16.04.2021

பத்திரிகைச் செய்தி

பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது

ன்பார்ந்த தொழிலாள தோழர்களே, வணக்கம் !

1990-களின் துவக்கத்தில் தொழிலாளர் பிரச்சாரக்குழு என்கிற பெயரில் தமிழகத்தின் சில தொழில் நகரங்களில் இயங்கி வந்த அமைப்பு 1998-ல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற பெயரில் பதிவு எண் 43/ டி.வி ஆர் என்கிற பதிவு எண்ணுடன் துவங்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த ஐய்யப்பன் குரூப் எம்ப்ளாயீஸ் யூனியன் என்கிற ஒரே ஒரு இணைப்புச் சங்கத்துடன் சென்னை பாடியில் ஒரு சின்னஞ்சிறு ஓலைக் குடிசையில் பு.ஜ.தொ.மு இயங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் திருவள்ளூர் அருகில் காக்களூர் தொழிற்பேட்டை, பெரியபாளையம், செங்குன்றம் பகுதிகளில் சங்கங்கள் கட்டப்பட்டன. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இதே சமயத்தில் கோவை, ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), திருச்சி என விரிவடைந்தோம். புதுவையிலும் கால் பதித்தோம்.

இதுவரை பல்வேறு மாவட்ட அளவில் தனித்தனியாக இயங்கி வந்த பு.ஜ.தொ.மு-வை 2014-ல் ஒருங்கிணைத்து மாநில நிர்வாகக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பாரத மிகுமின் நிறுவனம், தேசிய பஞ்சாலைக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கமாஸ் வெக்ட்ரா ( ஓசூர் ) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், முருகப்பா, டி.வி.எஸ். எஸ்.ஆர்.எப் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றில் பு.ஜ.தொ.மு தொழிலாளர்களை அணிதிரட்டியது.

கட்டுமானத் தொழிலாளர்கள், தரைக்கடை வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்கள் என பல தரப்பு தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு அமைப்பாக்க முன்னுரிமை கொடுத்தது. தொழிற்சங்கமே துவங்க முடியாத நிலையில் இருந்த ஐ.டி ஊழியர்கள் முதன் முதலாக பு.ஜ.தொ.மு தலைமையில் தொழிற்சங்கம் அமைத்தனர்.

படிக்க :
♦ வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!
மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !

இத்தகைய வரலாறு கொண்ட பு.ஜ.தொ.மு-வின் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த சுப.தங்கராசு அவர்களது  பாட்டாளி வர்க்க விரோத செயல்பாடு குறித்த புகார் பு.ஜ.தொ.மு தோழர்கள் மத்தியில் இடியாக இறங்கியது. ஜனவரி 2020-ல் குற்றப் பத்திரிகை கொடுக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்ய முடியாத நிலையில், ஜூலை 2020 இறுதியில் நக்கீரன் இதழ் தங்கராசு மீதான குற்றச்சாட்டினை அம்பலப்படுத்தியது.

இதையடுத்து தங்கராசு இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், 27.9.2020 அன்று நடந்த மாநில செயற்குழுவில் இறுதி நீக்கம் செய்யப்பட்டார். இயற்கை நீதிக் கோட்பாட்டின்படி மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மேல் முறையீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது. மேல்முறையீட்டுக் குழுவின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அறிவித்த தங்கராசு, தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

தங்கராசுவை இறுதி நீக்கம் செய்த அதே மாநில செயற்குழு, அவரை கண்காணிக்கத் தவறிய குற்றத்துக்காக அன்றைய மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 6 பேரையும் நீக்கியது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு இவர்கள் எவரும் கீழ்நிலைப் பொறுப்பு வரை எந்த பதவிக்கும் போட்டியிட தடைவிதித்தது.

எனினும், டிசம்பர் 2020 இறுதிக்குள் மாவட்ட மற்றும் மாநிலக்குழு தேர்தல்களை நடத்தி, புதிய மாநில நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும் வரை காபந்து நிர்வாகக் குழுவாக இருப்பது, இடைப்பட்ட காலத்தில் எழக்கூடிய அரசியல், அமைப்புத்துறை நிகழ்வுகள் மற்றும் மாநில தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவுக்கு உதவுவது என்கிற பொறுப்பைக் கொண்ட 3 பேர் குழுவும் அமைக்கப்பட்டது.

ஆனால், மேற்படி மூவர் குழு ஒப்புக் கொண்டவாறு தேர்தல் விதிகளை வகுத்து தருவதில் காலதாமதம் ஆனதால், 20.12.2020 அன்று மீண்டும் மாநில செ.கு நடந்தது. மூவர் குழு முன்வைத்த தேர்தல் விதிகளை மாநில செ.கு சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொண்டது. ஜனவரி 2021 இறுதிக்குள் மாநிலக்குழு தேர்தல் நடத்தி முடிப்பது எனவும், அதற்கு இசைவாக ஜனவரி 15-க்குள் மாவட்டக்குழு தேர்தல்கள் நடத்தி முடிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மாநில தேர்தலுக்கு முன்பாக (அதாவது செ.கு நடந்த 20.12.2020 தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள்) பதிவு செய்யப்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி ஓசூரில் இயங்கி வருகின்ற அமைப்புக்குழு நடைமுறையில் செயல்படுகிறதா என்பதை காபந்து நிர்வாகக் குழுவைச் சேர்ந்த எஸ்.கே என்பவர் நேரில் சென்று அறிக்கை தரவும் முடிவெடுக்கப்பட்டது.

எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட புறநிலை நெருக்கடி காரணமாக பிப்ரவரி இறுதியில் தான் மாவட்டக்குழு தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனாலும், ஓசூர் பகுதிக்கு, ஜனவரி 20-க்குள் நேரில் சென்று சோதிக்க வேண்டிய எஸ்.கே மார்ச் முதல் வாரம் வரை ஓசூருக்கு செல்வது குறித்து திட்டமிட்டுக் கொள்ளவில்லை.

இதனையே காரணமாக வைத்து அந்த மாவட்டக்குழு மாநில தேர்தல்களில் பங்கேற்கவிடாமல் தடுக்கப்பட்டது. மாநில தேர்தல் நடத்தும் பொருட்டு மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதி வீதம் அங்கம் வகிக்க வேண்டிய தேர்தல் குழுவிலிருந்து அந்த மாவட்டக்குழு திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.

அதேபோல, திருத்தப்பட்ட தேர்தல் விதிகள் மாவட்ட குழுக்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே கோவை மற்றும் புதுவையில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட விநோதமும் அரங்கேறியது. புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் சங்கம் என்கிற துணை அமைப்பின் பொதுச் செயலாளருக்கு தெரிவிக்காமலேயே தேர்தல் நடத்தப்பட்டு புதிய ‘நிர்வாகி’கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட பிறகு மாநில தேர்தலை நடத்துவதற்காக திருவள்ளுர்-கிழக்கு, திருவள்ளூர்-மேற்கு மற்றும் புதுவை ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒரு பிரதிநிதி கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தித்து பேசிய முதல் கூட்டத்திலேயே தேர்தலை நடத்தும் முறை குறித்து முரண்பாடு ஏற்பட்டது.

நமக்கு நாமே வகுத்துக் கொண்ட தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தலை நடத்த திருவள்ளூர்-மேற்கு பிரதிநிதி வலியுறுத்தியதை எஞ்சிய இருவரும் நிராகரித்தனர். தேர்தலை நடத்தும் குழுவில் இருக்கும் பிரதிநிதிகள் பு.ஜ.தொ.மு-வின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்தானா என்று நிரூபிக்கும் சான்று காட்டினால் தான் அவர் தேர்தல் குழுவில் அங்கம் வகிக்க தகுதியானவரா என்பதை முடிவு செய்ய முடியும் என அவ்விருவரும் வலியுறுத்தினர்.

ஒரு சங்கத்தின் தேர்தலை நடத்தும் குழுவின் உறுப்பினர் அந்த சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் என்பதை நிரூபிப்பது சரியான கோரிக்கை தானே என்கிற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். இந்த கேள்வியை நம் மனதில் எழுப்புவதில் தான் அவர்களது முக்கிய உத்தி அடங்கி இருக்கிறது.

ஏற்கனவே, ஓசூரை ஒதுக்கியாகிவிட்டது. வாகன ஓட்டுநர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு தெரிவிக்காமலேயே பொதுக்குழு நடத்தி புதிய நிர்வாகக் குழுவையும் ‘தேர்வு’ செய்துவிட்டனர். எஞ்சி இருக்கும் திருவள்ளூர்-மேற்கு மாவட்டத்தை ஒதுக்கிவிட்டால், மொத்த பு.ஜ.தொ.மு-வும் நம் கைக்கு வந்து விடும் என மனப்பால் குடித்தவர்கள் கையாண்ட உத்திதான் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் என்கிற நிரூபணத்தை காட்ட வேண்டும் என்கிற வாதம்.

இது திட்டமிட்ட, உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பதற்கு பு..ஜ.தொ.மு-வின் கட்டமைப்பை புரிந்து கொள்வவர்கள் இந்த தேர்தல் சதியை புரிந்து கொள்ள முடியும். பு.ஜ.தொ.மு நான்கு வகையானவர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அமைப்பான பு.ஜ.தொ.மு-வில் நேரடி உறுப்பினராக இருப்பவர்கள்.

ஒரே ஆலை அல்லது ஒரே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக சேர்ந்தால் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆலை அல்லது பகுதிக் கிளை.

படிக்க :
♦ அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

♦ ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

ஒரு ஆலையில் பொதுத்தொழிலாளர் சங்கமாக பதிவு செய்யப்பட்டு, பு.ஜ.தொ.மு-வின் இணைப்பு சங்கமாக இயங்கும் சங்கம்.இவர்கள் ஆண்டுதோறும் இணைப்புக்கட்டணம் செலுத்தி தங்கள் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

லேலண்ட் போன்ற பெரிய ஆலைகளில் அந்த ஆலைக்கான பதிவு செய்யப்பட்ட சங்கம் இயங்கும் நிலையில் நம்மை ஆதரித்து உருவாக்கப்படும் அணி. இந்த அணியினர் நமது தலைமையை சங்க அதிகாரத்தில் கொண்டு வந்து, நமது அமைப்பை பிரபலப்படுத்துபவர்கள்.

தொழிற்சங்க அனுபவம், நேர்மை ஆகிய அம்சங்களுடன் இயங்கக்கூடிய தனிநபர்கள். இவர்கள் அறிவுஜீவிகளாகவும் இருக்கலாம். எந்த ஆலை அல்லது தொழிலில் இல்லாத தனிநபராகவும் இருக்கலாம். இத்தகையவர்களை அடையாளம் கண்டு, அவர்களது விருப்பத்தின் பேரில் கவுரவ உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள். இவர்களது எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. ஆனால், நிர்வாகக்குழுவில் பாதி எண்ணிக்கையில் மட்டுமே பதவி வகிக்க முடியும்.

இந்த 5 வகையினரில் முதல் மற்றும் இரண்டாவது வகையினர் ஆண்டுதோறும் சந்தா புதுப்பிக்க வேண்டும். மூன்றாவது வகையினர் இணைப்புக்கட்டணம் செலுத்தி இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

நான்காவது வகையினர் நமது தலைமை மற்றும் அமைப்பை அங்கீகரித்து உயர்த்திப்பிடிப்பவர்கள். இவர்களது எண்ணிக்கை நூறாகவும் இருக்கலாம். ஆயிரமாகவும் இருக்கலாம். இவர்கள் அனைவரும் சந்தா பு.ஜ.தொ.மு-வுக்கு சந்தா செலுத்தாமலேயே அதன் செயல்பாட்டாளர்களாக இருப்பர். கவுரவ உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமலேயே மாநில நிர்வாகக்குழு வரை பொறுப்பு வகிக்க முடியும்.

1, 3 மற்றும் 5 ஆகிய மூன்று வகையினரும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் ஆண்டுதோறும் அரசுக்கு சமர்ப்பிக்கும் “ஈ” படிவத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவர்.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் அடுத்தடுத்து நடந்தவற்றை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேலே சொன்ன தேர்தல் குழுவில் இடம் பெற்றிருந்த திருவள்ளூர்- மேற்கு பிரதிநிதியானவர் பதிவு எண்: 43/ டி.வி.ஆர் கொண்ட சென்னை மண்டல பு.ஜ.தொ.மு-வின் துணைத்தலைவராக நீண்ட நாட்களாக செயல்பட்டு வருபவர். இவர் ஒரு ஆலைத் தொழிலாளி. கவுரவ உறுப்பினர். இவர் 43/டி.வி.ஆர் துணைத்தலைவர் என்பது குறித்த விபரங்கள் 2020 வரை அரசுக்கு சமர்ப்பித்த “ஈ” படிவத்திலேயே பதியப்பட்டு அரசு ஆவணமாக ஏற்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை முதல் உச்சநீதிமன்றம் வரை அங்கீகரிக்கின்ற “ஈ” படிவத்தை மேற்சொன்ன தேர்தல் குழு உறுப்பினர்கள் ( திருவள்ளூர் கிழக்கு மற்றும் புதுவை பிரதிநிதிகள் ) ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மறுப்பின் உள்நோக்கம் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஓசூரைப் போலவே திருவள்ளூர்-மேற்கு பகுதியையும் ஒதுக்கி வைப்பதுதான்.

இதில் இன்னொரு விநோதமும் இருக்கிறது. சட்டப்படியான அமைப்பான  பதிவு எண்: 43/டி.வி.ஆர் கொண்ட  பு.ஜ.தொ.மு நிர்வாகக்குழு எந்த அதிகாரமும் இல்லாததாக, டம்மியாக இருக்க வேண்டுமாம். இதன் பொதுச்செயலாளர் (தோழர் ஆ.கா.சிவா) வெறும் கைநாட்டாக இருக்க வேண்டுமாம். இந்த பொதுச் செயலாளர் மீதுதான் தொழிற்சங்க போராட்டங்களை வழிநடத்தியதற்காக பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

தமிழகத்திலேயே தொழிற்சங்க நடவடிக்கைக்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே தொழிற்சங்க தலைவர் 43/டி.வி.ஆர் பொதுச்செயலாளர் தான். இவரும் கூட டம்மியாக இருக்க வேண்டும் என்கிறார், நேற்று பெய்த மழையில் முளைத்த திருவள்ளூர்-கிழக்கு பிரதிநிதி. இதில் இன்னொரு அவலம் இருக்கிறது. இவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகின்ற புதிய ஜனநாயக எஸ்.ஆர்.எப் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாக இருக்கிறார். இந்த பதவி காரணமாகத்தான் தனது சங்கம் பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கம் என்று மார்தட்டிக் கொள்கிறார். பு.ஜ.தொ.மு-வின் திருவள்ளூர்-கிழக்கு நிர்வாகியாகவும் இருக்கிறார்.

ஆனால், இவரது சகபாடியான 43/டி.வி.ஆர் சங்கத்தின் பொருளாளர் தயாரித்த  2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான  “ஈ” படிவத்தில் இவரது சங்கம் இணைப்புச்சங்கம் என்பதற்கான பதிவுகளே இல்லை. இவர் தான் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் துணைத்தலைவரிடம் அங்கீகரிக்கப்பட்ட சான்றினை கேட்கிறார். (43/டி.வி.ஆர் பொருளாளர் செய்த ஆவண பித்தலாடங்களை தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் இடத்தில் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளோம்.)

ஒரு சங்கத்தின் உறுப்பினர் மற்றும் நிர்வாகி என்பதற்கான சான்று “ஈ” படிவத்துக்கு மேலான ஒன்று இல்லை என்பதை அறியாதவராக இருக்கிறார். ஒருவரை அல்லது ஒரு அமைப்பை ஒழித்துக்கட்ட முனைபவர்களுக்கு அறிவார்ந்த, நடைமுறை சார்ந்த ஆவணங்கள் ஒரு பொருட்டல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். தொழிற்சங்க சட்டத்தின்படி கவுரவ உறுப்பினர் என்கிற பிரிவினர் இருக்கின்றனர் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு பு.ஜ.தொ.மு என்கிற அமைப்பை கைப்பற்றுவதில் வெறியாக இருப்பதை தேர்தலை நடத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டவர்களது சமீபத்திய அறிவிப்புகள் இருந்தன. ஒப்புக்கொண்ட தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர்.

இந்த சூழலில் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட தேர்தல் விதிமுறைகளின்படி தேர்தல் நடத்துவதா, தொழிற்சங்க சட்டத்தின்படி தேர்தல் நடத்துவதா என திருவள்ளூர் மேற்கு பிரதிநிதி கேட்டதற்கு ஆம்/இல்லை என பதில் சொல்லாமல், திருவள்ளூர்-மேற்கு பிரதிநிதி செல்லத்தகாதவர் என்பதை ஆவணப்படுத்துவது ஒன்றே அவர்களது நோக்கமாக இருக்கிறது என்பதை மாநிலம் முழுவதும் உள்ள பு.ஜ.தொ.மு மண்டல, மாவட்டக் குழுக்கள் மற்றும் முன்னணியாளர்கள் உணர்ந்துள்ள சூழலில் இத்தகையோரிடம் எந்த நன்னெறியையும் காண முடியாது என கருத்து தெரிவித்தனர்.

பதிவு செய்யப்பட்ட அமைப்பான 43/டி.வி.ஆர் அமைப்புக்கு அதன் பொதுச்செயலாளர் தான் தேர்தல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தான் சட்டப்படியான, முறையான வேலை முறை என்பதை பதிவு செய்யப்பட்ட அமைப்பான 43/டி.வி.ஆர் பொதுச்செயலாளரும் உணர்ந்தார்.

இவ்வாறு தொழிற்சங்க சட்டப்படியான தேர்தல் நடத்துவது எனில், அந்த பதிவு செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு நடத்தப்பட வேண்டும். பொதுக்குழுவில், 2020-ஆம் ஆண்டுக்கான “ஈ” படிவத்தில் உள்ள 815 உறுப்பினர்களை (புதியவர்கள், புதுப்பித்தவர்கள்) கூட்டி வைத்து பொதுக்குழு நடத்தி அதில் புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்தாக வேண்டும். “ஈ”  படிவத்தில் அரசுக்கு தெரிவித்திருக்கும் 20.4.2021-க்குள் பொதுக்குழு மற்றும் தேர்தலை நடத்த வேண்டும். இதே போல ஏனைய பதிவு செய்யப்பட்ட அமைப்புகளும் நடத்த வேண்டும்.

ஆனால், கொரோனா தொற்றை முன்னிட்டு திணிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு காரணமாக ஒரு அரங்கில் 200 பேர் கொண்ட கூட்டம் மட்டுமே நடத்த முடியும். அதே நேரத்தில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான “ ஈ ” படிவம் தயாரித்த 43/டி.வி.ஆர் அமைப்பின் பொருளாளர் ரசீது புத்தகங்கள் தன் வசம் இருந்ததை கேடாகப் பயன்படுத்தி, தமது தரப்புக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார் என்பதும், உறுப்பினர் புதுப்பித்தலும் செய்துள்ளார் எனவும் தெரிகிறது.

இது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அமைப்பின் தூண்களாக இருந்த இணைப்புச்சங்கங்கள் குறித்த விபரங்களையும் ஈ படிவத்தில் பதிவு செய்யவில்லை. இதன் மூலம் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுக்கும், பதிவு செய்யப்பட்ட அமைப்பான 43/டி.வி.ஆர் அமைப்புக்கும் தங்களுக்கும் இடையிலான சட்டப்பூர்வ உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. 43/டி.வி.ஆர் குறித்த பல ஆவணங்களை சட்டவிரோதமாக தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளனர்.

படிக்க :
♦ ரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் !

♦ கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

இந்த சூழலில், “ஈ” படிவத்தில் காணப்படும் தவறுகளை சரி செய்யவும்,ஊரடங்கு காலத்தில் 815 உறுப்பினர்களை கூட்டி வைத்து (“ஈ” படிவம் சரி செய்யப்பட்டால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும்) பொதுக்குழு நடத்த சாத்தியம் இல்லை என்பதால், பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகளுக்கான  தேர்தல் ஆகியவற்றை 20.4.2021-க்கு பதிலாக 22.4.2022 அன்று நடத்த அனுமதி கோரியும் தொழிலாளர் இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பில் உள்ள தொழிற்தாவாக்கள், வழக்குகளுக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பு.ஜ.தொ.மு அமைப்பை மாநிலம் முழுவதும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக வழிநடத்த தற்காலிகமாக 7 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை உருவாக்கி செயல்படுவது எனவும், ஒத்த கருத்துடைய மண்டல, மாவட்டக் குழுக்கள் மற்றும் முன்னணியாளர்கள்  அமைத்திருக்கும் இந்த ஒருங்கிணைப்புக்குழு, புதிய மாநில நிர்வாகக் குழுவை தேர்வு செய்கின்ற காலகட்டம் வரை செயல்படுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

மாநிலம் முழுவதும் உள்ள பு.ஜ.தொ.மு செயல்வீரர்கள், தோழமை அமைப்பினர்,  ஜனநாயக சக்திகள், ஏனைய மத்திய, மாநில சங்கங்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவளிக்கவும், ஆலோசனை வழங்கவும் கோருகிறோம்.

ஏப்ரல் 22, ஆசான் லெனின் பிறந்தநாளில் பு.ஜ.தொ.மு-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிவிக்கப்பட உள்ளது. அதன் மூலமும், சுற்றறிக்கைகள் மூலமும் அடுத்தடுத்த வேலைகள் குறித்த வழிகாட்டுதல் தெரிவிக்கப்படும்.

ஒருங்கிணைப்புக் குழுவுக்காக,
தோழர் ஏ. உத்திராபதி (திருச்சி),
ஒருங்கிணைப்பாளர்,
செல்பேசி எண்: 8056386294

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் :
தோழர் சுந்தரராஜன் (திருச்சி)
தோழர்கள் ஆ.கா.சிவா, ம.சரவணன், ராஜதுரை
(சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்)
தோழர்கள் பரசுராமன் மற்றும் சங்கர்
(சேலம், தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க