privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று "மின்சார மசோதா – 2020" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.

-

கொரோனா – வேலையிழப்பு – வருவாயிழப்பு என தொடர்ச்சியான தாக்குதல்களால் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் மீது அடுத்த தாக்குதலைத் தொடுக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு.

கடந்த ஏப்ரல் 17 அன்று “மின்சார மசோதா – 2020” என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு. இலவச மின்சாரம் மற்றும் மின்சார மானிய ரத்து, மின் விநியோகம் தனியார்மயம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு முறை ஆணையத்தின் கையில் பெரும் அதிகாரத்தை இந்த மசோதா குவிக்கிறது.

தற்போது கருத்துக் கேட்பிற்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா குறித்து மூன்று வார காலத்திற்குள் கருத்துக்களை தெரிவிக்கக் கோரியுள்ளது மத்திய அரசு.
சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மின்சாரத்தைப் பொறுத்த வரையில், மின்சார கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் இந்த மசோதாவில் திருத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் பிரிவு 65-ன் படி, மக்களுக்கு மின்சாரம் வழங்குகையில் எந்த ஒரு மானியமும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று மாநில மின்சார ஒழுங்குமுறை கமிஷன்களை வலியுறுத்துகிறது.

இதுவரை நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தோடு வசூலிக்கப்பட்டு வரும் கூடுதல் கட்டணம் (Surcharge) மற்றும் மானிய ஈட்டுக் கட்டணம் (Cross-Subsidy) – அதாவது மக்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தில் ஒரு பகுதியை ஈடு செய்ய ஆலைகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் – ஆகியவற்றைக் குறைக்கவும் வழிகாட்டியுள்ளது இந்த மசோதா.

இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்கும் போது அதில் மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் கணக்கில் கொள்ளப்படுவதோடு, மின் பகிர்மான / விநியோக நிறுவனங்களின் (மாநில மின்சார வாரியங்கள்) செலவீனங்களை ஈடுகட்டும் வகையிலான கூடுதல் கட்டணங்கள் எதுவும் சேர்க்கப்படாது. ஆனால், தற்போது மின் பகிர்மான நிறுவனங்களின் செலவீனங்களையும் வசூலிக்கும் வகையில் செலவிடப்பட்ட தொகையை மின்சார கட்டண உயர்வின் மூலம் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறது இந்த மசோதா.

படிக்க:
♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
♦ “வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்

ஒவ்வொரு மின் விநியோக நிறுவனங்களும் (மாநில மின்சார வாரியங்கள்) சராசரியாக ஆண்டுக்கு ரூ. 22,000 கோடியை மின் விநியோக உடைமைகளுக்காக தற்போது செலவிடுகின்றன. இனி இந்தத் தொகையும் சாதாரண மக்களிடமிருந்து மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் வசூலிக்கப்படும்.

மின்சார விநியோகத்தில் இதுவரை அரசுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகையில், ஏன் இப்போது அரசாங்கம் இவ்வளவு மெனக்கெட்டு ஒரு மசோதாவைக் கொண்டு வரவேண்டும்? இந்தத் துறையில் தனியார் முதலீட்டைக் கொண்டு வருவதற்காகத்தான். மாவட்ட வாரியாகவோ, பகுதி வாரியாகவோ தனியார் நிறுவனங்களுக்கு மின் விநியோக உரிமையை வழங்கவிருக்கிறது இந்த மசோதா. மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துகையில், அவர்களது செலவீனங்களை மீட்டெடுக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இந்த மசோதா அனுமதிக்கிறது.

ஏற்கெனவெ இருக்கும் மாநில மற்றும் மத்திய ஒழுங்குமுறை கமிசன்களுக்கு அப்பால், ஒரு புதிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வழிகாட்டுதல் கொடுக்கிறது. மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற பெயரில் உருவாக்கப்படவிருக்கும் இந்த ஆணையம், மின்சாரக் கொள்முதல், விற்பனை, ஒப்பந்தம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான மையமாகச் செயல்படும். மேலும் ஏற்கெனவே இருக்கும் மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு சிவில் நீதிமன்றத்திற்கான அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.

மொத்தத்தில் மின் விநியோகம் தனியார்மயம், மானியங்கள் ரத்து, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள், தனிச்சிறப்பு அதிகாரம் கொண்ட ஆணையங்கள் என மின்சாரத்தை ஒரு விலை உயர்ந்த பண்டமாக மாற்றவிருக்கிறது, மத்திய அரசு.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இத்தகைய மக்கள்விரோத சட்டங்களை, கொரோனா தொற்று பரவும் இதுபோன்ற மோசமான காலகட்டத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயல்வது, தற்செயலான நிகழ்வு அல்ல.

இச்சட்டங்களுக்கு எதிராக மக்கள் வீதியில் வந்து போராட முடியாத ஒரு சூழலில் திட்டமிட்டே இத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்தக் காத்திருக்கிறது மோடி அரசு.

இந்த மோசடியான மசோதாவிற்கு எதிராக குரல்கொடுக்கத் தவறினால், இன்னும் சில மாதங்களில் மின்சாரம் பணக்காரர்களுக்கான ஆடம்பரப் பொருளாக மாறும் என்பது கண்கூடு.

நந்தன்
மூலக்கட்டுரை, நன்றி :  பிசினஸ் ஸ்டேண்டர்ட். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க