திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசினர் சித்த மருத்துவக்கல்லூரியில், கடந்த 10/02/2024 அன்று இரவு 11 மணியளவில் முகம்தெறியாத மர்ம நபர் ஒருவன், அங்குள்ள மாணவிகள் விடுதியின் (C-block) அருகிலுள்ள பொதுச் சாலையில் அரைநிர்வாணமாக நின்றுகொண்டு மாணவிகளை பார்த்து சுய இன்பம் செய்தல் (masturbation) போன்ற கேடுகெட்ட செயலால் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்துள்ளான். இதனை கவனித்த மாணவிகள், உடனே விடுதி அருகில் அறை எடுத்து தங்கியிருந்த சக மாணவர்களுக்கு தெரிவித்ததும், அவனை மாணவர்கள் விரட்டிச்சென்று பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் அடுத்த நாள் (11/02/2024) காலை 10 மணியளவில் இன்னொரு மர்மநபர் ஒருவன் அங்குள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு அருகே உள்ள நுழைவாயில் கதவருகே நின்றுக்கொண்டு விடுதியிலுள்ள மாணவிகளை வக்கிரமான முறையில் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவனை, பட்டப்படிப்பு மாணவர்களும் அங்கிருந்த பயிற்சி மருத்துவர்களும் சேர்ந்து பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இந்த கல்லூரி மாணவிகளுக்கு நடப்பது புதிதல்ல. பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், முகம் தெரியாத மர்ம நபர் ஒருவன் பழுதடைந்து இருந்த சுற்றுச்சுவர் வழியாக கல்லூரி வளாகத்திற்குள் குதித்து, மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். உடனே அந்த அறையில் இருந்த மாணவி சத்தம்போட்டதும் தப்பித்து ஓடிவிட்டான். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க, போதுமான அளவு சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கவேண்டும், இரவு நேர காவலாளிகள் பணியில் அமர்த்தப்பட வேண்டும், பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும், சுற்றுச்சுவரை உயர்த்திக்கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே பெயரளவிற்கு செய்துக் கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். குறிப்பாக சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதற்கான செலவை மாணவிகளிடமே வசூலித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
இது போன்ற, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நடந்துள்ளன. குறிப்பாக கல்லூரி அருகே உள்ள சாலைகளில் மாணவிகள் நடந்து செல்லும்போது, அந்த சாலை வழியாக வரும் காமவெறியர்கள் மாணவிகளை தவறான முறையில் தொடுவது, மார்பகங்களை தொடுவது, கெட்டவார்த்தைகளை கூறி அழைப்பது, தவறான முறையில் பேசுவது, மாணவிகள் விடுதியில் இருக்கும்போது சாலை ஓரமாக இந்த காம வெறியர்கள் நிர்வாணமாக நின்றுகொண்டு தவறான செய்கைகளைச் செய்வது, விசில் அடிப்பது, கெட்டவார்த்தைகளில் சத்தமாக கத்துவது போன்ற கேவலமான அருவெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனால், பாதிப்புக்குள்ளாவது மாணவிகளே. இதுபோன்ற சம்பவங்களால் விடுதியில் இருக்கும் மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் ஏற்படும் பதட்டமும், அச்ச உணர்வும் அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவு நேரங்களில் கழிப்பறைக்கு சென்று வருவதற்கு கூட ஒருவகை அச்சத்துடனே சென்று வரவேண்டிய நிலையில் மாணவிகள் உள்ளனர். இக்கொடுமையான சம்பவங்கள் இரவு, பகல் என இருநேரங்களிலுமே அதிகமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் மனுவாகவோ அல்லது வேறு வடிவிலோ தெரிவித்து வந்தாலும் எந்த நடவடிக்கையும் இது நாள்வரை எடுக்காமல் இருப்பதாலே, யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்னும் தைரியத்துடன் இந்த காமவெறியர்கள் அடிக்கடி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
தற்போது நடந்த சம்பவத்தில் மாணவர்களே களத்தில் இறங்கியதால்தான் காவல் துறையிடம் புகார் அளிப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நடந்த எந்த சம்பவமும் காவல் துறையிடம் புகாரளிக்காமலும், தெரிவிக்காமலும் இருந்து கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்று கூறி மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது இக்கல்லூரி நிர்வாகம். காவல்துறையே முன்வந்து, புகார்மனு அளித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதாலே, புகார்மனு அளிக்க முன்வந்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதுபோன்று சம்பவங்கள் அதிகம் நடக்க அக்கல்லூரியின் சூழலே முக்கிய காரணமாகவும் இருக்கிறது. குறிப்பாக கல்லூரியிலிருந்து 100 மீ தொலைவிலேயே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அங்கு மது அருந்துபவர்களே அதிகமாக இவ்வழியாக வந்து இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபடுகின்றனர்.
மேலும், பாதுகாப்பற்ற விடுதி, பாழடைந்த கட்டிடங்கள், விடுதிக்கு மிக அருகிலேயே சாலை இருப்பது, NCISM (National Commission for Indian System of Medicine) விதித்துள்ள வரைமுறைப்படி எந்த ஒரு விதியையும் பூர்த்தி செய்யாத தகுதியற்ற கல்லூரியாக இருப்பதே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை உருவாக்குகிறது.
இது போன்ற சம்பவங்கள் இக்கல்லூரியில் மட்டுமின்றி டாஸ்மாக் அருகில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், இதுபோன்ற சம்பவங்களுக்கு கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும், அரசும் பொறுப்பேற்க வேண்டும். இந்த குற்ற சம்பவங்களை தடுக்க தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இப்படிக்கு
உரிமைக்கான மாணவர் பேரவை
(Students Council for Rights),
அரசினர் சித்த மருத்துவ கல்லூரி,
பாளையங்கோட்டை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube