சமீபத்தில் அரசு மருத்துவமனைகளில் 15–20 சதவிகித டயாலைசிஸ் இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாக பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அவற்றைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவு முறையும் வாழ்க்கை முறையும் மாறி வரும் இந்த காலகட்டத்தில் தொற்றுநோய்களுக்கு இணையாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இந்த நோய்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கும் தன்மை உடையவை. நீரிழிவு நோயால் வயது வரம்பின்றி பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவுக்கு முந்தைய நிலையில் 15.3 சதவிகித மக்கள் உள்ளனர். இவர்களுக்கும் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் மட்டும் 9.9 சதவிகிதத்தினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் 5.9 சதவிகிதம் பேர் உள்ளனர். நகர்ப்புறங்களில் நீரிழிவு நோயால் 10 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் 10 – 14.9 சதவிகிதம் பேர் உள்ளனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒருவருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. சிறுநீரகம் அதிக அளவில் பாதிப்படைந்தவர்களுக்குத் தேவைப்படுவதுதான் டயாலைசிஸ் (Dialysis – இரத்த சுத்திகரிப்பு).
அரசு மருத்துவமனைகளில் டயாலைசிஸ்க்கான இயந்திரங்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மையங்களும் உள்ளன. டயாலைசிஸ்க்காக பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர். பிரதம மந்திரி தேசிய டயாலைசிஸ் திட்டத்தின்கீழ் 36 மாநிலங்களில் 1,530 மையங்களில் 10,605 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 139 மையங்களில் 1,241 இயந்திரங்கள் உள்ளதென மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
படிக்க: மகாராஷ்டிரா: மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்!
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1 கோடி பேருக்கு மேல் நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகப் பத்தாயிரக் கணக்கானோருக்கு டயாலைசிஸ் தேவைப்படும். ஆனால் வெறும் 1,241 இயந்திரங்களே உள்ளன. அதிலும் 15-20 சதவிகித இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. எனவே, முறையான சிகிச்சைகளின்றி நாள்தோறும் மக்கள் உயிரிழக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பழுதாகியிருப்பது டயாலைசிஸ் இயந்திரங்கள் மட்டுமல்ல. அடிப்படைத் தேவைகளான பல கருவிகள் பழுதாகியோ இல்லாமலோ உள்ளன.
அவசர சிகிச்சைப்பிரிவில் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகளும், ஆக்சிஜன் வழங்கும் கருவிகளும் பழுதாகிய நிலையில் உள்ளன. இந்த பிரச்சனைகளால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் படுக்கையின்றி நோயுற்ற நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் தரையில் படுக்கின்றனர். இயந்திரங்களின் எண்ணிக்கை மட்டுமா இங்கு பற்றாக்குறை? பணியாட்களின் எண்ணிக்கையிலும் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் மிகவும் பிரச்சனையில் உள்ளனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கிறது. மருத்துவமனையின் அங்கங்களைத் தனியாருக்குக் கூறு போட்டு விற்கும் வேலையிலே மும்முரம் காட்டுகிறது அரசு.
நிர்வாக வசதிகளுக்காக நோய்களை வகைப்படுத்தி அதை நிர்வாக ரீதியாக ஒழுங்குபடுத்தி தனித்தனி நிர்வாகத்தின் கீழ் ஒழுங்கமைத்துள்ளனர். ஒவ்வொரு நோய்களின் வகை மாதிரிகள் அடிப்படையில் முழுமையான புள்ளி விவரம் அரசிடம் உள்ளது. அதற்கேற்றாற்போல் நிர்வாக முறைகளையும் இயந்திரங்களையும் மேம்படுத்த வேண்டிய கடமையும் அரசிடம் தான் உள்ளது.
ஆனால் உயிர் காக்கும் மருந்துகளையும், இயந்திரங்களையும் திட்டமிட்டு அரசு புறக்கணிப்பதானது, உயிர் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களைத் தள்ளுவதாகும்.
கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தடையாக உள்ள தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதே மருத்துவ கட்டமைப்பை மக்களுக்கானதாக மாற்றி அமைப்பதற்கான வழியாகும்.
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram