பாளையங்கோட்டை: சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்

கல்லூரியின் அவலநிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது போதிய இடவசதி இல்லாதது தான். கல்லூரியின் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிலம் இல்லாமல் மிகக் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது.

பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கடந்த மார்ச் 4 ஆம்  தேதி, நவீன வசதிகளுடன் கூடிய கல்லூரியை வேறு இடத்தில் கட்டித்தர வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி கருப்புப்பட்டை அணிந்து கவன ஈர்ப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

பாளையங்கோட்டையில் உள்ள இந்த கல்லூரி 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் மிகவும் பழமையான கல்லூரியாகும். இதுதான் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் சித்த மருத்துவ கல்லூரி. இந்த கல்லூரி கடந்த 60 ஆண்டுகளாக நெல்லை மாநகரத்தின் பாளையங்கோட்டை பகுதியில் மிகக் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது. இதன் கட்டிடங்களும் மிகப் பழைமையானவை ஆகும். இந்த கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளில் பல குறைபாடுகள் உள்ளது.  அவை சித்த மருத்துவ மாணவர்களின் படிப்பை பெரிதும் பாதிக்கிறது.

இந்த சித்த மருத்துவக் கல்லூரியில், ஆண்களுக்கு விடுதி இல்லாதது, பழமையான பாழடைந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் இயங்கி வரும் பெண்கள் விடுதி, கல்லூரியிலும் விடுதியிலும்  போதுமான கழிப்பறை இல்லாதது, பெரும்பாலான பாடப்பிரிவுகளுக்கு  ஆய்வகமே இல்லாதது, போதுமான கருவிகள் இல்லாதது, மருத்துவத் தாவரவியல் பூங்கா – விளையாட்டு மைதானம் இல்லாதது, மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு கழிப்பறை வசதி இல்லாதது என இயங்கி வருகிறது. மொத்தத்தில், இந்த கல்லூரி, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி ஒரு அடிப்படை தரத்தைக்கூட பூர்த்தி செய்ய முடியாத தகுதியற்ற கல்லூரியாக பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கல்லூரியின் இந்த அவலநிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது போதிய இடவசதி இல்லாதது தான். கல்லூரியின் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிலம் இல்லாமல் மிகக் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது.


படிக்க: பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி விடுதி மாணவிகள்


இதனை சரி செய்ய ஜனநாயக இயக்கங்களும், துறை சார்ந்த ஆர்வலர்களும் செய்த முயற்சிகள் காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம், கல்லூரியின் எதிர்கால வளர்ச்சியையும் மாணவர்களின் நலனையும் கணக்கில் கொண்டு, போதுமான இடமுள்ள வேறு இடத்தில் கல்லூரியை கட்டுமாறு உத்தரவிட்டது. இதற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்திக் கொள்ளவும் பரிந்துரை செய்தது. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரு தரமான மருத்துவக் கல்லூரியாக உருவாக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றாமல் கல்லூரி நிர்வாகம் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல்பாடானது கல்லூரியின் மேம்பாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த சித்த மருத்துவத்தின் வளர்ச்சியையே பாதிக்கும் என்பதை உணர்ந்த கல்லூரி மாணவர்கள் பல வடிவங்களில் போராடியதன் பலனாக 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மேம்பாட்டிற்காக ₹40 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.

கல்லூரி நிர்வாகம் இந்த நிதியை பயன்படுத்தி ஏற்கெனவே கல்லூரி இருக்கும் குறுகிய இடத்திலேயே கட்டிடம் கட்ட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்தும், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கல்லூரியை வேறு இடத்திற்கு கொண்டு சென்று தரமான கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்றும், இந்த 40 கோடியை உடனே பெற்று உள்நோயாளர் மற்றும் வெளிநோயாளர் பிரிவு மருத்துவமனை கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5 நாட்கள் கருப்புப்பட்டை அணியும் கவன ஈர்ப்புப் போராட்டத்தை  மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் தங்களை தாங்களே “உரிமைகளுக்கான மாணவர் பேரவை” என்று ஒழுங்கமைத்துக் கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தங்களது உடனடி நலன்களுக்காகவும், தமிழ் மக்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் முன்னேற்றத்திற்காகவும் அமைப்பாக ஒருங்கிணைந்து போராடும் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க