இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுத்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் இந்தியாவில் காலநிலை, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாட்டிற்கான ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பு (Climate health and air pollution Research in india) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் கூட்டமைப்பானது தன்னுடைய ஆய்வுச் செய்தியை லான்செட் பிளாண்ட்டரி ஹெல்த் (Lancent Plancentary Health) இதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வானது 2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவை கண்காணிப்பு நிலையங்கள் நிறுவி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு கன மீட்டர் காற்றிலும் 1.5 துகள் பொருள் (Particulate Matter) மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மேற்கூறிய ஆய்வில் இந்தியாவின் பல நகரங்களில் ஒவ்வொரு கன மீட்டருக்கும் 2.5 துகள் பொருள் காற்றில் அதிகமாக கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், 2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இத்தகைய அபாயகரமான காற்று மாசுபாட்டினால் மக்களின் இறப்பு விகிதம் 8.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 82 சதவிகிதம் மக்கள் (110 கோடி) உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
காற்று மாசுபாட்டினால் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அசோகா பல்கலைகழகத்தின் “சுகாதார பகுப்பாய்வு ஆராய்ச்சி மற்றும் போக்குகளுக்கான மையத்தின்” முனைவர்பட்ட ஆய்வாளர் சுகந்தி ஜெகநாதன், “நாம் தினமும் மிக அதிக அளவில் 2.5 துகள் பொருள்களை உள்ளிழுக்கிறோம். இந்த துகள்கள் இரத்தம் மற்றும் சுவாசம் அமைப்புகளுக்குள் உள் நுழைவதால் பல பாதகமான விளைவுகள் நமக்கு ஏற்படுவது வெகுதொலைவில் இல்லை. இந்த காற்று மாசுபாட்டால் பிறக்காத குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றன” என்று காற்று மாசுபாட்டின் அபாயத்தை நமக்கு உணர்த்துகிறார்.
இவ்வாறு இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்துவரும் வேளையில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்க்ளூரு, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவு அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட இந்தியா நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிக அதிக அளவாக 450 மேல் உயர்ந்திருந்தது. டெல்லியில் வசிப்பது ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்றெல்லாம் ஆய்வுகள் வெளிவந்தன.
இத்தகைய பேரபாயம் மிக்க காற்று மாசுபாட்டினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களே பிரதானமாகப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒன்றிய மோடி அரசும் மாநில அரசுகளும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. மாறாக, புதைபடிவ எரிபொருள்களை வரைமுறையின்றி சுரண்டுவதற்கும் தொழிற்சாலைகள் மூலம் சுத்திரிகரிக்கப்படாத வாயுகளை வளிமண்டலத்தில் வெளியிடுவதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட பல கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram