கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.163.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட உயர் சிறப்பு மருத்துவ கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவில் புல்லட் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் பல ஆண்டுகளாக முதலீடு செய்துவரும் ஜப்பான் அரசின் ஜப்பான் பான்னாட்டு கூட்டுறவு முகமையின் (Japan International Cooperation Agency – JICA) நிதியுடன் இப்புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கைகள், அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்கள், நவீன ஆய்வகங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த உயர் சிறப்பு மருத்துவ கட்டடத்தின் மூலம் கூடுதலாக 1,000 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் திறப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தலைமை மருத்துவர் நிர்மலா ஆகியோர் கோவையிலிருந்து கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனைக்குள் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் கட்டணப் பிரிவு (Pay Ward) உள்ளது; அதனை மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை கூறினார். மேலும், இக்கட்டணப் பிரிவு திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதாவது கூடிய விரையில், அனைத்து அரசு மருத்துமனைகளுக்குள்ளும் ஒரு தனியார் மருத்துவமனை உருவாக்கப்படும் என்பதே மா.சுப்பிரமணியன் பேச்சின் சாரம்.
அரசு மருத்டுவமனைக்குள் கட்டணப் பிரிவை உருவாக்கியுள்ளதன் மூலம், இனி அரசு மருத்துவமனைகளில் பணம் தந்தால் டி.வி., ஏ.சி. மற்றும் கழிப்பறையுடன் கூடிய சிறந்த அறை என சகல வசதிகளும் கிடைக்கும்; பணம் கொடுக்கவில்லை என்றால் பொதுப் பிரிவில் கொசுக்கடியும் அசுத்தமான கழிப்பறையும்தான் கிடைக்கும் என்பதே தி.மு.க. அரசு மக்களுக்கு சொல்ல வரும் விடயம். இவ்வாறு பணம் இருந்தால் உயர்தர மருத்துவம், இல்லாவிட்டால் படுமோசமான மருத்துவம் என்ற அப்பட்டமான ஏற்றத்தாழ்வை உருவாக்குவதே கட்டணப் பிரிவுகளை உருவாக்குவதன் நோக்கம்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கட்டணப் பிரிவை உருவாக்குவது இது முதன்முறையல்ல. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.118 லட்சம் மதிப்பில் கோவை அரசு மருத்துவமனைக்குள் கட்டணப் பிரிவை மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதுகுறித்து பேசிய மக்கள், “தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக செலவு ஆகும். அதனால்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால் இங்கும் இப்படி பாகுபடுத்தி பார்த்தால் என்ன செய்வது?” என்று புலம்புகின்றனர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவர் பேசுகையில், “இந்த திட்டம் ஒரு வருடமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் பணம் கொடுத்தால்தான் முன்னுரிமை மற்றும் தேவையில்லாமல் யாரையும் அதற்குள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று கோவை அரசு மருத்துமனைக்குள் உருவாக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துரைக்கிறார்.
தூய்மைபணியாளர் மேலும் பேசுகையில், பிற நோயாளிகள் தங்கி இருக்கும் பொது அறை மற்றும் கழிப்பறைகளை ஒருமுறைதான் சுத்தம் செய்ய சொல்வார்களாம்; ஆனால் இந்த கட்டணப் பிரிவை இரண்டுமுறை சுத்தம் செய்ய சொல்வார்களாம்; மருத்துமனைக்குள் தரப்படும் தரப்படும் இலவச பால், ரொட்டி மற்றும் உணவுப்பொருட்களை பொதுப்பிரிவுகளில் இருப்பவர்கள் அவர்களே வந்து வாங்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் கட்டணப் பிரிவில் உள்ளவர்களுக்கு பணியாளர்களே வந்து உணவுப்பொருட்களை கொடுத்துவிட்டு செல்வர்; அதேபோல், மருத்துவர்களும் குறித்த நேரத்திற்குச் சென்று கட்டணப் பிரிவு நோயாளிகளை பார்ப்பார்களாம்; கட்டணப் பிரிவில் இதற்கென்று சிறப்பு செவிலியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்கிறார். சுருக்கமாக சொல்வதெனில், எப்படி கோயில்களில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்ற ஏற்றத்தாழ்வு உள்ளதோ அதேபோல் இந்த கட்டணப் பிரிவு மூலமும் அப்பட்டமான ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் பலர் கட்டணப் பிரிவுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. இதன்மூலம், எவ்வாறு தனியார் மருத்துவமனைக்கு சென்றால்தான் நல்ல மருத்துவம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதைபோலவே அரசு மருத்துவமனைக்குள்ளும் கட்டணப் பிரிவில் வழங்கப்படும் மருத்துவம்தான் தரமானதாக இருக்கும் என்ற எண்ணத்தை திட்டமிட்டு உருவாக்குகிறது தி.மு.க. அரசு. இதனை பயன்படுத்தி கட்டணப் பிரிவை விரிவுப்படுத்தி அரசு மருத்துவமனைக்குள் கட்டணப் பிரிவை பிரதானமானதாக மாற்ற வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நயவஞ்சக திட்டம். தி.மு.க. அரசின் இந்த போக்கு இலவச மருத்துவத்தை ஒழித்துக்கட்டுவதிலேயே சென்று முடியும்.
கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை, கிண்டி, சேலம், மதுரை அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டணப் பிரிவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மருத்துவமனைக்கும் கொண்டுவர வேண்டும் என்ற கார்ப்பரேட் திட்டத்தின் அடிப்படையில் தி.மு.க. அரசு மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது.
படிக்க : பாளையங்கோட்டை: சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்
மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை, இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கும் நடவடிக்கையாக சுருக்கி பார்க்கக் கூடாது. இல்லம் தேடி கல்வி திட்டம், நம்ம ஸ்கூல் திட்டம், நான் முதல்வன் திட்டம், பொது பாடத்திட்டம் போன்ற பல திட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளை விழுங்கி செரிக்கும் கல்வி கார்ப்பரேட்மயமாக்கத்தை தி.மு.க. அமல்படுத்தி வருகிறது. இதனை போலவே அரசு மருத்துவமனைக்குள்ளேயே கட்டணப் பிரிவை உருவாக்குவதன் மூலம் தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை விழுங்கி மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்தை தி.மு.க. நடைமுறைப்படுத்துகிறது. ஜப்பான் பான்னாட்டு கூட்டுறவு முகமை என்ற பகாசுர நிறுவனத்தின் நிதியில் கோவை மருத்துவமனையில் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ள செய்தி இதனை உறுதி செய்கிறது.
திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு, பாசிச பா.ஜ.க. எதிர்ப்பு அரசு என்று சொல்லிக்கொண்டே மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கும் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. உழைக்கும் மக்களை பாதிக்கும் இத்தகைய கார்ப்பரேட் திட்டங்களை தி.மு.க. உடனடியாக கைவிடவில்லையெனில் பாசிச சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் மாறுவதை தடுக்க முடியாது.
மணிவண்ணன்