ந்தியாவில் அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் இடங்களில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என பீற்றிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் அங்கலாய்ப்புகளின் அர்த்தம் என்ன என்பதை ஆற்றொழுக்கு போன்ற நடையில் விளக்க முனைந்த முயற்சியே உங்கள் கையில் தவழும் இந்த சிறுநூல். நூல் அளவில் மட்டுமே சிறியது. ஆனால், இது விவரிக்கும் மனிதத் துயரம், இழப்பு, ஏமாற்றம் மிகவும் ஆழமானது, நுட்பமானது.

நவீன கௌரவமான வேலையின் அடையாளமாகத் திகழ்ந்த நோக்கியா, பாக்ஸ்கான், டி.சி.எஸ். போன்ற மின்னணு மற்றும் தகவல்… தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேருவதும், தொடர்ந்து வேலை பார்ப்பதும் எவ்வளவு கௌரவமானது, சுகமானது என்ற கனவுகளோடுதான் பணிக்கு சேர்ந்தனர் உழைப்பாளிகள். இவர்களது சிறகுகள் ஓடிக்கப்பட்ட கதையை, அதனின் உள் அர்த்தத்தை, இதன் உலக பரிமாணத்தை விளக்கும் நூல் இது. (நூலின் அறிமுக உரையிலிருந்து…)

கொத்துக் கொத்தாய்ப் பஞ்சத்தில் மடிந்த மனிதர்களை விடவும் வேதனையை அனுபவிப்பவர்களாக இன்றைய இளைஞர்கள் உள்ளனர். ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப் படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது. பெரு நிறுவனங்களின் இலாபவெறி, ஆட்கொல்லியாகச் செயல்படுவதில், பஞ்சங்களை விடவும், பெரும் நோய்களை விடவும், வலிமையானதாக இருக்கிறது.

நோக்கியா 12 ஆயிரம் வேலை வாய்ப்புகளைச் சவப்பெட்டிக்கு அனுப்பியது. ஃபாக்ஸ்கான் 6 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி, இப்போது 1700 நபர்களைப் படிப்படியாகச் சாகடித்து வருகிறது. இந்திய நிறுவனமான, டாடா கன்சல்டன்ட் சர்வீஸஸ் 25 ஆயிரம் சாஃப்ட்வேர் பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும், புதிதாக 50 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.

… அதாவது 19 முதல் இருபது வயதில் வேலைக்கு ஆள் தேவை, என்பது நிரந்தர விளம்பரம். அதே நேரத்தில், 8 முதல் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவசாலிகளுக்கு வேலைப்பறிப்பு என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றைய நடைமுறையாகி விட்டது. (நூலிலிருந்து பக்.5)

காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட ஏராளமான சட்டங்கள் உள்ளன. 480 நாட்கள் பணிபுரிந்தால் அந்த தொழிலாளரை நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு வகுத்த விதி குறிப்பிடுகிறது. அதன்படி மேற்குறிப்பிட்ட பல்லாயிரம் தொழிலாளர்களும், இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தரத் தன்மையுள்ள வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்டத் தொழிலாளர்கள் 5 முதல் 8 ஆண்டுகள் காண்ட்ராக்ட் உள்ளிட்ட பலவேறு பெயர்களில் வேலை வாங்கப் பட்டவர்கள் ஆவார்கள். இது குறித்து அரசு மற்றும் தொழிலாளர் துறை கவலை கொள்ளவில்லை.

ஆலைமூடலுக்கு எதிரான பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டம். (கோப்புப் படம்)

ஐ.எல்.ஓ. ஆய்வில் கிடைத்த தகவல் தமிழகத் தொழிலாளர் துறை மற்றும் அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, காண்ட்ராக்டர்கள் நிறுவனத்தில் 20-க்கும் கீழே தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டவர்களாக உள்ளனர். மேலே ஹூண்டாய் நிறுவனத்தில் 456 காண்ட்ராக்டர்கள் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஆனால் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளில் 20-க்கும் கீழானத் தொழிலாளர்களைக் கொண்ட காண்ட்ராக்டர்கள் அதிகம். இவர்கள் முறையான லைசன்ஸ் வைத்திருப்பதில்லை.

மேலும் எந்த ஒரு காண்ட்ராக்டரிடம் இருந்தும், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கை, பெயர் பட்டியல், சர்வீஸ் கணக்கு போன்ற எந்த விவரமும் தொழிற்சாலைகள் ஆய்வுத் துறை கேட்டு பெறுவதில்லை. இது குறித்து அவர்களின் வரம்புக்குள் உள்ள அதிகாரம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தற்போது மோடி அரசு, இன்ஸ்பெக்டர் ராஜ் தொல்லை தருவதாக உள்ளது என்றும், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. (நூலிலிருந்து பக்.26-27)

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், சுரண்டல் மற்றும் ஆட்குறைப்புடன் நிறுத்திக் கொள்வதில்லை என்பதே அனுபவம். அந்த சமூகத்தில் உள்ள எதிர்ப்புஉணர்வு, அரசியல் விழிப்புணர் ஆகியவற்றை கொண்டே, அந்த நிறுவனம் தன்னுடைய நடவடிக்கைகளை கட்டமைக்கிறது. அதில் இருந்தே தன்னுடைய இலாப விகிதத்தை உயர்த்தும் செயலில் இறங்குகிறது. குறிப்பாக கொடும் சுரண்டலில் ஈடுபடுவதா? அல்லது நவீனத்துவ முறையில் செயல்படுவதா? என்பது உள்ளிட்டவை இந்த முறையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொருத்தளவில் பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த தொழில் நுட்பத் திறனைப் பெற்ற மாநிலமாக விளங்குகிறது. ஆனால் இது சாமான்ய மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை .

ஐ.டி. நிறுவன வேலைபறிப்புக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஐ.டி. பிரிவு நடத்திய பிரச்சார இயக்கம். (கோப்புப் படம்)

இன்றைய நிலையில் ஒருபுறம் வேலையிழப்பு மறுபுறம் நிரந்தரமற்ற வேலை என்பது எழுதப்படாத விதியாக இளைஞர்கள் முன் வைக்கப்படும் கொள்கையாக உள்ளது. அரசு பின்பற்றிய கொள்கைதான் முழு முக்கியமான காரணம் ஆகும். உலகமயமாக்கல் கொள்கை அமலான காலத்தில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றனர். அதன் பின் வேலைக்கு ஆள் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட வேலையாட்களின் இடங்களை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நிரப்பினார்கள். மற்றொரு புறம், வேலையின்மை பல மடங்கு பெருகியது. அதேபோல் உலகமயமாக்கல் கொள்கை துவங்குவதற்கு முன்பே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் காரணமாக உருவான திறன் படைத்த ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகையை அரசுகள் நியாயப்படுத்தின. இன்று பொதுத் துறை நிறுவனங்களில் 32%-மும், தனியார் துறையில் மதிப்பிடமுடியாத வகை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர், என்று ஐ.எல்.ஓ. ஆய்வு குறிப்பிடுகிறது. இளைஞர்களும் இத்தகைய நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்காக போட்டியிட்ட நிலையில், உரிமைகளையும் விட்டுத்தர தயாராகினர், என்பதையே மேற்படி ஆய்வு வெளிப்படுத்துகிறது. (நூலிலிருந்து பக்.28)

நூல் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்
ஆசிரியர் : எஸ்.கண்ணன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : tamizhbooks@gmail.com
இணையம் : www.tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க