ஜார்க்கண்டில் அதானி குழுமத்தால் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட இருந்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் ஆதிவாசிகளை அதானி நிறுவனம் மிரட்டுவதாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சட்டத்திற்குப் புறம்பான நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கடந்த வாரம் செய்தி வந்தது.

நேற்றைய (06-03-2019) செய்தி என்னவென்றால் அந்த மின் உற்பத்தி நிலையத்தை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதானியின் முந்திரா மின் நிலையம் (உதாரணப் படம்)

இதில் சிறப்பு என்னவென்றால் முன்பு, அரசின் எந்தக் குழுவால் அதானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோ, இப்போது அதே குழு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது!

இந்த மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் பங்களாதேஷ்-க்கு மட்டுமே என்ற அடிப்படையில் இந்த மின் நிலைய கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவது எளிது. ஆனால், வெளிநாட்டிற்கு மட்டுமே மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த போதிய சட்டங்கள் இல்லை. இதனாலேயே அதானி குழுமம் கையகப்படுத்திய நில உரிமையாளர்கள், ஆதிவாசிகள், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர முடிந்தது.

படிக்க :
♦ அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

இந்த சிக்கலை சமாளிக்கவே இப்பொழுது ஒரே ஒரு மின் நிலையத்தை மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்துள்ளது மோடி அரசு. சிறப்பு பொருளாதார மண்டலம் என அறிவிப்பதில் அதானி குழுமத்திற்கு நிறைய நன்மைகள் உள்ளன.

சாதாரண தனியார் நிறுவனம் என்றால் அவர்களால் வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதுவே அதானி குழுமம் சந்தித்துவந்த பிரச்சினை. இப்பொழுது சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசு நிலத்தை கையகப்படுத்தி அதானி குழுமத்திடம் தரும்.

கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள்

ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படுவது எனக்கு தெரிந்து இதுவே முதல் முறை. “Bending backwards” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இது அதைவிட பெரிது. இதை நம் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் வடிவேலு வசனமான ‘படுத்தே விட்டானய்யா’ என்றுதான் சொல்ல வேண்டும்.

விமான நிலையங்களை வழங்குவதாகட்டும் மற்ற வேலைகளுக்கு அரசை பயன்படுத்துவது ஆகட்டும் அதானி குழுமத்துக்கு எது சிறந்ததோ அதை இந்த அரசு தெளிவாக செய்து வருகிறது!


கட்டுரையாளர் : அருண் கார்த்திக்
செய்தி ஆதாரம் : தி இந்து பிசினஸ் லைன் , ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க