பாளையங்கோட்டை: திட்டமிட்டு சிதைக்கப்படும் சித்த மருத்துவக் கல்லூரி

கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சொல்லி பல காலமாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாத மாநில பட்ஜெட் கூட்டத்தில் இந்த கல்லூரியை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால்  இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீபத்தில் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்திருக்கிறது, சில இடங்களில் அதிகமான நீர் தேங்கி இருக்கிறது, சில இடங்களில் வீடுகளும் இடிந்துள்ளது. இவையெல்லாம் இந்த கனமழையால் ஏற்பட்டவைதான். ஆனால், நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலைக்கு இந்த கனமழை காரணம் அல்ல. அது அந்த சித்த மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பை சீர்செய்யாமல் புறக்கணித்தன் விளைவே ஆகும். ஏற்கனவே அவலநிலையில் இருந்த கல்லூரியின் உள்கட்டமைப்பை இந்த மழை மேலும் சகிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.

மாணவிகளின் விடுதி கட்டிடங்கள், பயிற்சி மருத்துவர்களின் தங்குமிடம், வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு என அனைத்து கட்டிடங்களில் கான்கிரீட் மேற்கூரைகள் மற்றும் சுவர்களின் வழியாக தண்ணீர் வழிகிறது.

வெளி நோயாளிகள் பிரிவில் நிறைந்திருந்த தண்ணீரை அப்புறப்படுத்திய பின்னரும் தண்ணீர் மீண்டும் வடிந்து தேங்குகிறது. தரை நாற்றம் அடிக்கிறது.

பயிற்சி மருத்துவர்கள் (House Surgeons) தங்கும் விடுதியில் மொத்தமுள்ள ஆறு அறைகளில் ஐந்தில் தரையில் தண்ணீர் படிந்துள்ளது. இந்த தண்ணீர் எல்லாம் தெருவில் இருந்து அறைக்குள் வந்தது அல்ல. மேற்கூரை மற்றும் சுவர்களின் வழி வடிந்தவை. மாணவிகள் கழிப்பறைகள் போகும் வழிகளிலும், கழிப்பறைகளிலும் தண்ணீர் வடிகிறது. கழிப்பறைகளில் நனைந்து கொண்டேதான் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. பெரும்பாலான மேற்கூரைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற உயிருக்கு ஆபத்தான நிலைதான் உள்ளது.

மாணவிகள் விடுதியின் இரண்டு கட்டிடங்களில், ஒரு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அதானல், அந்த கட்டிடத்தில் இருந்த மாணவிகளையும் மாற்றி ஒரே கட்டிடத்தில் தங்கவைத்துள்ளது நிர்வாகம். ஒரு அறையில் 10 நபர்கள் வரை தங்கியிருக்கவேண்டிய நிலையில் உள்ளனர் விடுதி மாணவிகள். தரையில் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. அதை மாணவிகள் துடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். விடுதி அறைகளில் மேற்கூரைகள் எதிர்பாராத சில நேரங்கள் சிறுதுண்டுகளாக விழுகிறது. இந்த கனமழையால் சுவர்கள் மற்றும் மேற்கூரை வழியாக வடியும் தண்ணீர் மின் இணைப்பின் மெயின் சர்குயூடிலும் வடிகிறது.

இதனால் மாணவிகள் ஒரு விதமான அச்சத்தோடுதான் தங்கியிருக்கிறார்கள். நீண்ட காலமாகவே சிதிலமடைந்த நிலையில் தான் அங்குள்ள கட்டிடங்கள் உள்ளன.


படிக்க: கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!


மாணவிகளின் இந்த அவலநிலை மாணவர்களுக்கு இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு விடுதி இல்லை என்பதுதான்! இந்த கல்லூரியில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு விடுதி இல்லாமல் இருக்கிறது. இதனால் வெளியில் அதிக வாடகைக்கு அறையெடுத்து தங்கவேண்டிய நிலை இருக்கிறது.  ஒரு மாதத்திற்கு சராசரியாக நான்கு மாணவர்கள் தங்கும் அறைக்கும் ரூபாய் 8,000 வரை செலவாகிறது. உணவகத்தில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ரூபாய் 160 வரை செலவாகும். மாதம் ரூபாய் 5,000 இல்லாமல் ஒரு மாணவரால் வெளியில் சாப்பிடமுடியாது என்ற நிலையில் விலைவாசி உள்ளது.

அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் விடுதி வசதி இல்லாததால் ஆகும் செலவு தனியார் கல்லூரியின் விடுதிகளுக்கு கொடுக்கும் கட்டணத்திற்கு ஒத்ததாக இருக்கிறது. அரசு கல்லூரியில் படித்தால் கட்டணம் குறைவாக இருக்கும் என்றுதானே மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்! இதன் காரணமாக ”இவ்வளவு செலவு செய்து தங்குவதற்கு நாங்கள் தனியார் கல்லூரியிலே சேர்ந்திருப்போமே” என்கிறார்கள் மாணவர்கள்.

அறையில் சமைத்து சாப்பிடும் மாணவர்களுக்கு மற்றொரு வகையில் சிரமம் உள்ளது. அவர்கள் காய்கறி வாங்கி, சமைத்து, பாத்திரம் கழுவி முடித்தால் அன்றைய நாளில் அவர்களுக்கு படிப்பதற்கான நேரமே இருக்காது. ”நாங்கள் மருத்துவம் படிக்க வந்தோமா? அல்லது சமைத்து சாப்பிட வந்தோமா?” என்று மாணவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

வெளியில் வாடகைக்கு தங்கி இருந்த அறையில் கனமழை காரணமாக தண்ணீர் வந்துவிட்டது. சில மாணவர்கள் மாற்றுத்துணி இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். பாலும், ரொட்டியும் மட்டுமே சாப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கனமழையால் ஏற்படும் சிரமங்களை அவர்களாகவே பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உள் நோயாளிகள் இருக்கும் வார்டுகளிலும் மேற்கூரை வழியாக தண்ணீர் வடியும் நிலையிலே கட்டிடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அங்கே தரை வழுக்கி விழும் நிலையில்தான் இருக்கும். இப்போது தண்ணீர் வடிவதால்  நோயாளிகள் வழுக்கிவிழும் அபாயம் இருக்கிறது. சில நோயாளிகளுக்கு கால்களில் காயம் காரணமாக கட்டுப்போடப்பட்டிருக்கிறது. அதில் தண்ணீர் பட்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அவர்கள் ஈரமான தரையில் நடந்து கழிவறை செல்லக்கூட சிரமப்படுகிறார்கள். தண்ணீர் தேங்கியிருப்பதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் வரும் அபாயமும் இருக்கிறது. மொத்தத்தில் நோயாளிகள் அங்கே பாதுகாப்பாக இல்லை.


படிக்க: மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


இந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சொல்லி பல காலமாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாத மாநில பட்ஜெட் கூட்டத்தில் இந்த கல்லூரியை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால்  இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2016-ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவில் செட்டிகுளத்தில் இருக்கும் இடத்தில் இந்த கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி கட்டுமாறு கூறியிருந்தது.

இருப்பினும் ஏன் இந்த கல்லூரியை தரம் உயர்த்தவும் புதிய கட்டிடங்களை கட்டவும் கல்லூரி மற்றும் அரசு நிர்வாகம் முயற்சிகள் எடுக்காமல் இருக்கிறது?

தற்போது உள்ள கல்லூரியை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும், பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கும் 40 கோடி ரூபாய் என்பது போதுமானது அல்ல. அப்படி மிகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது என்பதற்கு (இந்த நிதி ஒதுக்கீடு சித்த மருத்துவம் என்ற அறிவியல்முறைக்கும், சமூகத்திற்கும் நீண்டகாலப் பயனுள்ளதாக இருக்கும்) சித்த மருத்துவமுறையை அரசு  தனது சொந்த செலவில் வளர்க்கிறது என்று பொருள்.

ஆனால் அவ்வாறு செய்யாமல், முறையாக நிதி ஒதுக்கி கல்லூரியை மேம்படுத்தாமல் அதை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கத் தான் அரசு முயல்கிறது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

சித்த மருத்துவம் தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவம். டெங்கு, கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் சித்த மருத்துவம் அரும்பங்காற்றியது. அப்படிப்பட்ட துறையை நிதி ஒதுக்காமல், உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தராமல் புறக்கணிப்பு செய்வது என்பது குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடியாமல் வருங்கால மாணவர்களை மருத்துவக் கல்வியை விட்டு வெளியேற்றுவது மட்டுமல்ல; குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவம் கிடைக்க விடாமல் செய்வதுமாகும்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க