சியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான சீனா நீண்ட காலமாக காற்று மாசுபாட்டிற்காக பெயர் பெற்றது. ஆனால் சமீப காலமாக, அதன் அண்டை நாடான இந்தியா காற்று மாசுபாட்டுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறது. தெற்காசிய நாடான இந்தியாவில்தான் உலகிலேயே மிகவும் மாசடைந்த 10 நகரங்கள் உள்ளன.

உலகிலேயே மோசமான காற்றை சுவாசிப்பதற்குக் கொடுக்கப்படும் தனிநபர் மற்றும் பொருளாதார விலை குறித்து 29 வயதான குசும் தோமர் (Kusum Tomar) நன்கறிந்துள்ளார். காற்று மாசுபாடே தனது நுரையீரல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணி என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒருபோதும் சிகரெட்டை புகைத்ததில்லை. சிகிச்சை செலவிற்காக அவரது கணவர் நிலத்தை விற்றுவிட்டார். உறவினர்களிடமிருந்து கடன் பெற்றுள்ளனர். அவர்களது சேமிப்பும் மெல்ல மெல்ல கரைந்துவிட்டது.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியே இந்த அரசு எண்ணுகிறது. ஆனால் மக்கள் நோய்களால் துன்பப்படுகின்றனர், சாகின்றனர்” என்கிறார் தோமர். மேலும், “உள்நாட்டில் சொந்த மக்கள் காற்று மாசுபாட்டினால் பொருளாதார சிக்கல்களில் உழலும்போது எப்படி நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய முடியும்?” என்று கேட்கிறார்.

காற்று மாசுபாட்டைக் குறைக்க ஒரு ஒருங்கிணைந்த தேசிய அணுகுமுறைக்காக நீண்ட காலமாக இந்தியா போராடி வருகிறது. அதே அணுகுமுறை சீனாவிற்கு காற்று மாசுபாட்டை குறைக்க உதவியிருக்கிறது. காற்று மாசுபாட்டை குறைக்க புதிய திட்டங்களை அறிவித்துள்ள மோடி அரசாங்கம் அத்திட்டங்கள் மாசுபாட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறது. ஆனால் நடைபெற்றுவரும் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மாசு முதல் இலட்சக்கணக்கான மகிழுந்துகள் வெளிப்படுத்தும் புகை வரை இந்தியாவின் பரவலான வளர்ச்சியின் விளைவுகள், இவ்வளர்ச்சியின் நல்ல அம்சங்களை ஒன்றுமில்லாமலாக்குகின்றன.

படிக்க :
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

வரும் வாரங்களில் வட இந்தியா மீது கவிய இருக்கும் பனிக்காலமானது மோடி அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை சோதிக்கக் காத்திருக்கின்றது. இந்த பயிர்ப்பருவத்தில் எரிக்கப்படும் பயிர்கள் மற்றும் தீபாவளிப் பண்டிகையின் போது கொளுத்தப்படும் கோடிக்கணக்கான பட்டாசுகள் காற்று மாசுபாட்டின் அளவை அபாயகரமான அளவிற்கு உயர்த்தும்.

கடுமையான மாசுப்பாட்டு வழிமுறைகளை வெற்றிகரமாக அமல்படுத்தியிருந்தால் இந்திய அரசும் அதன் மக்களும் இன்னும் செழிப்பாக இருந்திருக்கலாம். மருத்துவச்செலவுகள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பின் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 விழுக்காடு அளவிற்கு இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி கணக்கிட்டுருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியான 2.6 ட்ரிலியன் டாலரில் (190 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்), சுமார் 221 பில்லியன் டாலர் (16 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) வரை ஆண்டுதோறும் இந்தியா இழக்கிறது.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் கூட 12.2 டிரில்லியன் டாலருடன் (894 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) அதை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரிய பொருளாதாரமாக சீனா உள்ளது. அடிப்படை உற்பத்தியை பெருக்க இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில் அது காற்று மாசுபாட்டை மிகவும் மோசமடைய செய்து விடும் என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இராகபேந்திரா ஜா.

மேலும், “ஒரு மாசற்ற பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றம் சுமூகமாக இருக்கும் எனக் கருதுவது மிகவும் ஒரு எளிமையான புரிதல்” என்கிறார்.

தூய்மையான காற்று இல்லாமல் மூச்சு தினறுகிறது இந்தியா.

புது டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 1988-ம் ஆண்டில் ஒரு மார்பு அறுவை சிகிச்சை நிபுணராக தனது பணியை அரவிந்த் குமார் தொடங்கிய போது அவரிடம் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்தவர்களில் 90 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் உடைய நடுத்தர வயது ஆண்களாகவே இருந்தனர். ஆனால் தற்போது வருபவர்களின், 60 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என்றும் அவர்களில் பாதி பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். காற்றில் பரவும் நுண்துகள்களால் ஏற்படும் மூச்சுத்திணறல், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 2015-ம் ஆண்டில் 11 இலட்சம் இந்தியர்கள் மரணமடைந்ததாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கூறுகிறது.

இதற்கிடையில், இரண்டு பத்தாண்டுகால பொருளாதார விரிவாக்கத்தினால் சீனப் பொருளாதாரம் புனரமைக்கப்பட்டு தற்போது குறைந்த மாசுப்பாடு ஏற்படுத்தும் சேவைகள் மற்றும் பொருட்கள் பயன்பாட்டிற்கு சீனா மாறி வருகிறது. அதன் நகரங்கள் இன்னும் புகை மூட்டமாக இருந்தாலும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றன.

படிக்க :
முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

புது டெல்லியில், 2017-ம் ஆண்டிலேயே, மிகவும் அபாயகரமான காற்று நுண்துகளான PM2.5-ன் அளவு 200-யைத் தாண்டிவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 66-ஆக இருந்த “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கை 2017 –ம் ஆண்டில் 84-ஆக அதிகரித்து விட்டது என்று காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் “ஏர்விசுவல்” நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன. இதே காலகட்டத்தில் பீஜிங்கின் “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கையை 43-லிருந்து 20 நாட்களாக சீனா குறைந்திருக்கிறது.

“சீனாவைப் போல இங்கே மக்கள் தொடர்ச்சியாக காற்று மாசுபாட்டை குறைக்க கோரிக்கை விடுக்காமல் இருப்பது ஒரு பெரிய பிரச்சினை” என்கிறார் சிகாகோ பல்கலைகழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் கிரீன்ஸ்டோன். “ஏனெனில் மக்களது வாழ்நாளைக் குறைப்பதிலும் அவர்களை நோயில் தள்ளுவதிலும் காற்று மாசுபாடு எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்து முழுவதுமாக இங்கே கண்டு கொள்ளப்படவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

காற்று மாசுபாடு தொடர்பான மரணங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் [இந்திய நிலைமைகளுக்கு] பொருத்தமாக இல்லை. மேலும் உள்நாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலேயே காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியிருக்கிறது.

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார். டெல்லியில் நுண்துகள் (PM2.5) காற்று மாசுபாடு அளவு செப்டம்பர் மாதத்தில் தாங்கள் கணக்கிட்ட படி குறைந்துள்ளதை மேற்கோளிட்டு அவர் காட்டினார். காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிக அளவு எட்டும் முன்னரே எச்சரிக்கை செய்து தடுப்பதற்கான கட்டமைப்பு வசதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் சாலை துப்புரவு இயந்திரங்களை அதிகளவு பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன்

அரசு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன் கூறினார். “அனைத்தும் இப்போது சரியாக இருக்கிறது. நாம் பொறுமையாக வேலை செய்யலாம் என நாங்கள் கூறவில்லை. நாங்கள் ஒருகணம் கூட ஓய்வெடுக்கவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் சூரிய எரிசக்தியையும் ஊக்கப்படுத்தியிருக்கிறது, மாசு கட்டுப்பாட்டு தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது மற்றும் விறகடுப்பு பயன்பாட்டை குறைக்க இலட்சக்கணக்கான சமையல் எரிவாயு அடுப்புகளை கொடுத்தது. விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை கொளுத்துவதையும் அதிகாரிகள் தடுத்திருக்கின்றனர். ஆனால் அதிகாரபூர்வமாக தொடங்கப்படவிருக்கும் ஒரு தேசிய திட்டத்தின் உறுதியான இலக்குகளுக்காக சூழலியலாளர்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.

“இந்த கட்டத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான இலக்குகள்தான் அவசியமானவை” என்று காற்று மாசுபாடு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆலோசனைகள் வழங்கிவரும் புது டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த அனுமிதா ராய் சௌத்ரி கூறினார். மேலும் தெளிவான இணக்கம் மிகுந்த உத்தி ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

படிக்க :
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

இங்கே மேலும் கூடுதலான சவால் ஒன்று இருக்கிறது. இந்தியாவின் குழப்பம்மிக்க மக்களாட்சியில், ஏழ்மையும் வேலையின்மையும் பெரும்பாலும் பெரும் பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று போட்டி போடும் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கங்களுக்கு காற்று மாசுபாட்டை கூட்டாக குறைப்பதில் சில சமயங்களில் இலாபம் எதுவும் இல்லை.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் இராகவ் சதா கூறுகிறார். ”தற்காலிகமாக கட்டுமானப் பணிகளை நிறுத்துவது போன்ற அளவு மட்டுமே எங்களால் தடுக்க இயலும். மைய அரசின் தலைமையில் பல்வேறு மாநிலங்களுக்கிடையிலான இணக்கம்தான் தற்போது தேவைப்படுகிறது” என்று கூறும் அவர் மோடியின் நிர்வாகத்துடன் கடுமையாக வேறுபடுவதாக கூறினார்.

நாடே ஸ்வாக ஆகும் போது மோடிக்கு யோகா.

இதற்கு மாறாக சீனாவைப் பொருத்தமட்டில் அதன் பிரதமர் லி கெச்சியாங் (Li Keqiang) காற்று மாசுபாட்டிற்கு எதிராக தேசிய அளவிலான போரை அறிவித்துள்ளார். காற்று தரத்தின் இலக்குகளை அடையாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று சீன அரசாங்கம் கூறிவிட்டது. மேலும் மாசுபாட்டை உருவாக்கும் தொழிற்துறைகளிலிருந்து விலகவும் முயன்று வருகிறது. அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகள் பல இலட்சக்கணக்கான குடும்பங்களையும் தொழில்களையும் நிலக்கரியிலிருந்து தூய்மையான இயற்கை எரிவாயுவிற்கு மாறச்செய்துள்ளது.

காற்று நுண்துகள் மாசுபாட்டின் (PM2.5) அளவு பீஜிங் மற்றும் தியான்ஜினில் 33 விழுக்காடும் சுற்றியுள்ள நகரங்களில் 26 விழுக்காடும் சென்ற ஆண்டின் 4-வது காலாண்டில் குறைந்துள்ளது.

“அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளைக் காட்டிலும் வேகமாகவும் விவேகமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலை சீனா பெற்றுள்ளது” என்று ஸ்மித் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியரும் “சீனாவில் காற்று மாசுபாடு” என்ற நூலின் ஆசிரியருமான டேனியல் கார்ட்னர் கூறினார்.

புற்றுநோயை எதிர்த்து சீனா தொடர்ந்து போராடுகிறது. அதே சமயத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் அதன் முயற்சிகளில் அதற்கேயுரிய சிக்கல்களும் உள்ளன. முதன்மையான நகரங்களில் காற்று மாசுபாட்டை உண்டாக்கும் தொழில்களை வெறுமனே மூடிவிட்டு அவற்றை மேற்கு பகுதிகளுக்கு மாற்றியிருப்பதாக உலகளாவிய காலநிலை ஆய்வு மையத்தை (Center for International Climate Research) சேர்ந்த மூத்த ஆய்வாளர் கிறிஸ்டின் ஆனன் கூறினார். பின்னர் விரிவாக்கப்பட்ட காற்று மாசுபாடு இலக்குகளை கொண்ட திட்டங்களை பிற மாநிலங்களுக்கும் சீனா பின்பற்றியுள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகளை ஏற்கனவே வணிக நிறுவனங்கள் உணரத்தொடங்கி விட்டன. இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம்-மின் நிறுவனரும் பில்லியனருமான விஜய் சேகர் சர்மா, காற்று மாசினால் ஏற்படும் திறமையானவர்களின் இழப்பு குறித்து வருந்துகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான கிருஷ்ணா ஹெக்டே பேடிஎம்-மிற்கான புதிய தயாரிப்புகளை செய்வதற்காக பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் டில்லியில் உள்ள பேடிஎம் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு பயணம் செய்ய முடியாததால் வேலையை விட்டு விட்டார். “முதல் நாளின் முடிவில் எனது ஆற்றலின் அளவு குறைந்து விட்டது. இரண்டாம் நாளின் இறுதியிலோ எனக்கு தலைவலியே வந்துவிட்டது” என்று ஹெட்கே கூறினார்.

புகைமூட்டத்தைக் குறைக்கவல்ல உள்ளூர் மற்றும் உலக அளவிலான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு நிதிமூலதன முதலாளியுடன் சர்மா இணைந்திருக்கிறார். மற்ற நிறுவனங்களும் கூட இதேபோன்ற திட்டங்களை முயற்சிக்கின்றன. டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா குழுமம், ஹரியானாவில் உள்ள விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை எரியூட்டுவதை நிறுத்துவதற்காக புதிய இயந்திரக்கருவிகளை வடிவமைத்து அவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்காக புது டெல்லியில் சிகிச்சை பெற்ற தோமர், எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. தமது வீட்டிலிருந்து கொண்டே மருத்துவ ஆய்வுகளுக்காகவும் வேதிச்சிகிச்சைக்க்கும் (கீமோத்தெரபி) தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

“எனது குடும்பம் மனரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல்ரீதியாகவும் இன்னும் சொல்லப்போனால் பொருளாதார ரீதியாகவும் எனது சுமையைத் தாக்கிக் கொண்டிருப்பதை நினைத்து சில நேரங்களில் நான் உடைந்து போகிறேன்” என கலங்குகிறார் தோமர்.

தமிழாக்கம்:

வினவு செய்திப் பிரிவு

 

நன்றி : லைவ்மிண்ட்

1 மறுமொழி

  1. உங்கள் கம்யூனிஸ்ட் சீனாவில் நிலம் நீர் காற்று என்று அனைத்தையும் பாழ்படுத்தி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களை விட்டால் எந்தளவுக்கு ஒரு நாட்டை நாசம் செய்வார்கள் என்பதற்கு சீனா, வட கொரியா போன்ற நாடுகள் எல்லாம் உதாரணமாக இருக்கிறது.

    ஜனநாயக இந்தியாவில் இதை எல்லாம் சரி செய்வதற்கு வழி இருக்கிறது குறைந்தபட்சம் மக்களுக்கு போராட அனுமதி (உரிமை) உள்ளது ஆனால் சீனாவில் சுற்றச்சுழல் சீர்கேட்டிற்கு எதிராக போராடவும் முடியாது. கம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் வைத்தது தான் சட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க