நாடு தழுவிய ஆஷா பணியாளர்களின் போராட்டத்தை வலுபடுத்தும் விதமாக மே 24 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை தொடங்கினர் மேற்கு வங்க ஆஷா பணியாளர்கள். அதன் பிறகும் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை கருப்பு பேட்ஜ் அணியப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள ஆஷா பணியாளர்கள் தங்களது வழக்கமான கோரிக்கைகளுடன் மருத்துவ காப்பீடு, கோவிட்-19 வேலைகளுக்கு சிறப்பு பணப்படி,   அன்றாட கோவிட் பரிசோதனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட மருத்துவ அலுவலரிடமும், வட்டார மருத்துவ அலுவலரிடமும் கொடுத்தனர்.

படிக்க :
♦ நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்

பணியின் போது இறந்தால் மேற்கு வங்க அரசு ரூ.50,00,000 அந்த குடும்பத்திற்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், பணியில் இறந்த பெரும்பாலானவர்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படவில்லை. மேலும், பி.பி.இ கிட் மற்றும் வேறு பாதுகாப்பு சாதனமும் கொடுக்கப்படவில்லை. ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளதால் சுகாதாரம் தொடர்பான வழக்கமான வேலைகள் மூடப்பட்டு விட்டது. இதனால், பல பிரச்சினைகளை ஆஷா பணியாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

சென்ற ஆண்டு கொடுத்து வந்த கூடுதல் ரூ.1,000 பணப்படியையும் நிறுத்தி விட்டார்கள். இவர்கள் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால்  இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாகப் போராடும் இந்த சங்கம் கூறுகிறுது. இவர்கள், இயல்பிலே இந்த வேலை தன்மை காரணமாக கொரோனாவை பரப்பும் சூப்பர் ஸ்பிரட்டர் என்று சமூகத்தால் அச்சத்துடனே இவர்கள் பார்க்கப் படுகின்றனர்.

2021-2022 பட்ஜெட் ஆஷா பணியாளர்களின் நிலையை மாற்ற எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. பொது சுகாதாரத்தை வலுவாக்க வேண்டிய நேரத்தில் பொது சுகாதாரத்தை தனியாரிடம் கொடுக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று போராடும் ஆஷா பணியாளர் சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.

இப்போது நாட்டின் பல மாநிலங்களில் ஆஷா பணியாளர்களின் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறுது. கொரோனா காலத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன்பிலிருந்தே போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால், இந்த கொரோனா காலத்தில் கூட இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் போராட்டங்களை நோக்கி தள்ளுவதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு.

ஆஷா பணியாளர்களின் பணிகள்

கோப்பு படம்

கருத்தடை, கருவுற்ற பெண்களின் உடல்நலனை கண்காணிப்பது, ஆலோசனை கூறுவது, குழந்தை பேறுக்கு சுகாதார நிலையங்களுக்கு அழைத்து செல்வது, குழந்தைக்கு தடுப்பூசி போடுவது, பிறந்த குழந்தைகளின் எடை, வெப்ப நிலையை முறையாக கண்டறிவது, குழந்தை பிறந்து 15 மாதம் கண்காணிப்பது, போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி வழிமுறைகள், வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் கட்ட பொது மக்களுக்கு ஆலோசனை கூறுதல், டெங்கு விழிப்புணர்வு, மூத்த குடிமக்கள் மீது அதிக கவனம் செலுத்துவது, கிராமங்களில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பாராசிட்டமால் கொடுப்பது, வளர் இளம் பெண்களுக்கு சத்துமாத்திரை, சானிட்டரி நாப்கின் கொடுப்பது, கருவுற்ற பெண்களிடமிருந்தோ அல்லது சுகாதாரத்துறை ஊழியர்களிடமிருந்தோ இரவில் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்வது போன்றவை இவர்களுடைய வேலைகள். போக்குவரத்து வசதியற்ற தொலைதூர கிராங்கள், மலை கிராமங்கள் என பல கிலோ மீட்டர் அவர்கள் நடந்து செல்கின்றனர்.

இந்த வேலைகளோடு இவர்களுக்கு இப்போது கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கான வேலைகளும் கூடுதல் வேலையாக சேர்ந்துள்ளது. வீடு வீடாக சென்று காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறி உள்ளதா என கண்டறிய வேண்டும்.

இந்த வேலைகளுடன், இப்போது, கோவிட் நோயாளிகளை கண்டறிந்து தெரிவிப்பது, கோவிட் நோயாளிகள் யார் யாருடன் பழகினார்கள் என்று கண்டறிவது, புதிதாக வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள் மற்றும் தனிமை படுத்திக் கொண்டிருப்பவர்கள் பற்றி விவரம் சேகரித்து கொடுப்பது என ஒவ்வொரு நாளும் அறிக்கை ஆஷா பணியாளர்கள் ஒவ்வொருவரும் 500 வீடுகளுக்கு பொறுப்பு  ஏற்றுக் கொண்டு வேலை செய்வது உட்பட இப்போது சில மாநிலங்களில் 12 மணி நேரம் பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். முக கவசம் கூட இவர்கள் தங்களின் சொந்த செலவிலே வாங்கிக் கொள்கின்றனர்.

நாடு முழுதும் இவ்வாறு பத்து இலட்சம் ஆஷா பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் 3,000 பேர் உள்ளனர். இவர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

அதிக வேலை, குறைவான சம்பளம் என்பதுதான் ஆஷா பணியாளர்களின் நிலை. இவர்களுக்கு ஊக்கத் தொகை அடிப்படையில் கூலி கொடுக்கப் படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஆஷா பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப் படுகிறார்கள். அங்கு வேலை செய்வதை பொறுத்து ஊக்கத் தொகை மாதம் ரூ.2,000 முதல் 3,000 வரை கிடைக்கும். அதுவன்றி ரூ.4000 – 5000 சம்பளம்.  ஆனால், “தமிழகத்திலோ சம்பளம் வெறும் ரூ.2,000 தான். அதுவின்றி ஊக்கத் தொகையாக ரூ.1,000 பெறுவதே பெறும் சிரமம்.

இதனால் இடையிலேயே வேலையை விட்டு பலர் சென்று விடுகின்றனர்” என்கிறார், சி.ஐ.டி.யூ தருமபுரி மாவட்ட தலைவர், தோழர் நாகராஜ். இங்கே மருத்துவக் கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளதால் ஆஷா ஊழியர்கள் பணிக்கு அமர்த்திக் கொள்வது குறைவு. பூகோள ரீதியாக மலை கிராமங்கள், பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது, கல்வி அறிவு போன்றவற்றைப் பொருத்து ஆஷா திட்டத்திற்கான பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளது. தமிழகத்தில் ஆஷா பணியாளர்களுக்கான மேற்பார்வையாளர் உட்பட எண்ணிக்கை வெறும் 3,000 பேர் தான்.

கோப்பு படம்

இங்கும் இந்த அற்ப கூலிக்கு  8 மணி நேரம் இப்போது வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.  ஆஷா பணியாளர்களுக்கான சங்கம் தருமபுரி மாவட்டத்தில் தான் சி.ஜ.டி.யூ சங்கமாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. கோவை போன்ற ஒரு சில மாவட்டங்களில் ஏ.ஐ.டி.யூ.சி-யின் இணைப்பு சங்கமாக கட்டப்பட்டுள்ளது.

தேசிய கிராமபுற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2005-ல் தொடங்கப்பட்ட முக்கியமான திட்டம்தான் ஆஷா திட்டம். மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை அடிமட்ட மக்கள் வரை கொண்டு சேர்ப்பது இவர்களின் பணி. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் வாரத்தில் 2-3 நாட்கள் சில மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையிலிருந்து இன்று 12 மணி வரை வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், கூலி மட்டும் உயரவே இல்லை. குறைவான கூலி, கூலி கொடுக்காமல் இருப்பது, தாமதமாக கூலி கொடுப்பது இவர்களின் நீண்ட நாள் பிரச்சனையாக உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், ஆஷா பணியாளர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அவர்களுடைய வேலையை நிரந்தரமாக்க வேண்டும். ஊக்கத் தொகைப் போதுமானதாக இல்லை. மாநில அரசு ரூ.15,000 முதல் 20,000 வரை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். கோவிட் பணிகளுக்கு சிறப்புப் பணப்படி வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.

படிக்க :
♦ கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு

ஒரு புறம் மோடி தலைமையிலான பா.ஜ.க சுகாதாரப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் மலர் தூவி அவர்களின் பணியைப் போற்றுவதாக நடிக்கிறது. மறுபுறம் அவர்களின் வாழ்வாதார உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது.  உரிமைகளுக்காகப் போராடினால் கண்டும் காணாமல் அலட்சியப் படுத்துகிறது.

எனவே, பாசிஸ்டுகளின்  வாய்ஜாலங்களைப் புறந்தள்ளிவிட்டு போராட்டம் மட்டுமே நாட்டை தூய்மைப் படுத்தும் என்ற அரசியல் உணர்வோடு தனியார்மயக் கொள்கைக்கு எதிராகவும், பொது சுகாதார கட்டமைப்பை உருவாக்கவும் போராடுவோம்.


முத்துகுமார்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க