துரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பணியாளர்களுக்கு முறையாக சம்பளமும் ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. தங்களின் சம்பளப் பணத்தை கேட்கும் பணியாளர்களை சமாளிப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.
முதலில், கார்பஸ் நிதியிலிருந்து சம்பளமும் ஓய்வூதியமும் வழங்கப்பட்டிருக்கிறது. கார்பஸ் நிதி (Corpus fund) என்பது பல்கலைக்கழகத்தை பராமரிப்பதற்காக வழங்கப்படும் நிதி.
அடுத்ததாக, கடந்த மூன்று மாதங்களாக பேராசிரியர்களுக்கும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து சம்பளம் வழங்கியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
படிக்க :
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
2004-ம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (Contributory Pension Scheme), சம்பளத்திற்கு தகுந்தவாறு மாதத்திற்கு குறைந்தபட்சமாக ₹10,000 ரூபாயும் அதிகபட்சமாக ₹20,000 ரூபாயும் பங்களிப்பு ஓய்வூதிய நிதியாக (CPS Contribution) பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு நிகரான தொகையை, அரசு சார்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பயனாளர்களின் கணக்கில் செலுத்தும். பணி ஓய்வுக்குப் பின்னர் இந்தத் தொகையை பணியாளர்கள் தங்களைப் பராமரிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் கை வைப்பது என்பது பணியாளர்களின் வருங்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயலாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்த வரலாற்றுத்துறை பேராசிரியர் நாகூர்கனி அவர்கள் “இந்த நடவடிக்கையானது பணியாளர்களின் சிறுநீரகத்தை விற்று அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு சமமானது” என்று கூறியிருக்கிறார்.
பேராசிரியர்கள் இடையே இதுகுறித்து கருத்து கேட்டபோது நிர்வாக சீர்கேடும் பணியாளர்களின் முறைகேடுமே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள். முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையிலும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதிலும் ஊழல் புகார்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை குறைவதாகவும் கூறுகின்றனர்.
ஒருபுறம் ‘சமூகநீதி’ திமுக அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்திற்கு சரிவர நிதி ஒதுக்க மறுக்கிறது. மற்றொருபுறம் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்வி கொள்கை, அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்தச் சொல்கிறது.
பல்கலைக்கழகம் நடத்த பணம் இல்லை என்றால் கடன் வாங்குங்கள் அல்லது மாணவர்களை சுரண்டுங்கள் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இந்தப் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை இன்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் பல்கலைக்கழகங்களுக்கான நிதி வெட்டு. இப்படிப்பட்ட புதிய கல்விக் கொள்கையை தான் பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
இதை அனுமதித்தோமானால் மக்கள் பணத்தில் உருவான நம்முடைய அரசு பல்கலைக்கழகங்களும் அதில் பணிபுரியும் ஊழியர்களின் வேலையும் மாணவர்களின் எதிர்காலமும் பறிபோகும். ‘நிதி நெருக்கடி’ என்று காரணம் காட்டி, நிரந்தர ஆசிரியர்களை படிப்படியாக குறைத்துவிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு இது வழிவகுக்கும்.
படிக்க :
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !
அதேவேளையில், நிதி நெருக்கடி என்று சொல்லி கல்விக் கட்டணத்தை உயர்த்துவார்களேயானால், பண வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே பட்டப்படிப்பு என்ற நிலை ஏற்படும்.
ஆகவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இந்த நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக குரல்கொடுக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டியது ஜனநாயக சக்திகளாகிய நமது கடமை!
அத்துடன் காவி கார்ப்பரேட் நலனுக்கான புதிய கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவதற்கும் களம் இறங்குவோம்..!!

புவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க