ஆட்டோமொபைல் ஆலைத் தொழிலாளர்களது போராட்டம் முன்னேறுகிறது !
வெற்றிபெற வாழ்த்துகிறோம் !

சென்னை மற்றும் புறநகர்ப்புறங்களில் இயங்கி வருகின்ற ஹூண்டாய், நிசான் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும், அவற்றுக்கு எஞ்சின் உள்ளிட்ட உதிரிப் பாகங்களை தயாரித்து தருகின்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் 24.5.2021 அன்று துவங்கிய முழுஅடைப்பின் போது கூட இடைவிடாமல் இயங்கி வந்தன.

படிக்க :
♦ பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

இந்த ஆலைகளில் கொரோனா பெருந்தொற்று தினந்தோறும் பல தொழிலாளர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஆலையை சிறிது காலத்துக்கு மூட வேண்டும்; பெருந்தொற்று இழப்புகளை தடுக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும், இழப்புக்குள்ளான தொழிலாளர்களது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஹூண்டாய், நிசான், கப்பாராவ், டியூப் புராடக்ட்ஸ், எம்.ஆர்.எப், அப்பல்லோ டயர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பெரிய ஆலைகளில்  பணியாற்றும் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் முன்வைத்துப் போராடின.

இந்த போராட்டங்களை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகங்களும் கண்டு கொள்ளவில்லை. 24.5.2021 முதல் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகள் என்கிற முகமூடியில் கார் கம்பெனிகள் கஜானாவை நிரப்பி வந்ததை தொழிலாளர்கள் சகித்துக் கொள்ளவில்லை. நிசான் தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்புக்காக பணிக்கு வர முடியாது என அறிவித்தனர்.

ஹூண்டாய் ஆலையில் ஏழாவது உயிரிழப்பு வெளிச்சத்துக்கு வந்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தை துவங்கினர். இதற்கு முன்பு ஹூண்டாய் ஆலையில் நடந்த பல போராட்டங்கள் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டன. அடக்கப்பட்டன. அது போன்ற துரோகமும், அடக்குமுறையும் இன்று எடுபடவில்லை. மாறாக, தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என இறுமாந்து இருந்த ஹூண்டாய் நிர்வாகம் பெருத்த அடி வாங்கியது.

இந்த ஒரு வாரம் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. வேலை துவங்குவதற்கு முன்னதாக தங்களது வேலை புறக்கணிப்பு முடிவை அறிவித்த நிசான் தொழிலாளர்களும், போராட்டத்தில் உறுதியாக நின்று பகாசுர நிறுவனத்தை அசைத்த ஹூண்டாய் தொழிலாளர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

கொரோனா பெருந்தொற்று என்கிற பேரழிவு காலத்தில், இந்தியா முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகள் 12 மணிநேர வேலையை திணித்து வருகின்றனர். முதல் அலை காலகட்டத்திலேயே இதற்கான தயாரிப்புகளை செய்து முடித்துவிட்டு, தற்போது கொத்துக் கொத்தான சாவுகளுக்கிடையில் 12 மணிநேர வேலையை நிர்ப்பந்திக்கின்றனர். இந்த நிலையில்,  சென்னை ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா (முருகப்பா குழுமம்) இயங்கி வருகின்ற டி.பி.ஐ தொழிலாளர் சங்கம் வேறுமாதிரியான கோரிக்கையை முன்வைத்தது.

8 மணிநேர வேலையின் போது கொத்துக் கொத்தான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதால் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையில் 2 மணிநேர இடைவெளி விட்டு, ஷிப்ட் நேரத்தை 6 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் கோரிக்கை.

தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது வளாகத்திலேயே சிறப்பு முகாம் வைத்து பராமரிக்கின்ற போதிலும், ஆலை வளாகமே தொற்று பரவல் மையமாக இருப்பதால் வேலைநேரத்தை குறைத்து, ஷிப்ட்டுகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்தி தொற்றுப் பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதே டி.பி.ஐ தொழிலாளர் சங்கத்தின் அறிவியல்பூர்வ அணுகுமுறையாக இருந்தது. கடந்த வாரத்தில் ஹூண்டாய் போலவே ஆலை மூடப்பட்டு தொற்றுப் பரவலின் ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் செயலாளருமான தோழர் ம.சரவணன் இந்த சங்கத்தின் செயலாளராக 5–வது முறையாக தேர்வு செய்யப்பட்டு, பு.ஜ.தொ.மு அரசியலை தாங்கி தொழிலாளர்களது போராட்டத்தை முன்னெடுத்தார்.

படிக்க :
♦ பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !

இது போன்ற வேலைநேர குறைப்பு இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் அபூர்வமானது. வர்க்க அரசியலை தாங்கி நிற்கும் தலைமையால் தான் இது சாத்தியமாகியுள்ளது. முன்னுதாரணமிக்க இந்த வெற்றி, ஏனைய தொழிற்சங்களுக்கு வழிகாட்டும் என்பது திண்ணம். நம்பிக்கையூட்டும் மாற்றத்தை நிகழ்த்திய (டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா) டி.பி.ஐ.தொழிலாளர் சங்கத்துக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 80563 86294

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க