த்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆற்றல்துறை அமைச்சகம் வெகுநாட்களாகக் கோரி வந்தது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் ஆற்றல்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள், நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், அரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்விரு வாரியங்களும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.

இந்த நான்கு அனல் மின் நிலையங்களின் 7 மையங்களின் கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கடந்த மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு அறிக்கையின் படி, இந்த 7 மையங்களில் அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போதைய அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதே சமயத்தில், இதர 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3  -குள்தான் இருந்துள்ளது.

படிக்க:
சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !
♦ நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச் சூழலியல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காற்று மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிறுவனங்களால் எளிமையாக எட்டிவிட முடியும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

அதே போல 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .

ஆனால் ஆற்றல்துறை அமைச்சகம்  2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.

அதானி நிறுவனம் தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளாகவே நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும்போது, இவ்வளவு அவசரமாக கற்று மாசுபாட்டு வரம்பை உயர்த்துவது ஏன் ? நம்புங்கள் ! ஆற்றல்துறை அமைச்சகத்துக்கும் அதானி குழுமத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டம் குறித்து, தி வயர் இணையதளம் சேகரித்த தகவல்கள் மற்றும் கூட்டக் குறிப்புகளின் படி, இக்கூட்டத்தில் ஆற்றல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய அனல் மின் கழகம் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின்  எதிர்ப்பையும் மீறி, இந்த மாசுக்கட்டுப்பாட்டு அளவை தளர்த்த முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் இறுதி ஒப்புதல் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் மற்றும் ஆற்றல் அமைச்சகத்தின் செயலர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

படிக்க:
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரிலேயே சூழலியல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான வரம்புகளை கடந்த 2015-ம் ஆண்டில் நிர்ணயித்தது.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டே துறைசார் வல்லுனர்கள் மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதானிகளின் மூலதனத்தின் இலாபவெறி இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ‘ஹைகோர்ட்டாக’ மதித்து உதைத்துத் தள்ளி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறை வாழ்வதற்கு ஒரு சுடுகாட்டை தயார் செய்து கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க