நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

மதுரையில் அரங்கக் கூட்டம்

தோழர்கள் வரைந்த ஓவியங்கள், காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தக்கூடிய காட்சிப்படங்கள், ஆசான்களின் மேற்கோள்கள், தோழர் லெனின் ஸ்டாலின் உருவப்படங்கள் வைத்து அரங்கம் தயாரானது.

காலை 11:00 மணிக்கு துவங்கிய அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மதுரை மண்டல இணைச் செயலாளர், தோழர் சிவகாமு அவர்கள் தலைமை தாங்கினார்.

ரசிய சோசலிச புரட்சி நாளை நினைவு கூர்ந்து, நமது நாட்டில் நிலவக் கூடிய காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளின் நடவடிக்கையும், உலக அளவில் நிலவக்கூடிய பொருளாதார நெருக்கடிகளையும் எப்படி முதலாளித்துவம் தோற்றுப்போய் அழுகி நாறுகிறது என்பதை அம்பலப்படுத்தி சோசலிச சமுதாயத்தை நோக்கி முன்னேறுவதே மாற்று என பேசி முடித்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் சங்கர் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பேசினார். அதில் வேலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 2018-2020 வரை மட்டும் 9,170 பேர்; கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் 16,019 பேர், பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி போன்றவற்றால் சிறுதொழில்கள் அழிந்து ஏராளமானோர் வேலையை இழந்துள்ளனர்.

இதுபோக அசோக் லேலண்ட், பார்லே ஜி போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலையைவிட்டு துரத்தப்பட்டுள்ளனர். அதானி போன்றவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்து உலகப் பணக்காரர்களாக மாற்றியிருக்கும் அரசு, கார்ப்பரேட்டுக்கானது என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்கத் அவர்கள், “இளைய சமுதாயம் கல்வியின் பக்கம் செல்கிறதா? போதையின் பக்கம் செல்கிறதா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, தமிழகம் கேரளாவில் அதிகமான போதைப் பொருட்கள் விற்கப்படுவதை அம்பலப்படுத்தினார். தமிழகத்தில்தான் 18 வயது இளைஞன் போதையில் 11 வயது சிறுவனை அடித்தே கொன்றுள்ளான். 128 பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. பல்வேறு சமூக சீரழிவுகளையும் அதற்கு காரணமான போதையையும் அம்பலப்படுத்தினார். மேலும் அதிகாரபோதை இந்த நாட்டை பிடித்து ஆட்டுவதைப் பற்றியும் விரிவாகப் பேசி இந்த நாட்டிற்கு புரட்சிகள் தேவைப்படுகிறது, அதை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி பேசினார்.

அடுத்ததாக பேசிய பெரியவர் பூபாலன் அவர்கள், அறிவியலின் தேவை பற்றியும் அது முதலில் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது பற்றியும் கேள்வி பதில் உடன் உரையாடினார். இப்படிப்பட்ட அறிவியல் பூர்வமான கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டுவதன் மூலமாகத்தான் காவிக் கும்பலின் பொய்களையும் புரட்டுகளையும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்பார்கள். இதுவே மார்க்சியம் கற்றுக் கொள்வதற்கும் உலகை மாற்றுவதற்கும் அவசியமானது, இந்த அறிவியல் பூர்வமான பார்வையை நாம் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என உற்சாகமூட்டும் விதத்தில் பேசி முடித்தார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார் அவர்கள், “ஆரிய பார்ப்பன புரட்டுகளை அம்பலப்படுத்தி பேசினார். உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை அம்பலப்படுத்தி பேசினார். மேலும், பார்ப்பனியம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது ஒவ்வொரு சாதிக்கு கீழும் இன்னொரு சாதி என்ற படிநிலை அமைப்பை கொண்டது. அது எதார்த்தத்தில் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது என்பதை பல்வேறு நடைமுறை சம்பவங்களுடன் எடுத்துக்காட்டினார். அனைத்து விதமான சமத்துவத்திற்கு எதிரான பொய்களையும் புரட்டுகளையும் கொண்டது பார்ப்பனியம், சாதி அமைப்பு அதை ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேசி முடித்தார்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்தானம் அவர்கள், “அன்றைக்கு பாசிசத்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த ரசிய சோசலிசப் புரட்சியைபோல், ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க நாம் இந்த அரங்க கூட்டத்தில் உறுதி ஏற்போம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு மாநில மக்களும் அங்குபோய் விவசாயிகளை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மோடி அவர்கள் விவசாயிகளை ஒருமுறைக்கூட சந்திக்கவில்லை. அதனால்தான் சொல்கிறோம் இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பாசிச மோடியை பணிய வைத்த விவசாயிகளின் போராட்டத்தைப்போல் ஓர் போராட்டத்தை கட்டியமைப்போம் என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக இளம் தோழர் ஜான்சி அவர்கள், அதிக அளவு காடுகள் அழிக்கப்படுகிறது; மணல் உருவாக லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆனால் அதை கொள்ளையடித்து கொண்டு போகிறார்கள். தொழிற்சாலை கழிவுகள் கடல்களில் கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மக்களின் வாழும் காலத்தை குறைத்து நோயாளிகளாக மாற்றுகிறது; இதற்கு இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பின் லாபவெறிதான் முக்கியமான காரணம் என பேசி முடித்தார்.

தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றி தோழர் கதிர் பேசினார். அவர் உரையில், “சித்தர்கள், வைகுந்தர், வள்ளலார், பெரியார் என பலரும் தொடர்ச்சியாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபை, அவர்கள் செய்து காட்டியதை தொகுத்து பேசினார். காவி பாசிசக் கும்பலுக்கு எதிராக  உழைக்கும் மக்களிடம் இதைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் பேசி முடித்தார்.

தோழர் சே, ரசிய புரட்சியையும் அதன் சாதனைகளைப் பற்றியும் இன்று நாம் செய்ய வேண்டியதை பற்றியும் மிகவும் உற்சாகமாக கவிதை வாசித்தார்.

அடுத்ததாக தோழர் மருது, சினிமா போதை நுகர்வு கலாச்சாரம் பற்றி பேசினார். ஒரு ஹீரோ பண்ணக்கூடிய சாகசத்தை நாமும் பண்ண தோன்றுகிறது. சரக்கு அடிக்கிறார்கள் ஓப்பன் தி டாஸ்மார்க் என பாட்டு போடுகிறார்கள் இப்படி வெளிப்படையாகவே போதையையும் நுகர்வு கலாச்சாரத்தையும் திணிக்கிறார்கள். போதையும் நுகர்வு கலாச்சாரமும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கிறது. இதை தீர்ப்பதற்கு வழி சோசலிசம் தான் என பேசி முடித்தார்.

அடுத்ததாக பேசிய போடி, மக்கள் அதிகாரம் தோழர் ஏ.டி.கணேசன் அவர்கள் ரசிய புரட்சி ஏன் நடந்தது? தோழர் லெனின் ஸ்டாலின் வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்பதையும் தன் சொந்த வாழ்வில் சிபிஐ,சிபிஎம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து செயல்பட்டு  பிறகு வெளியேவந்து அமைப்பில் சேர்ந்து செயல்பட்ட அனுபவத்தையும் பேசினார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் அவர்கள், “ஒரு லட்சம் மனுஸ்மிருதியை விநியோகித்ததை பற்றியும் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரானது என்பதை அம்பலப்படுத்தினார். 10% உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு நீதிபதிகளுக்கும் பொருந்துமா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். ஏனென்றால் அது அறிவு சார்ந்தவர்கள் இருக்கும் இடமாம் அப்படி என்றால் நமக்கெல்லாம் அறிவு இல்லையா? என்பதை கேள்வியாக எழுப்பினார். 1925-ல் தோன்றிய கம்யூனிச இயக்கம் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து இருக்க வேண்டும், என்று கம்யூனிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். அந்த காலகட்டங்களில் அசுரகானம் தான் சேரிகளில் தேசிய கீதமாக இருந்தது. மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் துணை நிற்போம் என உறுதி கூறினார்.

அடுத்ததாக தோழர் செந்தில், அன்ன வயல் நாவல் குறித்து பேசும்போது இந்த புத்தகம் பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட வேண்டியது அன்றைய ரசியாவில் ஒரு கிராமத்தில் கூட்டுப் பண்ணை விவசாயத்தை எப்படி நிறுவினார்கள். அதன் மூலமாக பாசிஸ்டுகளுக்கு எதிராக எப்படி போராடினார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

ரசிய புரட்சி முடிந்த பிறகு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுத்தது அடுத்த கட்டமாக கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியது. அங்கு டிராக்டர்கள் கொண்டு வந்தது பற்றி எல்லாம் நேரடி காட்சிபோல் இந்த புத்தகத்தில் காண்பித்துள்ளார்கள்.

சோசலிச ரசியாவில் என்ன மாற்றத்தை நிகழ்த்தினார்கள் என கேட்பவர்கள், இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். பனிக்காலத்தில் அறுவடை செய்ய முடியாது என்பதை உணர்ந்து தீவிரமாக வேலைசெய்து கொண்டிருப்பார்கள், அதைத் தொடர்ந்து யுத்தம் வந்துவிடும் மக்களிடம்தான் ஆயுதங்கள் இருக்கும்; மக்கள் அனைவரும் போர்க்களத்திற்கு செல்வார்கள். யாரும் பின்வாங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என பேசி பல்வேறு ரஷ்ய நாவல்களையும் படிக்க வேண்டும் என்ற கூறினார்.

அடுத்ததாக தோழர் ரகு, பகத்சிங்கின் மொத்த வாழ்வையும் தொகுத்து பேசினார். இன்றைய ஏகாதிபத்திய சூழலில் நாமும் பகத்சிங்-ஆக மாற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக தோழர் ராம், பிரியாணி என்ற சிறுகதையை அனைவரும் கவனிக்கும் விதத்தில் சிறப்பாக பேசினார். இது உழைக்கும் மக்களின் கடின வாழ்வையும் இழப்புகளையும் அழுத்தமாக பதிவு செய்யும் விதமாக இருந்தது.

அடுத்ததாக பேசிய தோழர் அன்பு, கல்வியில் திணிக்கப்படும் காவிமயம் ஒட்டுமொத்த மாணவர்களையும் சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கான ஏற்பாடு. அதனால்தான் சாவர்க்கர் புல் புல் பறவை மீது பறந்ததாக பாடத்திட்டத்தில் கொண்டு வருகிறார்கள். பகத்சிங் பெரியார் போன்றவர்களின் பாடங்களை கர்நாடக பாடப்புத்தகத்திலிருந்து நீக்குகிறார்கள். இதை முறியடிக்க நாமும் மக்களை திரட்ட வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

அடுத்ததாக எரிகாற்றுக் குழாய் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் கதிரேசன் செல்வராஜ் பேசும்போது, எரிவாயு குழாய் பதிப்பை தங்கள் கிராமத்தில் எப்படி திட்டமிட்டு கொண்டு வந்தார்கள் விவசாய நிலங்களை அழித்தார்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் அதிகாரம் தோழர்களுடன் எப்படி பயணித்தோம் என்ற அனுபவத்தை பேசினார். மக்களிடம் அனைத்து உலக அரசியல் விஷயங்களையும் நாம் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் அதை கிராமங்களிலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். நம்மிடம் கருத்து ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் களத்தில் முதலில் இறங்கி செயல்பட வேண்டும், அங்கு பேசிக் கொள்வோம் என ஒரு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்புக்கு முன்மாதிரியாக பேசி முடித்தார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி பேசும்போது உலகப் பொருளாதார நெருக்கடியை பற்றியும் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய விளைவுகளைப் பற்றியும், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிய வேண்டும். அதன் இடத்தில் சோசலிசத்தை நிறுவ வேண்டும் அதற்கு புரட்சி செய்ய வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம், மாநில இணைச் செயலாளர் தோழர்.குருசாமி அவர்கள் பேசும்போது, ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் மீண்டும் முதலாளித்துவமாக மாறியபோது ஏகாதிபத்தியங்கள் நாடுபிடிக்கும் கொள்கையில் மீண்டும் இறங்கியது. அன்றைக்கு ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளை சவக்குழிக்கு அனுப்பியது சோசலிச முகாம்தான். இன்று முதலாளித்துவத்தை ஜெயிக்க முடியாது என்பதை இப்போது ஓடிப்போனவர்கள் சொல்கிறார்கள். இதனை நம் தோழர்கள் சொல்வது கிடையாது. இதுபோல தோழர் லெனினுடன் கூட கடைசி வரை காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். ரஷ்யா சீனாவைப்போல் இங்கு புரட்சி நடக்கவில்லை என பேசினார், புரட்சிகர கட்சிகளும் தலைவர்களும் அங்கு இருந்ததுபோல் இங்கு இல்லை என்பதுதான் எதார்த்தம். அப்படி என்றால் நாம் போல்ஷ்விக் கட்சியைப் போன்று முன்மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும். புரட்சி நடக்க வேண்டும் என்றால் சிறந்த கம்யூனிஸ்டுகள் தேவை புரட்சியாளனுக்கு ஓய்வு இல்லை சிந்தனை என்பது இளமையானது. உலகம் முழுவதிலும் ஸ்டாலினை சர்வாதிகாரி என்றார்கள்; ஸ்டாலின் மீது கோபம் கொண்டார்கள் ஆனால் உழைக்கும் மக்கள் என்றும் ஸ்டாலின் மீது கோபம் கொண்டதில்லை. ஏனென்றால் அவர்தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியபோது, அதையெல்லாம் இல்லாமல் சோசலிச ரஷ்யா கடந்தது சென்றது. அப்படி இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை. அதற்கு வெளியில் நாம் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்க வேண்டும் அதை நம்மால் தான் செய்ய முடியும் என்பதை உறுதியாக பேசினார்.

பெண் தோழர்களின் குழு பாடல்களும், இளம் தோழர்களின் பாடல்களும் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜ் மிகவும் எழுச்சிகரமாக ஆசான்களின் மேற்கோள்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.

பேச்சு, கவிதை, பாடல், கதை, ஓவியம், அனுபவங்கள் என பல்வேறு வகைகளிலும் தோழர்கள் உற்சாகத்துடனும் முன்னேற்றியுடனும் கலந்து கொண்டது அனைவரையும் உற்சாகப்படுத்தி நிகழ்ச்சி முடிவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.

***

சென்னையில் அரங்கக் கூட்டம்!

ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக பட்டாபிராம் பகுதியில் ரசிய புரட்சி நாள் விழா நடைபெற்றது.

விழா பறை இசையுடன் துவங்கியது, விழாவிற்கு பு.ஜ.தொ.மு-வின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் தலைமையேற்று நடத்தினார். பு.மா.இ.மு-வின் மாநில செயலாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் தனது உரையில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு போராட்ட சூழல்கள் அதன் காரணம் என்ன என்பதையும் விளக்கி பேசினார்.

குழந்தைகள் கவிதை வாசிப்பு, ஓவியம் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துரைத்து பேசியது சிறப்பாக அமைந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் தோழர் புவனேஸ்வரன் நன்றி உரையுடன் கூட்டம் முடிவுற்றது.

This slideshow requires JavaScript.

தகவல்: பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க