துரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 17 அன்று காலை முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி விடுதிகளுக்கான கட்டிடங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதுதொடர்பாக மாணவர்கள் பலமுறை புகார் அளித்தும், போராடியும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரி அமைந்துள்ள பகுதி நீர்நிலைப் பகுதியாக இருக்கிறது. கல்லூரியின் கட்டிடங்கள் தரம் மற்றும் நீண்ட நாட்களுக்கு தாங்கும் உறுதித்தன்மை இல்லாததால் விரைவில் சிதலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை அடைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவியர் தங்கும் விடுதியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எவ்விதப்பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகு கட்டிடத்தை ஆய்வுசெய்த பொதுப்பணித்துறை, இந்த கட்டிடம் பயன்படுத்த தகுதியற்றது எனக் கூறியது. அதனை தொடர்ந்து மாணவியர்கள் வெளியேற்றப்பட்டு விடுதிக் கட்டிடம் இழுத்துமூடப்பட்டது. அதேபோல், சென்ற ஆண்டு மழை வெள்ளம் காரணமாக மாணவர்கள் தங்கும் விடுதியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்ததால், அந்த கட்டிடமும் இழுத்துமூடப்பட்டது.

படிக்க : மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

நீர்நிலை(கண்மாய்) நிரம்பியதால் கல்லூரி வளாகம் முழுவதும் மழைநீரில் சூழ்ந்தது. இத்தருணம் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை, கல்லூரியின் நூலகம், ஆய்வகம், கலையரங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் பயன்பத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்துவிட்டதாக கூறியது. எனவே மாணவர்களுக்கு மாற்று ஏற்பட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரிக்கு சில காலம் விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் கல்லூரியின் தரக் குறைபாட்டை சரிசெய்யாமல் மீண்டும் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் புதிய கட்டிடத்துக்கான வேலையை தொடங்க தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். மாணவர்கள் கோரிக்கை வைக்கும் போதும் போராடும் போதும், அவ்வப்போது ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளது அரசு. இச்சூழ்நிலையில் தற்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசிடம் சிதலமடைந்த கல்லூரியை சீர்செய்ய கோரிக்கை வைக்கவேண்டிய கல்லூரி நிர்வாகமோ மாணவர் போராட்டத்தை பிளவுப்படுத்தி சீர்குலைக்க முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் ஒரேஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியான திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி பல ஆண்களாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருக்கிறது. அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை. தற்போது மாணவரக்ள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் ஆதரிக்கவேண்டும்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க