சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குனர் பதவிக்காலத்தை  5 ஆண்டுகள் நீட்டிக்கச்செய்யும் அவசர சட்டம் : மோடி அரசின் முக்கியமான பாசிச நடவடிக்கை !
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்யும் அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது .
அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018 நவம்பரில் நியமிக்கப்பட்டார். 2 வருடம் மட்டுமே இவர் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கடந்த நவம்பரில் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் நவம்பர் 17-ம் தேதியோடு அவரது பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.
பதவிக் காலம் கடந்தமுறை நீட்டிக்கப்பட்ட போதே, அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறையை மாற்றி எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் மிரட்டி தனக்கு இணங்கச் செய்யும் வகையில், மோடிக்கு நெருக்கமானவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
படிக்க :
சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
அமலாக்கத்துறை இயக்குனர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம், இந்த நீட்டிப்பை விமர்சனம் செய்து இருந்தது. அவசியமான நேரங்களில் மட்டுமே, மிகவும் அரிதாக பதவி நீட்டிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து இந்த முறை நவம்பர் 17-ம் தேதியோடு மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடையக்கூடிய நிலையில்தான் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. பதவி மூப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நேர்மை கொண்ட எந்த ஒரு அதிகாரியும் கூட தலைமை பொறுப்புக்கு வந்து விடக்கூடாது என்பதில் மோடி அரசு மிக கவனமாக இருக்கிறது.
ஏற்கனவே அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் மோடி அரசின் வேட்டை நாய்களைப் போல எதிர்க்கட்சிகளை வேட்டையாடி மாநில அரசைக் கவிழ்ப்பதற்கும், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பாசிசத்தை நிலைநாட்டத் தேவையான ஆர்.எஸ்.எஸ் . இந்துத்துவா சிந்தனை உள்ள நபர்களையே முக்கியமான துறை பொறுப்புகளுக்கு மோடி அரசு நியமித்து வருகிறது.
மோடி – அமித்ஷா கும்பலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் கேரளாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வெட்கமின்றி பாஜக வழங்கிய எம்.பி பதவியை ஏற்றுக் கொண்டார். இவை எல்லாம் கடந்த காலத்திய பாஜக – அதிகார வர்க்க – நீதித்துறை கள்ளக் கூட்டுக்களின் உதாரணங்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணி நிறைவடைய இருந்த ராணுவத் தளபதி பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். பதவி மூப்பு அடிப்படையில் அதிகாரிகள் தலைமைப் பொறுப்புக்கு வருவது என்பது போய் மோடியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக பதவி நீட்டிப்பு வழங்குவதன் மூலம் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவான நபர்களை அனைத்து தலைமை பொறுப்புகளிலும் நீடிக்கச் செய்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் – காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்க இருக்கின்ற நிலையில் அந்தக் கூட்டத் தொடரிலேயே கூட இந்த பதவி நீட்டிப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்க முடியும். மோடி – அமித்ஷா பாசிச சக்திகள் பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் துச்சமாகக் கூட மதிப்பதில்லை.
பாசிசக் கும்பல் அரசு இயந்திரத்தின் அனைத்துக் கட்டுமானங்களையும் காவி பாசிச மயமாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், தேர்லில் பங்கெடுத்தும் கட்சிகளே அரசு கட்டமைப்பின் ஒட்டுமொத்த பாசிசமயமாக்கத்தைக் கண்டு அலறித் தெறித்து ஓடும் சூழலில், தேர்தலில் பங்கேற்பதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று சவடால் அடிப்பது வெறும் பகற்கனவாகத்தான் இருக்க முடியும்.
மருது
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க