புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

புதுச்சேரி திருபுவனையில் செயல்படும் ஐடிசி பன்னாட்டு கம்பெனியின் சன்பீஸ்ட், மேரிகோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுக்களைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனமான வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

கடந்த ஜனவரியில் திருபுவனை தொழிற்சாலையில் உற்பத்தி ஆர்டர் இல்லை என்று சொல்லி, பீகார், உத்திரப்பிரதேசம், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு 9 பெண்கள் உட்பட 25 தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்தது நிர்வாகம்.

பணியிட மாற்றம் செய்யும் இடங்களில் தொழிற்சாலையின் கிளைகள் ஏதும் இல்லை. அதனால் தொழிற்சாலை இல்லாத இடங்களில் பணியிட மாற்றத்தில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம், அந்தந்தப் பகுதியில் உள்ள சேல்ஸ் டிவிசன்கள் முறையாக செயல்படுகின்றன. எனவே அங்கு பணியிட மாற்றத்தில் சென்று தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. சில நிபந்தனைகளுடன் பணியிட மாற்றம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பிறகும் நிர்வாகம் எந்த நிபந்தனையும் ஏற்க முடியாது என வம்படியாக மறுத்தது. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக, மே-27ஆம் தேதி துவங்கிய தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தில், மூன்று நாட்களுக்குப் பிறகு, நிபந்தனைகளை ஏற்பதாக நிர்வாகம் முன்வந்தது.

அதன் அடிப்படையில் பணியிட மாற்றத்திற்கு கால நிர்ணயம் செய்வது, பெண்களின் பணியிட மாற்றத்தையும், வெளி மாநில பணியிடமாற்றத்தையும் தடுப்பது ஆகிய நிபந்தனைகளுடன் பணியிட மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. சேல்ஸ் டிவிசனில் சென்று பணி புரியலாம். அதற்கான வசதிகள் இருக்கிறது என்று நிர்வாகம் சொன்ன விசயங்களின் அடிப்படையில், நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழிலாளர்கள் நேற்று (03.06.2020) அன்று பணியில் சேர கும்பகோணத்திற்குச் சென்றனர்.

படிக்க:
♦ புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

சேல்ஸ் டிவிசன் என்று பணியிட மாற்ற கடிதத்தில் கொடுக்கப்பட்ட முகவரியில் சேல்ஸ் டிவிசன் என்ற போர்டு மட்டுமே இருந்தது. இரண்டு பேர் அமர்ந்து பேசும் இடவசதி கூட இல்லாத ஓலை வேய்ந்த குடிசைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

20 ஆண்டுகளாக எந்திரங்களில் பிஸ்கட்டுக்களை உற்பத்தி செய்து தொழில் நுணுக்கம் வாய்ந்த வேலைகளைச் செய்து வந்த ஆறு தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்குப் பணியிட மாற்றம் செய்வதாகச் சொல்லி குடிசைக்கு மாற்றியது தான் முதலாளித்துவத்தின் குரூரம்.

மேலும், பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு தங்கவும், உணவிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. சேல்ஸ் டிவிசனாக போர்டு வைத்துள்ள இடத்தில் ஓலைக் குடிசை மட்டும் இருந்தாலும், அங்கு தான் வேல் பிஸ்கட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் உள்ளார். அந்தப் பகுதியில் உள்ள  நான்கு, ஐந்து தெருக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிலப்பிரபுவாக வலம் வருகிறார். தன்னை மீறி எதுவும் இங்கே செய்துவிட முடியாது என்கிற ஆதிக்க மனோபாவத்தையும் காண முடிந்தது.

தொழிலாளர்களைப் பழிவாங்குவதே இந்தப் பணியிட மாற்றத்தின் நோக்கம் என்பதற்கு நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சி! ஆனாலும், நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்குப் பணியாமல் அவற்றைக் கடந்து, எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக உறுதியுடன் நிற்கின்றனர் தொழிலாளர்கள்.

ஆண்டுக்கு பல கோடிகளை லாபமாகச் சம்பாதித்து சொத்து சேர்க்கும் முதலாளிகள், அந்த லாபத்திற்குக் காரணமான தொழிலாளர்களது நியாயமான குரலை கேட்கக் கூட தயாராய் இல்லை. தொழிலாளர்களது உரிமைக் குரல் முதலாளித்துவத்தை தினமும் அச்சுறுத்துகிறது. தனது அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அந்தக் குரல் தனக்குக் கேட்காமல் செய்வதற்கு, தொழிலாளர்களின் குரல்வளையை நெறித்து, அவர்களை கண்காணாத தூரத்திற்கு தூக்கி எறிகிறது. அது போர்டே இல்லாத கட்டிடமா? அல்லது கட்டிடமே இல்லாத சுடுகாடா? என்பதைப் பற்றி எல்லாம் முதலாளி வர்க்கத்திற்குக் கவலை இல்லை.

லாப வெறி பிடித்த முதலாளித்துவத்தின் கோர முகம் தொழிலாளி வர்க்கத்தின் மீது விதம் விதமாய் அடக்குமுறைகளை ஏவும் என்பதற்கு வேல்பிஸ்கட்ஸ் முதலாளியின் பணியிட மாற்றம் மற்றுமொரு உதாரணம். எனினும் அதற்கு தொழிலாளிகள் அடிபணியாமல் தொடர்ந்து உறுதியாக போராடுவார்கள்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு – 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க