ரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் அதாவது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். நீட் தேர்வு பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரத்தில் பள்ளிக் கல்வி துறையில் அதிரடி மாற்றங்களை உருவாக்க போகிறோம் என்று இவர்கள் ஆடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக சில காலங்களுக்கு முன்பு இன்னொரு அறிவிப்பும் வந்தது. அதாவது முதல் வகுப்பில் ஒரு குழந்தை சேர வேண்டும் என்றால் மழலையர் வகுப்பில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

சரி.. இந்தத் திட்டம் எங்கிருந்து தொடங்கியது என்று பார்ப்போம். இந்தத் திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் கிடையாது. 2016-ம் ஆண்டில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை திட்ட வரைவுக்குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. அதாவது 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வியை வழங்குவது. அதாவது நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தினைக் கொண்ட ஒரு கல்வியை வழங்குவது. சரி, இது இந்தக் குழுவால் தான் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டதா என்றால், அதுவும் கிடையாது. இளம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை (Early Child Care and Education policy – ECCE) 12-10-2013 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கைப்படி 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வியினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of women and child development) கீழ் இயங்கும் என்று சொல்கிறது இந்த அரசாணை.

இந்த அரசாணை வெளியிடப்பட்டுச் சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதன் பிறகு இந்த அரசானை கிடப்பில் போடப்பட்டது. 2016-ம் ஆண்டில் இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டுதான் 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்குவது தொடர்பாகப் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாத வரைவு திட்டத்தின் பரிந்துரைகளை ஏற்கெனவே மோடி அரசு அமல்படுத்த தொடங்கி விட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பும்.

சரி.. குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது நல்ல செயல் தானே என்று கேட்கலாம். அது நல்லதா கெட்டதா என்பதைக் கூறும் அளவுக்கு நான் மருத்துவரோ மனோதத்துவ நிபுணரோ கிடையாது. ஒரு வேலை இந்தப் பரிந்துரைகளை கூறியவர்கள் அனைத்தும் அறிந்த மகான்களாக இருக்கலாம். இங்கு கூறவரும் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படப் போகிறது என்பதைப் பற்றித்தான்.

ஏற்கனவே கூறி இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மற்றுமொரு முக்கியான திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டம் (Integrated Child Development Service). கிராமப் புறங்களில் காணப்படும் அங்கன்வாடி மையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ்தான் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், மகப்பேறின் போது நடக்கும் இறப்புகளின் விகிதம் குறைத்தல் போன்றவற்றில் ஆரம்பச் சுகாதார மையத்திற்கு இணையாகப் பங்காற்றியவர்கள் இந்த அங்கன்வாடி பணியாளர்கள். அது மட்டுமல்லாது, போலியோ ஒழிப்பு, மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு என இவர்களின் பங்களிப்பு நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அல்ல இவர்கள். மற்ற அரசு அதிகாரிகளைப் போல எந்தச் சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுபவது கிடையாது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும். தமிழக்தில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் சில சலுகைகளைப் பெற்று உள்ளனர். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் இவர்களுக்கு மாத ஊதியம் என்பது கூட கிடையாது. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட பணம் வெகுமானமாக வழங்கப்படும். அதாவது இவர்கள் ஊழியர்களாக மதிக்கப்படுவது கிடையாது. தன்னார்வலர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்த அங்கன்வாடி பணியாளர்கள் மேற்சொன்ன பணிகளைத் தாண்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் என மற்ற வேலைகளையும் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

மழலையர் கல்வி அறிவிப்புக்கும் இந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரும். ஆம்.. இந்தத் திட்டம் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்படப் போகிறது. ஏற்கனவே அவர்களுடைய உழைப்புக்கான ஊதியத்தைக் கொடுக்காமல் அவர்கள் உழைப்பைச் சுரண்டி வரும் அரசு மேலும் அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கப் போகிறது.

2015-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 கோடி. அதில் 3-6 வயது உள்ள குழந்தைகள் 7.54 கோடி. அதில் 3.6 கோடி குழந்தைகள் 13.47 இலட்சம் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ளனர். அதாவது ஒரு மையத்திற்கு 27 குழந்தைகள். ஒரு அங்கன்வாடி மையம் என்று எடுத்துக் கொண்டால் அதில் இரு ஊழியர்கள் இருப்பார்கள். ஒருவர் சமையல் பணியாளர் இன்னொருவர் குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர். சமையல் பணியாளருக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. குழந்தை பராமரிப்பில் உள்ளவருக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாகப் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு அங்கன்வாடி ஊழியர் 10 முதல் 14 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறார். சமையல் பணிகளைப் புரிபவருக்கு மாதம் 7 ஆயிரம் ஊதியம் தரப்படுகிறது. இது தமிழத்தில் மட்டும்தான், உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் மாதம் 1000 முதல் 2000 ருபாய் வரை இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம். ( கோப்புப் படம்)

தமிழகத்தைப் பொறுத்த வரை மாத ஊதியம் என்று வழங்கப்பட்டாலும் அதைப் பெறுவதற்குப் பல போராட்டங்கள் செய்துள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு அங்கன்வாடி ஊழியர் பணியில் சேர்ந்தது 1998-ம் வருடம். இப்போது அவர் பெறும் ஊதியம் 12,000 அவருக்கு இன்னும் ஒரு பதவி உயர்வு கூட வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டு காலப் பணியில் அவருடைய ஊதியம் 1000-ல் இருந்து 12000 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் இருந்தே இவர்களை அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியது. எங்கள் ஊரில் அதற்கு முன்பு இருந்த ஒரு அங்கன்வாடி மையம் இப்பொழுது மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பினை செய்த அரசு அதற்குத் தேவையான கட்டிடங்களையோ, புதிய ஊழியர்களையோ பணியமர்த்தவில்லை. புதிதாகத் தொடங்கப்பட்ட மையங்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் நடந்து வருகிறது. புதிதாக ஊழியர்கள் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள மையத்தில் ஏற்கனேவே பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மையத்தினையும் சேர்த்து கவனிக்கும் படி பணிக்கப்பட்டார்கள். அப்படிக் கவனிப்பதற்கு கூடுதல் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இரண்டாவது மையத்திற்குத் தேவையான உணவுகளை முதல் மையத்தில் இருந்து தயாரித்து எடுத்துச் செல்ல வேண்டும். இன்றளவும் அனைத்து மையங்களுக்கும் ஊழியர்கள் நிரப்பப்படவில்லை. அனைத்து மையங்களும் அரசு கட்டிடத்தில் இயங்காமல், இன்றும் பல மையங்கள் தனியார் இடங்களில் வாடகைக்கு இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புதுத் திட்டமானது அமல்படுத்தப்படப்போகிறது.

புதுக்கோட்டை – கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சிதிலமடைந்துக் கிடக்கும் அங்கன்வாடியின் அவலக்காட்சி.

தமிழகத்தைப் பொறுத்த வரை அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிப்பது என்பது இது முதல் முறை அல்ல. தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இளமகளிருக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டம் அங்கன்வாடி மையங்கள் மூலமே செயல்படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் சரியான முறையில் நடத்தப்படாததற்கு முக்கியக் காரணம், இந்த ஊழியர்கள் அனைவரும் பெண்கள். இரண்டாவது இவர்கள் பெரிய அளவு கல்வித்தகுதி இல்லாதவர்கள். மேற்கண்ட காரணிகளால் இவர்களின் குரல் வெகுவாக வெளியே வருவதில்லை.

இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மழலையர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்படுமானால் இவர்களின் பணிச்சுமை வெகுவாக அதிகரிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மட்டுமல்லாது இதற்குத் தனிப் பாடத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதால், கல்வி தகுதி அற்ற ஊழியர்கள் வேலை இழக்கவும் நேரிடலாம். எந்த வித கட்டமைப்பு வசதிகளும் செய்யாமல் இந்த ஊழியர்களுக்கான சரியான ஊதியம் அளிக்காமல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது என்பது மிகப்பெரிய அநீதி ஆகும்.

இதில் இன்னும் ஒரு விசயத்தையும் கவனிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் அதை விடுத்து ஏற்கனவே உள்ள ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருகிறது இந்த அரசு. அதேவேளையில், பெரும் பண முதலைகளுக்குப் பல சலுகைகள் அளித்து இங்கே வந்து தொழில் தொடங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு என்று கேட்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறது இந்த அரசுகள்.

படிக்க:
அங்கன்வாடி
இந்தியாவிலிருந்து ரூ. 45 லட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ?

அங்கன்வாடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது சத்துப்பாப்பாதான். கிராமப்புற மாணவர்களுக்கு இது நன்றாக தெரிந்து இருக்கும். ஊருக்கு ஊர் இதன் பெயர் மாறுபடலாம். அங்கன்வாடிப் பணியாளர்கள் நடத்தும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்களில் முட்டைகோஸ் தலையுடன், முட்டை கண்ணுடன், கேரட் மூக்கையும், பீன்ஸ் காதுகளையும், பப்பாளி வயிறையும், முருங்கை கை கால்களையும் கொண்டு முகாமின் நாயகியாக அமர்ந்து இருப்பவர்தான் சத்துப்பாப்பா. இந்த சத்துப்பாப்பாவை உருவாக்கும் அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பையும் உயிரையும் சேர்த்து உறிஞ்சும் வேலையைத்தான் இந்த சதிகார அரசுகள் செய்து வருகின்றன.

– சக்திவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க