்துவ தொழில்துறையில் முன்னேறிய எனக் குறிப்பிடவேண்டும்.