தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !

நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

0

சென்னை மறைமலை நகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் கம்பெனி தனது ஆலையை ஜூலை மாதம் முதல் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து அங்கு பணி புரிந்து வரும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னையில் தனது ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் 4 ஆயிரம் தொழிலாளர்களும் சென்னையில் 2 ஆயிரம் தொழிலாளர்களும் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது 2 ஆலைகளையும் அந்த நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி உள்ளது.

முன்னதாக சென்னையில் செயல்படும் ஆலையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மின்சார கார்களை உற்பத்தி செய்யப்போவதாக தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இதனால் தங்களது வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொழிலாளர்கள் ஆலையை முழுமையாக நம்பி இருந்தனர்.

படிக்க :

ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்ட் நிறுவன ஆலையை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கபோவதாகவும் அதனால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றும் மீண்டும் தொழிலாளர்களை நம்பவைத்தது ஆலை நிர்வாகம். இதனை நம்பிய தொழிலாளர்கள் 2 மாதத்தில் உற்பத்தி செய்ய நிர்ணயக்கப்பட்ட கார்களை 98 சதவீதம் வரை உற்பத்தி செய்து முடித்துவிட்டனர். மீதம் 1500 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய இருக்கும் நிலையில் ஆலையை ஜூன் மாதத்தில் மூடுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது.

தொடர் வருவாய் இழப்பு மற்றும் நட்டம் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலையை மறுசீரமைப்பு செய்வது மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளின் காரணமாக அதிக அளவு மூலதனம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் கதையளந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டால் நேரடியாக பணியாற்றும் 3 ஆயிரம் தொழிலாளரகளும் அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கின்றன. அவற்றிற்கு பல்வேறு சலுகைகளை வாரி இறைத்து, இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு விற்று மூலதனத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உதவுகின்றன.

தேவையான அளவிற்கு இந்தியாவின் இயற்கை வளங்களையும், அரசின் சலுகைகளையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டி கொழுத்துவிட்டு, நட்ட கணக்கு காட்டி ஆலையை மூடிச் செல்வது என்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே நோக்கியா, ஃபாக்ஸ்கான் என தமிழகம் முதல் இந்திய வரை ஆயிரம் உதாரணம் கூற முடியும்.

தொழில் தொடங்குவதற்காக பல்வேறு சலுகைகளையும், ஊடகத்தில் விளம்பரங்களையும் தேடிக்கொள்ளும் இந்த ஆளும் வர்க்க அரசுகள் ஆலையை மூடும்போது மௌன நிலைக்கு சென்று விடுகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களின் பிரச்சினை குறித்தோ எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. இந்த விவகாரத்தில் திமுக மட்டும் விதிவிலக்கா என்ன? இதுவரை ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் ஷிப்ட்டில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போடுமாறு ஆலை நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. அந்த படிவத்தில் ஆலைக்கு எதிராக போராடக் கூடாது என்றும் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

படிக்க :

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?

ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2,000 தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது ஷிப்ட்டுக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்களிடமும் அதே படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அவ்வாறு போடவில்லை என்றால் ஆலைக்குள் அனுமதிக்க முடியாது என்று தனது முதலாளித்துவ திமிரை காட்டியுள்ளது ஆலை நிர்வாகம்.

தொழிலாளர்களை சுரண்டி கிடைத்த கொள்ளை இலாபங்களை அள்ளிச் செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களை, இந்த கார்ப்பரேட் நல அரசு எதுவும் செய்யப்போவதில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அரசையோ, ஃபோர்டு ஆலையையோ நம்பி எந்தவித பலனும் இருக்கப்போவதில்லை. நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

ஏழைநாடுகளின் உழைப்பையும், வளங்களையும் சுரண்டி கொழுத்துவிட்டு, வேறுஒரு ஏழை நாட்டிருக்கு செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் – தனியார்மய – தாராளமாய – உலகமயக் கொள்கையை வீழ்த்தாமல் – தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க