மிழக மின்சார வாரியம் தற்போது ரூ.1,60,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மின்வாரிய அதிகாரிகளும் அதிமுக அமைச்சர்களும் இணைந்து ஊழல் செய்ததே இதற்குக் காரணம் என பொதுவில் சொல்லப்படுகிறது. ஆனால் எப்படி சட்டப்பூர்வமாகவே இத்தகைய  ஊழல்கள் நடக்கின்றன என்பது குறித்து பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் 2 கோடியே 96 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அதில் தமிழக மின் வாரியமே சுயமாக தயாரிக்கும் மின்சாரம் 30 சதவீதம் மட்டுமே, மீதி பயன்பாட்டிற்கு தேவையாக மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்தும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்துமே பெறப்படுகிறது.

படிக்க :
♦ தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே 40 சதவீதம் மின்சாரம் மிக அதிக விலை கொடுத்து வாங்குவதே மின் வாரியம் கடன் நெருக்கடியில் சிக்கியதற்கு காரணமாகும்.

தமிழக மின் வாரியம் சுயசார்பாக தயாரிக்கும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.3.50 விலைக்கு மக்கள் பயன்பாட்டிற்கு தரமுடியும். ஆனால் தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ17.78-ல் இருந்து ரூ.21.80 வரையிலும் பணம் செலுத்தி கொள்முதல் செய்து வருகிறது மின்வாரியம்.

தமிழக மின்வாரியம் கடந்த 1957-ஆம் ஆண்டு ஓர் சேவை நிறுவனமாக அரசால் துவங்கப்பட்டது. புதிய தாராளாதவாத கொள்கைகள் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட பிறகு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதும், மின்வாரியம் ஒரு சேவை துறை என்பதில் இருந்து வியாபார துறையாக மாற்றப்பட்டது.

இதனால், தமிழக மின்வாரியம் சுயமாக தயாரிக்கும் மின்சாரத்தின் அளவைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு, தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அவை போடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மின்சாரத்தை கொள்முதல் செய்வதை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஊக்குவித்து வருகிறது.

90-களின் இறுதியிலும் 2001-2002 ஆகிய ஆண்டுகளிலும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியுடன் துவங்கப்பட்டன. அதாவது மின்சார வாரியமே தனியாருக்கு பணம் கொடுத்து, நிலம் கொடுத்து நிறுவனங்களை உருவாக்கி உற்பத்தியை நடத்த வைத்தது. அந்த வகையில்தான் சென்னை பேசன்பிரிட்ஜில் உள்ள ஜி.எம்.ஆர், பிள்ளை பெருமாள் நல்லூர், சாமல்பட்டி பவர், மதுரை பவர், நெய்வேலி பவர் போன்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இவை மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழக மின்வாரியத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

மேலும், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்களையும் வாரியம் தான் ஏற்பாடு செய்து தரவேண்டும். மின் உற்பத்தியே செய்யவில்லை என்றாலும் கூட இடுபொருட்களுக்கானப் பணத்தைக் கட்டாயம் மின்வாரியம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தந்துவிட வேண்டுமாம். அதாவது ஒரு தனியார் கடையைத் திறக்க ஊரில் உள்ளவர்கள் பணமும் கொடுத்து, அவர் கடையில் விற்பனை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு நிகராக  தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இப்படி ஒப்பந்தத்தைப்போட்டுக் கொண்டன இந்தத் தனியார் நிறுவனங்கள்.

உதாரணமாக தற்போது மின்சார வாரியத்திற்குக் கடனாக, ரூ. 1,60,000 கோடி கடன்சுமை உள்ள நிலையிலும், மின்சாரமே உற்பத்தி செய்துதராத ஒரு தனியார் நிறுவனத்திற்கு மூலதனக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2340 கோடி வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் தமிழ்நாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி.

மின்சாரம் கொள்முதல் செய்யும் விலையும் தமிழக மின் வாரியத்தால் தீர்மானிக்க முடியாது. மின் வாரிய ஆணையங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஆரம்பித்த 2001-2002-ம் ஆண்டுகளில் மட்டும் ரூ.4,851.9 கோடி கடனில் சிக்கியது தமிழக மின்வாரியம். அது தற்போது ரூ. 1,60,000 கோடி கடனாக வளர்ந்திருக்கிறது.

இப்படி மின்சாரம் கொள்முதலில் ஊழல் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம்,  வெளிநாடுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், மின்சாரம் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என தமிழக மின்வாரியத்தில் கடன் நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டேபோக முடியும்.

மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பிற்குக் காரணம், விவசாயிகளுக்கு தரும் இலவச மின்சாரம் தான் என்றும் மக்களுக்கு குறைவான சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதுதான் காரணம் என்றும் கூறும் அரசு, அதிகமான விலையில் கொள்முதல் செய்வதுதான் இந்தக் கடனுக்குக் காரணம் என்று பேசுவதில்லை.

படிக்க :
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
♦ அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்

இப்படி மலைப்போல் குவியும் மின்வாரியத்தின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உற்பத்தி செய்யாமலேயே மூலதனக் கட்டணம் என்ற பெயரில் மின்சார வாரியத்திடமிருந்து ஒட்டச் சுரண்டிய தனியார் நிறுவனங்களிடமிருந்து வட்டியோடு அந்தக் கட்டணத் தொகை திருப்பி வசூலிக்கப்பட வேண்டும். அனைத்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களும் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.

நாட்டின் இறையாண்மையை ஒழித்துக்கட்டும் தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை, அரசியல் சாசன விரோதமானவையாக அறிவித்து அவற்றை துடைத்தெரியாமல் இத்தகைய கடன் சுமைகளில் இருந்து விடிவு கிடையாது.


சந்துரு
நன்றி : தினகரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க