Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா "கமிசன்" மண்டி!

தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!

-

தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!

ம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.

பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.

அதானி ஒப்பந்தம்
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.

பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.

“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.

அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.

கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.

அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்  ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.

தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.

திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.

எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.

2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.

நாகல்சாமி
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.

“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.”  என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.

அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.

நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான்  செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?

– இளங்கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_______________________________

  1. “அம்மா” என்ற வார்த்தையை இங்கு வலிய திணிக்க வேண்டிய காரணம் ஏதும் இருப்பதாக நான் உணரவில்லை . “ஜெயா கமிசன் மண்டி” என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. எதற்காக ஜெயாவிற்கு அம்மா பட்டம் ? இவருக்கு அம்மா பட்டம் என்றால் மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மாவை என்னவென்று அழைப்பதாம் ? அதிமுக அடிமைகள் வேண்டுமானால் அவரை அம்மாவென்று அழைத்துக்கொள்ளட்டும். நாம் அவரை அம்மா வென்று அழைப்பதில் எந்த முறைமையும் இல்லை ,அவமானம் மட்டுமே மிஞசுகின்றது .

    • சரியாகச் சொன்னீர்கள்…அம்மா என்று நான் ஏன் ஜெயாவை அழைக்க வேண்டும்?

  2. பாவெலின் வருத்தம் நியாயம்தான். ஆனால் அது ஆளும் அதிமுக அரசின் திணிப்பின் தொடர்ச்சி என்பதால் அனுமதிக்கலாம்.ஏனெனில் அரசாங்கம் அம்மா உணவகம்,அம்மா மருந்தகம்,அம்மா உப்பு,அம்மா தண்ணீர் என்கிற போது மதுவிலக்கு கோருபவர்கள் அம்மா டாஸ்மாக்,அம்மா குடிப்பகம் என்று அதனை தொடர்வதில்லையா அது போலத்தான் இதுவும்.

    • தவறு ராஜன் . அம்மா என்று அதிமுக அடிமைகள் மட்டும் தான் அழைகின்ரார்கல் .ஆனால் சாதாரண எளிய மக்கள் அரசியல்வாதிகளை கருணாநிதி ,ஜெயலலிதா ,எம் ஜி ஆர் என்று பெயரிட்டு தான் அழைகின்ரார்கல். மக்களிடம் இருந்து நாமும் கற்போம்

  3. அந்த தொடர்ச்சி ஒரு நையாண்டி, அதில் ஒரு விமர்சனம் தொக்கியிருக்கிறது.எல்லாவற்றையும் அம்மா பெயரில் வைத்திருப்பவர்கள் ஏன் டாஸ்மாக்,பார் போன்றவற்றுக்கும் அந்த பெயரை வைத்துக் கொள்ளலாமே என்கிற பரிந்துரையை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.அம்மா கமிசன் மண்டி என்று அவர்கள் மொழியையே தொடர்வது ஒரு பொருத்தம் கருதி செய்யப்படும் நையாண்டி அவ்வளவு தான்.வினவில் வேறெங்கும் அவ்வாறு அவர் அழைக்கப்படுவதில்லையே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க