மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

துரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 1982-ல் திமுக அரசு சார்பாக அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இடம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டது. இங்கு 250 மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் உளநோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். திருமங்கலம் மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பயன்பெற்று வருகின்றனர் மாணவர்கள். ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்களை உருவாக்கிய கல்லூரி தற்போது முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்து கிடக்கிறது.

சில வருடங்களாகவே அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சாலை வசதி ஆகியவை முறையாக இல்லை. கல்லூரி மற்றும் விடுதி வளாகங்கள் புதர் மண்டி காணப்பட்டன. இதற்காக பலமுறை மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

2019-ல் மாணவியர் விடுதி குளியலறை சுவர் இடிந்து ஒரு மாணவியின் மீது விழுந்த பிறகு உதவி பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு விடுதி பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று கூறியதன் அடிப்படையில் மாணவியர் விடுதி காலி செய்யப்பட்டது. இதன்பிறகு தற்காலிக விடுதி வசதி ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்குள் விரைவாக விடுதியை கட்டி முடிப்பதாகவும் வாக்களித்து சென்றனர். அதன் பின்னர் 2020-ல் விடுதியை இடித்து கட்டுவதற்கு கல்லூரிக்கு 15 நாட்களுக்கு விடுமுறை அளித்தனர். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டு விடுதிக்கான பேச்சு கைவிடப்பட்டது.


படிக்க : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !


அடுத்ததாக 2015-ல் அதிமுக அரசால் கட்டப்பட்ட மாணவர் விடுதி ஒரு வருடம் கூட உருப்படியாக இல்லை. தரைகள் உடைந்து, மேற்கூரைகள் சேதாரம் அடைந்து இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் பராமரிப்பு பணி செய்து புதிய தரை தளம் அமைத்தார்கள்.‌ அதுவும் ஓரிரு மாதங்களில் நாசம் அடைந்தது. இருந்தாலும் இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர மாணவர்களாக இருப்பதால் வேறுவழி இல்லாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாம்புகள், விஷ பூச்சிகள் மத்தியில் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடிப்படை வசதிகளுக்காக மாணவர்கள் பலகட்ட போராட்டம் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

இந்த இடம் கண்மாய் பகுதி என்பதாலும் 2021 நவம்பர் மாதத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து கல்லூரி வளாகம் முழுவதுமாக மூழ்கிவிட்டது. மேலும் இந்த பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டும் இதேபோல் கல்லூரி வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்து மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள் அதன் பிறகு முதன்மைப் பொறியாளர் மேலும் சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இந்த ஆய்வில் மொத்த கல்லூரியையும் அதாவது விரிவுரைக்கூடம், உடற்கூறாய்வு கூடம், ஆய்வகங்கள், உள்நோயாளிகள் பிரிவு, மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதி ஆகிய அனைத்துமே தகுதியற்றது என சான்றளித்தனர். மேலும் மொத்தமாக கல்லூரி மூடிவிட்டு மாற்று ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கான செலவினை பொதுப்பணித்துறையே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தனர். இதனால் மீண்டும் இரண்டு மாதம் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைனில் தொடரப்பட்டது.

இதன் பின்னர் மதுரை மாவட்ட கலெக்டர் அணிஷ்சேகர் கல்லூரியை ஆய்வுசெய்து வேறு இடத்தில் கட்டித் தருவதாக வாக்களித்தார். இதன் பின்னர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேசன் அவர்கள் கல்லூரியை ஆய்வு செய்து புதிய கல்லூரியை கட்டுவதற்கு வாக்களித்து சென்றார்.

எனவே விடுதிக்கான மாற்று ஏற்பாட்டை மாணவர்களே ஏற்பாடு செய்யுங்கள் என்று அலட்சியப்படுத்தியுள்ளனர். மேலும் கல்லூரியை திறக்க மாணவர்கள் விடாப்படியாக கேட்டுக் கொண்டதன் விளைவாக ஆய்வகங்களில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் வேறுவழியில்லாமல் அங்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். விடுதி இல்லாத காரணத்தால் மாணவ – மாணவியர்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இக்கல்லூரியில் பயின்றுவரும் மாணவ -மாணவியர் பெரும்பான்மையோர் ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் வாடகையை கட்ட மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வெளியில் தங்கி இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மாற்று இடம் ஒதுக்கி புதுக்கட்டிடம் கட்டித் தருவதாக வாக்களித்துவிட்டு இதுவரை இடம் கூட தேர்வு செய்யாமல் அரசு அலைக்கழிக்கிறது. மறுபுறம் முதல்வர் தனிப்பிரிவு, ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சர், மாற்றுக் கட்சிகள் என அனைவரிடமும் மாணவர்கள் தொடர்ந்து உதவியும் தேடியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி கல்லூரியை பார்வையிடுவதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்திருந்தார். ஆய்வு செய்த அமைச்சர் தியாகராஜா கல்லூரி பொறியியல் ஆய்வுக் குழுவின் மூலம் ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் கால்வாய் ஒன்றை அமைத்தால் தண்ணீர் அருகிலுள்ள ஆற்றில் கலந்து விடுமா,  தண்ணீர் வடிந்து விடுமா, என்பதை ஆராய்ச்சி செய்து, இந்த பகுதியில் மறுபடியும் கல்லூரி வளாகத்தை அமைத்தால் கல்லூரி உறுதியாக இருக்குமா, என்பதை ஆய்வு செய்து, ஒருவேளை உறுதியாக இருக்கும் என்றால் இந்த இடத்திலேயே கல்லூரி வளாகத்தை அமைக்கலாம் என்றும், மேலும் இந்த இடம் தகுதியற்றது என்று நிரூபணம் ஆனால் வேறு இடத்தில் புதிய கல்லூரி வளாகத்தை கட்டித் தருவதாக கூறினார்.


படிக்க : நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !


புதிய கல்லூரி கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் அதுவரை திண்டுக்கல் அல்லது விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக கல்லூரியை செயல்படுத்துவதாகவும் கூறினார். மேலும் கல்லூரி கட்டிடம் முழுவதுமாக கட்டிய பிறகு இங்கு வந்து மீண்டும் படிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் முதல்வர் மற்றும் மாணவர்கள் விருதுநகர் கல்லூரியில் சென்று கேட்டதற்கு இக்கல்லூரியில் இடமில்லை என்று மறுத்துள்ளனர். இதனால்  கல்லூரிக்கான மாற்று ஏற்பாடு இல்லாததால் கல்லூரியை எங்கு நடத்தலாம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது. மாணவர்களும் அவர்களின் வாக்குறுதிகளை நம்பிக் கொண்டிருப்பதால் என்ன பயனும் இல்லாத நிலையில் உள்ளனர். முறையான போராட்டத்தை கட்டியமைத்து அவர்களின் கோரிக்கைக்கு பணிய வைப்பதே தீர்வாகும்.

மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க