கொரோனா பெரும்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட அங்கன்வாடி தொழிலாளர்கள், டெல்லி செயலகம் அருகில் தங்களது சம்பள நிலுவைத் தொகை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து தரக் கோரி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
“அங்கன்வாடி தொழிலாளர்கள் – பெண்கள் அனைவரும் – முக்கிய பணிகளை செய்தாலும் அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவது இல்லை. சுகாதார வசதிகள், சலுகைகள் வழங்கப்படுவதில்லை. டெல்லியில் சுமார் 22,000 அங்கன்வாடி மற்றும் சுகாதார தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களாக முழு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே அந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.” என்று டெல்லி அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சார்ந்த விருஷாலி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
2018, செப்டம்பர் 11-ம் தேதியன்று ஆன்லைன் சந்திப்பில் ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறினார் நரேந்திர மோடி. ஆனால், மூன்றாண்டுகள் ஆன பிறகும் ஊதியம் உயர்ந்தப்படவில்லை.
படிக்க :
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
♦ அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களின் பணிச் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஓர் சமூக ஆர்வலர் கூறினார். “டெல்லி அரசு, சஹேலி சமன்வய் கேந்திராவை (சஹேலி ஒருங்கிணைந்த மையம்) நடத்தி வருகிறது. ஒன்றிய அரசு அதன் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த மையத்தை கொண்டுவர உள்ளது. எனவே, தொடக்கப்பள்ளிகளின் சுமையையும் அங்கன்வாடி தொழிலாளர்களின் தோலில் சுமத்த முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
“நாங்கள் சொல்வது என்னவென்றால், எங்கள் வேலையின் அளவின் அடிப்படையில் எங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். எனவே எங்களுக்கு ஒரு வழக்கமான தொழிலாளிக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், கடினமாக உழைப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை” என்றார் விருஷாலி.
மேலும், அரசியல் கட்சி எம்.எல்.ஏ-கள் மற்றும் அவர்களது உதவியாளர்களால் அங்கன்வாடி தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மேலும், தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தொழிலாளர்களை சுரண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் மொத்தம் 22 கோரிக்கைகளை டெல்லி அரசுக்கு முன் வைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் முடிவுகளை திரும்பிப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களை கட்டாய வேலை செய்ய கட்டுப்படுத்தப்படுகின்ற, கூடுதல் ஊதியம் இல்லாமல் அங்கன்வாடி பெண் ஊழியர்களின் வேலை நாட்களை நீட்டிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை கணக்கில்கொண்டு அரசாங்கம் உடனடியாக ஊதியத் தொகையை அதிகரிக்க வேண்டும். ரூ.18,000 மற்றும் ரூ.12,000 ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது.
படிக்க :
♦ துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களின் அந்தஸ்தை வழங்க வேண்டும்
அனைத்து அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அரசு ஊழியர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் வேலைவாய்ப்பு உறுதியான உத்தரவாதத்தை பெறவும், முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களின் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் மற்றும் ஓய்வு ஊதியம் சமூகப் பாதுகாப்பு அட்டைகள் போன்ற வசதிகளை வழங்க வேண்டும்.
டெல்லி அரசாங்கம் அறிவித்த ஊதிய உயர்வு தொகையின் நிலுவையை, டெல்லி அரசும் ஒன்றிய அரசும் தொழிலாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மற்ற அரசு சார்ந்த நிறுவனங்கள் ஊடுருவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் அங்கன்வாடி தொழிலாளர்கள்.
நாட்டிற்கு சேவை செய்யும் இந்த ஊழியர்களின் வயிற்றில் அடித்துத் தான் அதானி அம்பானியின் பணப்பெட்டியை நிரப்புகின்றது மோடி அரசு.
சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்