துரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின்  நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.

“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…

செல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.

செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.

முதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.

துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.

வழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.

மு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.

தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட  மூவரில்  ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.

இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து ம.உ.பா.மையம் போராடியது.

இந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU)  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது  கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

பின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.  அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள்.  மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது.  இருப்பினும்  தீர்ப்பு  6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

உடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம்.  (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)

வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட  லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

பலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது.  துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இவண்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க