Tuesday, December 10, 2024
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

-

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1923-ம் ஆண்டு முதல், பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது சிறியதும்,பெரியதுமாக 911 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் நேரடியாக, மூன்று லட்சம் தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழில்களான அச்சு, ஸ்கோரிங், லேமினேஷன், பேக்கேஜிங் தொழில்கள், அலுமினிய பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட் போன்ற ரசாயன தயாரிப்பு, பேப்பர் மில்கள், லாரி போக்குவரத்து போன்ற தொழில்கள் மூலம், வேலை செய்பவர்கள் என மொத்தமாக 8 லட்சம் தொழிலாளிகள் இத்தொழிலில் இருக்கின்றார்கள்.

கடந்த 10 நாட்களாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அனைத்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இது பட்டாசு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது.

காரணம், இவ்வழக்கில் தீர்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக இருந்தால் பட்டாசு தொழில் அடியோடு முடங்கி விடும். பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பது தான் அவர்கள் அச்சம். ஏற்கனவே இந்த வழக்கை காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஆர்டர் கொடுப்பதும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றமும் விரைந்து தீர்ப்பு வழங்காமல் இழுத்தடித்து மேலும் உற்பத்தியாளர்களை வதைக்கிறது.

தங்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும். சுற்றுச்சூழல் சட்டத்தில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொழிற்சாலைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள், சீன பட்டாசு இறக்குமதி போன்றவை காரணமாக இத்தொழில் நலிந்து விட்டது.

கடந்த ஆண்டு டெல்லி மற்றும் பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.

சிவகாசி பட்டாசை பொறுத்த வரையில் வட இந்திய விற்பனையாளர்களின் பங்கு தான் அதிகம். பண்டிகை நெருங்குவதற்கு முன்னரே முன்பணம் கொடுத்து விடுவார்கள். அதனை நம்பித் தான் உற்பத்தியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த முறை பெரும்பாலான விற்பனையாளர்கள் கொடுக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உண்மையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடையை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீக்கியது.

டில்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு

அமெரிக்க பெட்கோக் எனப்படும் ஒரு வகை நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்வதன் விளை பொருளாகவே உலகின் மாசுபட்ட நகரங்களில் முதன்மையான ஒன்றாக தலைநகர் டெல்லி இருக்கிறது.

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும், தனியார் போக்குவரத்தை கட்டுப்படுததுவதும் மூலமாக இந்த மாசுபாட்டில் இருந்து தலைநகரைக் காக்க முடியும். அரசோ அத்தகைய முயற்சிகளை தீவிரமாக எடுக்கவில்லை.

அதேபோல், டெல்லி காற்று மாசுபாட்டுக்கு, அண்டை மாநிலங்களில் நெல் வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவதும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. “ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 2 டன் வைக்கோல் உற்பத்தியாகிறது. இந்த வைக்கோலை டன்னுக்கு ரூ.5,500 என்ற விலையில் தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) வாங்கிக் கொள்ளும். மின்உற்பத்தி நிலையங்களுக்கு இந்த வைக்கோல் பயன்படுத்தப்படும் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் எது எப்படி இருந்தாலும் பெட்கோக்கை இறக்குமதி செய்வதன் மூலம் அந்த முயற்சிகள் நீர்த்துப்போயின. ஏனெனில் நிலக்கரி அல்லது டீசலை விட பெட்கோக் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கிறது.

உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.

பட்டாசுத் தொழில் பல இலட்சம் குடும்பங்களுக்கு வேலை அளிக்கிறது. அதை தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுதேசித் தொழில் பாதுகாப்பு என்று முறைப்படுத்தினால் பிரச்சினையின்றி தொழிலை தொடர முடியும். அதை செய்வதற்கு தயாராக இல்லாத அரசு சிவகாசி பகுதி மக்களை கை கழுவி விட்டது.

இது உள்நாட்டு பட்டாசு உற்பத்திக்கு சாவு மணி அடித்து விட்டு வெளிநாடுகளில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், காற்று மாசுபாட்டிற்கான உண்மையான காரணமான கார்ப்பரேட் நலன் அடங்கியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை!

மேலும் படிக்க:

சிவகாசி பட்டாசு ஆலைகள் காலவரையின்றி அடைப்பு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
டெல்லியில் காற்று மாசு குறைகிறது: லாரிகள், கட்டுமான பணிக்கான தடை நீக்கம்
ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு : சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு ஆலை ஸ்டிரைக்
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க