Monday, March 27, 2023
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைதீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

-

இவர்களுக்கில்லை தீபாவளி! படக்கட்டுரை

மோடியின் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, பணமதிப்பழிப்பு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு  காரணமாக இன்று எந்த பண்டிகைகயும் கொண்டாடத்தக்கதாக இல்லை. ஒருவாரம் முன்பிருந்தே ஆரம்பிக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தவருடம் மிகவும் குறைவான  கொண்டாட்டங்களே காணப்பட்டன.

ஆனாலும் மக்கள் “ஆட்சியாளர்கள் யாரும் சரியில்லை, ஒருத்தனும் யோக்கியன் இல்லை…” என்று சொன்னாலும், தேர்தல் நாளில் வரிசையில் நின்று எப்படி வாக்களிக்கிறார்களோ அதுபோல தீபாவளியும் இன்று ஒரு பழக்கத்தால் கொண்டாடப் படுகிறது. ஆனாலும் இந்த சம்பிரதாயமான கொண்டாட்டம் கூட இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் பேசுகின்றனர். இந்த நேர்காணல் தீபாவளி அன்று சென்னை நகரின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டது.

ரவி, கோடம்பாக்கத்தில் கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர்.

தீபாவளி நமக்கு எல்லாம் இல்ல… பசங்களுக்கு தான். போன வருசத்தை விட இந்த வருஷம் எல்லா பொருளும் வெல அதிகம். வேல செஞ்சா தான எதுனா வாங்கி குடுக்க முடியும்.”

செல்வி, பெரியார் நகர் துப்புரவு தொழிலாளி.

எனக்கு அஞ்சும் பொண்ணுங்க. புருஷன் ஒரு குடிகாரன். இருக்குற பொண்ணுங்கள கட்டிக்கொடுக்கணும். நா… வேலைக்கு வந்தா தான் பொழப்பு ஓடும். இதுல எங்க தீபாவளி கொண்டாடுறது. வெறும் ரூ.6,000 சம்பளம். இத வச்சிக்கிட்டு இன்னா பண்றது. இதுக்கே நான் கான்ராட்டு தொழிலாளி தான். எங்கள நிரந்தரம் பண்ண சொல்லி பல போராட்டம் பண்ணிட்டோம், ஒன்னும் ஆகல. எப்ப நிரந்தமா வேலை கெடக்கிதோ அது தான் எனக்கு தீபாவளி.”

சுரேஷ்குமார், துப்புரவு தொழிலாளி.

தீபாவளி கொண்டாடுறதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு. காலைல இருந்து இந்த குப்பைய வாரிகிட்டு இருக்கேன். ஒன்பது மணிக்கு வாங்கி வச்ச இட்லி. இப்ப மணி பதினொன்னு ஆகுது. இன்னும் சாப்படல. இது தான் எங்க பொழப்பு. நான் வாங்குற சம்பளத்துக்கு தீபாவளி ஒரு கேடா? என்னால என் புள்ளைங்களுக்கு பட்டாசு வாங்கி தர முடியல. என் தம்பி தான் வாங்கி தந்தான். நாள் முழுக்க ஒழச்சாலும் ஒன்னும் ஒட்டலையே!”

ருக்கு, வள்ளுவர் கோட்டம் அருகே 20 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர்.

“ இன்னா கொண்டாட சொல்ற. மோடி வந்து எல்லாத்துக்கும் டேக்சு போட்டுட்டாரு. யாரும் பூ கூட வாங்க வர மாட்றாங்க. வந்தாலும் வெலைய கேட்டுட்டு போயிடறாங்க. இன்னிக்கு விக்கிற வெலவாசிக்கு ஒருகிலோ கறி எடுத்து துன்ன முடில. தோ… காய் கொழம்பு சாப்ட்டுன்னு கீறேன். எல்லா காலமும் ஒழப்பு…ஒழப்பு தான். என்னிக்கு கண்ணா மூடுரனோ அது தான் எனக்கு ரெஸ்ட்.”

பார்த்திபன், அகத்தி கீரை விற்பனையாளர்.

“விடிய காத்தால கொல்லைல இருந்து எடுத்துட்டு வந்தது.. இத அதிகமா கோசாலைக்கு தானமா கொடுக்க சேட்டுங்க தான் வாங்குவாங்க. நம்மாளுங்க ஏதாவது வைத்தியத்துக்கு தான் வாங்குவாங்க. இன்னைக்குள்ளே இதை வித்துடனும். இல்லனா வீணா போய்டும். இது வித்துட்டாலே எங்களுக்கு தீபாவளி தான்.”

சிவக்குமார், மாநகரப் போக்குவரத்து கழக தொழிலாளி.

எந்த ஒரு பண்டிகையும் மகிழ்ச்சியா இருக்கத் தான். ஆனா இன்னைக்கு நெலம அப்படி இல்ல. அதனால் நமக்கு இன்னைக்கு தீபாவளி இல்ல. மத்த மக்கள் மகிழ்ச்சி தான் எங்களோட மகிழ்ச்சி.

ராஜேந்திரன், சைக்கிள் கடை.

“எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ… இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும். இதை விட வேறென்ன பண்டிகை எனக்கு வேணும்.”

சுப்ரமணியன், புதினா – கொத்தமல்லி விற்பவர்.

“சம்பாதிக்கிற பணம் வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் தான் இருக்கு. இதுல தீபாவளிய எப்படி கொண்டாடுறது. எனக்கு ரெண்டும் பொண்ணு தான். இன்னிக்கு வேல இருந்தா வர வருமானத்த கொண்டு பசங்களுக்கு ஏதாவது வாங்கி தரலாம்னு வந்தேன். வேலை இல்லாததால இப்ப சும்மாவே திரும்பி போறேன். இனிமே தான் யார்கிட்டயாவது ஒரு 500 ரூபா கடன் கேட்டு பார்க்கணும்”.

ஏழுமலை, இருபது ஆண்டாக இளநீர் விற்பனை செய்து வருபவர்.

“நாம என்ன அரசாங்க வேலையா செய்யுறோம். கையெழுத்து போட்டு சம்பளமும் போனசும் வாங்கி கொண்டாடுறதுக்கு. மழையானாலும், வெயிலானாலும் வேலைக்கு வந்தா தான் சோறு.”

பொன்னம்மாள், சைதாப்பேட்டை மார்கெட்டில் பூ, தோரணம் விற்பவர்.

“ நேத்துலாம் கீர வித்தேன். இன்னிக்கு எங்கயும் கீரை கெடக்கல. இந்த பூவும் தோரணமும் தான் கெடச்சது. இதை வித்தா தான் எனக்கு சோறு.”

ஆட்களிளில்லாத சைதாப்பேட்டை மார்க்கெட்டில் வாடிக்கையாளரின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்  பாட்டிகள்.

இவர்களுக்கு இல்லை தீபாவளி !

-வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. பண்டிகைகள் கொண்டாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான தருணங்கள் தான். என்னுடைய சிறு வயதில் அதனை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆயினும் இன்று பண்டிகைகள் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டன. மக்கள் கொண்டாடும் விதத்தில் இருந்தே நாம் இதனை அறிந்து கொள்ளலாம். உழைக்கும் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பண்டிகை கொண்டாட்டங்கள் என்பது கிடையாது.

  இன்று பண்டிகைகளாக இருக்கும் ஆகப் பெரும்பாலானவை நிலபிரபுத்துவ சமூகத்தில் தோன்றியவை தான். உழைப்பில் இருந்து அந்நியப்படாமல் இருந்ததால் எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் ஏதோ வயித்துபாட்டிற்கு பிரச்சினை இல்லாம ஓடிகிட்டு இருந்தது. ஆனால் இன்று என்ன பிரச்சினைகள் என்றாலும் தனியே தான் ஒப்பேத்த வேண்டும்.

  ஆகபெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி கிடையாது. முன்பு ஏதோ கொஞ்ச நஞ்சம் ஓட்டிகிட்டு இருந்ததையும் பணமதிப்பளிப்பு மற்றும் GST நடவடிக்கைகள்கா பிடுங்கிவிட்டு காசுள்ளவனுக்கு தான் கொண்டாட்டங்கள் என்று மாற்றிவிட்டன.

  மக்களின் சுயமரியாதையை சுரண்டும் தீபாவளி போன்ற பார்பனிய பண்பாடுகள்
  உழைக்கும் மக்களுக்கான விழாக்கள் இதுவல்ல என்பதனை மக்களே தங்களது சொந்த
  அனுபவத்தில் இருந்து புரி ந்து கொண்டுள்ளதை தான் இந்த பதிவு பறைசாற்றுகிறது.

  இது ஒருவகையில் நல்லது தான். ஏழை எளிய மக்களின் பண்டிகைகளாக நவம்பர் புரட்சியும், உழைப்பாளர் நாளும், பகத் சிங் பிறந்த நாளும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் பிறந்த நாளும் ஆக வேண்டும். ஏனெனில் பண்டிகைகளாக கொண்டாதுவதற்கான அருகதையை இந்த நாட்கள் தான் பெற்றிருக்கின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க