Saturday, July 13, 2024
முகப்புசெய்திஇந்தியாசுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் - கண்டுகொள்ளாத அரசு !

சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !

2050-ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

-

லகு தழுவிய அளவில் புவி வெப்பமடைதல் மற்றும் சூழலியல் பாதிப்புகள் குறித்த “அக்கறையை” வளர்ந்த நாடுகளே வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது, நிலைக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (Sustainable energy source), மாற்று மின்னுற்பத்திக்கான திட்டங்கள் என புதிய வழிகளைத் தேடி ஏராளமாக முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள், குறிப்பாக வல்லரசு நாடுகள், கடந்த பல பத்தாண்டுகளாக சூழலியலுக்கு ஏற்படுத்திய கேடுகளைச் சீர் செய்ய வேண்டிய சுமையை இப்போது இந்தியா போன்ற ஏழை வளரும் நாடுகளின் மேல் சுமத்துகின்றன.

அந்த வகையில் இந்தியாவின் அனல் மின்நிலையங்கள் மாசுக்கட்டுப்பாட்டு முறைகளை நிறுவ வேண்டும் என வல்லரசு நாடுகள் பல ஆண்டுகளாக நிர்பந்தித்து வருகின்றன. இந்த அணல் மின் நிலையங்கள், நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்டு இயங்குவதோடு இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் பிரதான பங்காற்றுகின்றன. நிலைத்த வளர்ச்சிக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஆற்றல், சூழலியல், குடிநீர் ஆகியவற்றுக்கான கவுன்சில் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் படி இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களில் மாசுக்கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை நிறுவ சுமார் 86,135 கோடி செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது.

coalகுவார்ட்ஸ் இணையதளம் இந்த கணக்கீடு மிகக் குறைந்தபட்சமானது எனவும், அதுவும் மாசுக்கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை நிறுவ விதிக்கப்பட்ட கெடு (டிசம்பர் – 7, 2017) முடிந்து ஏறத்தாழ இரண்டாண்டுகள் கழித்து வெளியிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்கள் அனைத்திலுமே மேற்படி மாசுக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் இன்னமும் நிறுவப்படவில்லை என அப்பத்திரிகை தெரிவிக்கிறது. அதேபோல் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சூழலியல் மாற்றங்களுக்கான அமைச்சகம் 2015-ல் அறிவித்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தால் ஏறத்தாழ 76,000 அகால மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறது கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று.

மின்னுற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி, திட திரவ மாசுப்பொருட்கள் (particulate matter (PM4)), சல்பர் டை ஆக்சைடு (SO2), நைட்ரஜன் ஆக்சைடு (NOx), பாதரசம் உள்ளிட்டவைகளை உமிழ்கிறது. இவற்றைக் கட்டுக்குள் வைப்பதற்கான தொழில்நுட்ப தடுப்புக் கருவிகளை நிறுவுவதற்கு விதிக்கப்பட்ட கெடுவைத்தான் இந்தியா மீறியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவில்லை என்றால் 2050ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

படிக்க:
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!
♦ வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

அதேபோல் 2019 – 2030-ம் ஆண்டுக்குள் கருவிலேயே குழந்தைகள் மரணம் 3.2 லட்சமாகவும், தீவிர சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 கோடியாகவும் இருக்கும் என்கிறது அதே ஆய்வின் முடிவுகள்.

நிலக்கரி மாசுபாட்டிற்கு அனல் மின்நிலையங்களே 80 சதவீத காரணமாக உள்ளது என்கிறது குவார்ட்ஸ் பத்திரிகையின் செய்திக் குறிப்பு. இந்தியாவில் இன்றளவில் சுமார் 441 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இதில் 22 அனல் மின்நிலையங்கள் அரசுக்குச் சொந்தமான தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனின் கீழ் வருகின்றன. செயல்பாட்டில் உள்ள 441 அனல் மின் நிலையங்களில் ஒரே ஒரு நிலையத்தில் மட்டும் சல்பர் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட அனல் மின்நிலையத்தில் 90 சதவீத சல்பர் உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், ஏற்கெனவே அனல்மின் உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களுக்காக அவை முதலீடு செய்வது எதார்த்தத்தில் சாத்தியமில்லை என்கின்றனர். ஒருவேளை அவ்வாறு முதலீடு செய்யப்படும் பட்சத்தில் அதை நுகர்வோரின் மேல் சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

2-coal-plant-1எனினும், சூழலியல் கேடுகளை அக்கறையோடு கையாள வேண்டும் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை கறாராக நிறுவுவது, அதற்கான முதலீடுகளை வசதிபடைத்த நுகர்வோரிடம் விதிக்கப்படும் கட்டணங்களில் இருந்து வசூலித்து ஈடுகட்டுவது என்கிற தீர்வை ஆய்வறிக்கைகள் முன்வைக்கின்றன.

ஆனால், இதே அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு அம்சம் நமது கவனத்திற்குரியது. அதாவது ஆகப் பெரும்பான்மையான அனல் மின்நிலையங்கள் இத்துறையில் போதிய அனுபவமோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத தனியார் முதலாளிகளால் நடத்தப்படுபவை என்கிறது அறிக்கை. சிக்கலின் முடிச்சு இங்கேதான் இருக்கிறது.

மின்சாரம் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அது எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் கடமை அரசுக்கே உண்டு. இதில் குறுகிய லாபவெறிக் கண்ணோட்டம் கொண்ட முதலாளிகள் ஈடுபடும்போது மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள் “வேண்டாத முதலீடுகளாக” கருதப்படுவதில் எந்த வியப்பும் இல்லை. எப்போது மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தனது கடமை என்பதை அரசு உணர்ந்து செயல்படுகின்றதோ அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

அதே போல், பழைய முறையிலான மின்சார உற்பத்தி சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்க்க, மாற்று முறைகளைக் கண்டறிவது, அதற்கான முதலீடுகளை அரசே முன்நின்று செய்வது, மக்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்யும் கடமையை அரசு தன் கையில் எடுப்பது என்கிற திசையில்தான் தீர்வு உள்ளது. ஆனால், இந்தியாவின் ஆளும் வர்க்க கட்சிகளோ அந்த திசைக்கு முதுகைத்தான் காட்டி நிற்கின்றன.


சாக்கியன்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க