முகப்புமறுகாலனியாக்கம்கல்விமழலையர் பள்ளி நடத்து - பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

-

அரசு துவக்கப்பள்ளிகளில் மழலையர் பள்ளி வகுப்புகளை (LKG & UKG) உடனடியாக தொடங்கி நடத்த போராடுவோம்!
தனியார் பள்ளிகளின் கட்டண பகற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!!

பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

நாள் : 30.05.2014 காலை : 11 மணி

ல்லா செல்வங்களுள் உயர்ந்த செல்வம் நம் மழலைச் செல்வங்கள் தான். 3 முதல் 6 வயதுடைய மழலைகள், பச்சைக் களிமண் போன்றவர்கள். அவர்களை ‘பிள்ளையாராகவும்’ பிடிக்க முடியும் ‘குரங்குகளாகவும்’ பிடிக்க முடியும். பல்வேறு குழந்தைகள் மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள் 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு புலனறிவு கல்வி முறையில் கற்பிக்க வேண்டுமென்று கூறுகின்றனர். புத்தகமில்லாமலும், ஆடல், பாடல் மூலமாகவும் ஐம்புலன்களை பயன்படுத்த கற்றுத்தர வேண்டுமென்றும், கிறுக்குதல், தாள்களை கிழித்தல், கசக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகளையே விளையாட்டு முறையில் (Play Way Method) கற்பிக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.

குழந்தைகள் போராட்டம்

மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகத்தால் (NCERT) உருவாக்கப்பட்ட தேசிய பாடத்தொகுப்பிற்கான கட்டமைப்பு (National Curriculam Framework, 2005) இத்தகைய கல்விமுறை எந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு பெரிய அளவில் திட்டத்தை தயாரித்துள்ளது. (இன்றுவரை அது எழுத்தில் மட்டுமே உள்ளது) இதனடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சேவை (Integerated Child Development Services) என்று மத்திய அரசு திட்டமிட்டு அங்கன்வாடி, பால்வாடி நிலையங்களை ஏற்படுத்தினாலும், மழழையர்களுக்கான கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மழலைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டிய அரசு சாராயம் விற்பதில் பிசியாக இருக்க, மறுபுறமோ தனியார் பள்ளிகள் மழலையர் பள்ளிகள் நடத்துகிறோம் என்ற போர்வையில் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றன.

முதல் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளை நடத்துகின்றது. அப்படி இருக்கும்பொழுதே ‘அவற்றில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளில்லை, மாணவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை, சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை’ என்று பல காரணங்களை காட்டியே கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, மழலையர் பள்ளி வகுப்புகளை அரசு நடத்தாமல் இருப்பதும், மழலையர் பள்ளி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் சார்ந்திருக்கும் சூழலும் ஆட்டுக் கிடைக்கு ஓநாய்களை காவல் வைத்தது போலாகிறது.

பெட்ரோல், விலையை போன்று ஆண்டுக்காண்டு எகிறும் மழலையர் பள்ளி வகுப்புகளுக்கான கட்டண உயர்வினால் பெற்றோர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி அரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளை மழலையர் பள்ளி வகுப்புகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வி போதிக்கப்படுகிறது என்பது தெரியாது. 8 க்கு 10 அளவிலான சிறிய இடத்தில் கூட ‘வகுப்பறைகளை’ நடத்தும் தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் என, பிஞ்சுக் குழந்தைகளை பிணைய கைதிகளாக வைத்து பணம் பறிக்கும் வழிப்பறி கூட்டத்தில் சிக்கி பெற்றோர்கள் சின்னாபின்னமாகின்றனர்.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகம், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் கூறுவது போன்ற கல்விமுறை இங்கில்லை. மாறாக 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு செக்குமாட்டுத்தனமான, அறிவியலுக்கு முரணான கல்விமுறை இங்கு ‘கட்டாயமாக புகட்ட’ப்படுகிறது.

மனப்பாட கல்விமுறைகளை புகுத்துவது, நிறைய புத்தகங்களை கொடுத்து மழலைகளை சுமை தூக்கிகளாக மாற்றுவது போன்ற பித்தலாட்டத்தங்கள் மூலம் ’கல்வித்தந்தைகளான’ தனியார்பள்ளி கொள்ளையர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் ‘விலைக்கு’ உரிய ‘பொருளை’ வழங்குவதாக ஏமாற்றுகின்றனர்.

பெற்றோர்களும் தங்களின் மழலைச் செல்வங்கள் ஊசி போட்டு பெருக்கப்படும் ‘கறிக்கோழிகளாக’ மாற்றப்படுவது பற்றிய விபரீதம் அறியாமல், ‘என் பிள்ளை நிறைய ரைம்ஸ் சொல்கிறான், இங்கிலீசில் பேசுகிறாள்’, அந்த ’ஸ்கூலில் நிறைய புக்ஸ் கொடுக்குறாங்க’, ’தினமும் ஹோம் ஒர்க் தர்றாங்க’ என்று பூரிக்கின்றனர். தங்கள் இலாபவெறிக்கு, மழலைகளின் சிந்தனையை முடமாக்கும் இந்த அயோக்கியத்தனம் ஒழிக்கப்படவேண்டுமென்றால் ‘மழலையர் பள்ளி வகுப்புகளை’ அரசே தொடங்கி நடத்த வேண்டும்.

இவ்வாறு தொடங்கி நடத்தப்படும் ‘மழலையர் பள்ளி வகுப்புகள்’ 3 முதல் 6 வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும், தாய்மொழியிலும், அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நமது குழந்தைகள் சிந்தனை ரீதியாக முடமாவதை நிறுத்தவோ, காசில்லாதவன் குழந்தைகள் கற்க தகுதியில்லை என்ற மனுநீதியை தடுக்கவோ முடியாது.

மழலையர் பள்ளி வகுப்புகளை அரசே தொடங்கி நடத்தக்கோரி எமது அமைப்பால் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட “மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (PUSER)”, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டதில் 4 வாரங்களில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை நீங்கள் நாளேடுகளில் பார்த்திருப்பீகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மழலையர் வகுப்புகளை 25 மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்போவதாக சென்னை மாநகர மேயர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழகம் முழுவதும் இருக்கும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது?

“மழலையர் வகுப்புகளை அரசு ஆரம்ப பள்ளியில் இந்த கல்வியாண்டே தொடங்க வேண்டும்” என தமிழக அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்தி கல்வி இயக்குநரகத்தை 30.05.2014 அன்று காலை 11 மணியளவில் முற்றுகைப் போரட்டம் நடத்த உள்ளோம்.

தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதை தடுக்கவும், அரசுப் பள்ளியில் தரமான கல்வியை வழங்கு என்ற கோரிக்கையின் நீட்சியாக அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு தொடங்கக் கோரும் இந்தப் போராட்டம் தனியார்மய காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

children-protest-2

குறிப்பு :

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை (PUSER) சென்னையிலும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் ஆர்வமுள்ள பெற்றோர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் எம்மை தொடர்புகொள்ளும்படி தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.
தொடர்புக்கு – 9842812062

  1. கல்வியில் தனியார் மய கொள்ளையை எதிர்த்த தொடர் போராட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  2. கல்வியில் தனியார் மயத்தின் அப்பட்டமான கொடூரத்தை அம்பலப்படுத்துகிற போராட்டம் இது. இருந்த போதிலும் என்னைக் கேட்டால் மழலையர் பள்ளிகளும் தேவையற்றவையே. இடது கையை வைத்து வலது காதை தலை வழியாக தொடுவதுதான் ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு தகுதியே தவிர எல்கேஜி யுகேஜி அல்ல.

    • தோழர் தென்றல் ,

      நகரமயமாக்கல் மற்றும் கூட்டுக் குடும்பங்கள் காலியாகி வரும் சூழலில், குழந்தைகள் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாட இது போன்ற ஒரு சூழலை நம் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

      தற்போது உள்ள தனியார் மழலையர் கல்வித் திட்டம் தேவையில்லையெனினும், குழு விளையாட்டு , கதையாடல் ,ஆடல் , பாடல் போன்றவற்றுடன் குழந்தைகளின் தற்சார்புத் திறனை ஊக்குவிக்கும் மற்றும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக இருக்கும் வகையிலான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் .

      பெரும்பான்மையான மக்கள் பொருளாதார ரீதியில் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கும் சூழலில்,அரசு மழலைகள் கல்வித் திட்டத்தை செயல்படுத்த சொல்லிப போராடுவதன் மூலம் தான் அதை நாம் அடைய முடியும் .

      நெருக்கியடிக்கும் பொருளாதாரத்துடன் மல்லுக் கட்ட, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில், இது போன்ற சூழல் இருக்குமிடம் நோக்கி மக்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது. இதனுடன் ஆங்கில மொழிக்கல்வியும் சேர்ந்துகே கொள்ளும் போது
      நமது செல்வங்களை கவனித்து கொள்ள இது போன்ற சூழலை உருவாக்குவது நல்லது.

      • தோழர் சிவப்பு,

        //நகரமயமாக்கல் மற்றும் கூட்டுக் குடும்பங்கள் காலியாகி வரும் சூழலில், குழந்தைகள் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாட //

        சரியாகச் சொன்னீர்கள்.

        நானும் இதற்காகத்தான் எனது குழந்தையை மழழையர் பள்ளியில் சேர்த்தேன்.

        Govt should start it soon in all the schools.

      • தோழர் சிவப்பு,

        நீங்கள் சொல்வது சரியே. தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியமானது. அதே சமயம் இப்பதிவு அங்கன்வாடிகளை அரசு கைகழுவுவதையும் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான தனியார்மயத்தின் சுரண்டல் இங்கிருந்தே ஆரம்பித்துவிடுகிறது.

        85-90களில் பிறந்த எங்களைப் போன்றவர்கள் முதலில் அங்கன்வாடி, பிறகு காதைத் தொடும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று நேராக ஒன்றாம் வகுப்பு சென்றோம். மிகவும் கொடூரமான மெட்ரிகுலேசன் கல்வி முறையின் எச்சம் தான் இந்த எல்கேஜி யுகேஜி எல்லாம் என்று கருதுகிறேன்.

        விரல் சூப்புவதை மறக்கடிப்பது, சிறுநீர் கழிக்க கற்றுக் கொடுப்பது, தானகாவே உண்ண பழக்குவது, ஊட்டச் சத்துள்ள உணவு வழங்குவது, தூங்க வைப்பது, குழுவாக இயங்குவது, கற்றல், கேட்டல், புரிந்து கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை படம் மூலம் விளக்குவது என்று அங்கன்வாடிகள் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கின்றன. இன்றக்கு அங்கன்வாடிகளே இழுத்து மூடப்படுகின்றன.

        எல்கேஜி யுகேஜி என்ற பெயரில் தனியார்கள் அடிக்கிற கூத்துகளும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் அளவிடமுடியாதவை. மழலையர் பள்ளிகள் பண நோக்கிலானவை என்பதை புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

        இந்நிலையில் அரசு மழலையர் பள்ளிகள் ஏன் ஆரம்பிக்கப்பட வேண்டும் அதற்கான சூழல் என்ன என்பதைச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். மெட்ரிக்குலேசன் இழுத்துமூடப்பட்டு, சமச்சீர் கல்வி முழுவதும் நிலைநாட்டப்பட்டு, அங்கன்வாடிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆரம்பக் கல்வியுடன் இவைகள் இணைக்கப்பட வேண்டும்.

        வழக்கமான எல்கேஜி யுகேஜி போல் இல்லாமல் இருக்கிற கல்விச் சூழலிற்கும் தனியார்மயத்தின் முடிவிற்கும் இத்தகைய போராட்டங்கள் தான் முதல்படி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

        • தோழர் தென்றல்,

          நீங்கள் கூறுவதும் சரியே.

          //அங்கன்வாடி//

          ‘அரை கிளாஸ்’ என்று கூறுவார்கள். அதை மறந்தே போய்விட்டேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி.

  3. கல்வி உரிமைக்கான இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    கல்விக் கட்டணச் சுமையினால் மூச்சுத்திணறும் பெற்றோர்களே…!
    உங்களுக்குள் புலம்பிக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை.
    நமது உரிமையைப்பெறும் ஒரே வழி போராட்டம் மட்டுமே……

  4. கல்வி உரிமைக்கான இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க