Saturday, May 30, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

-

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை பதவிநீக்கம் செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு இணைந்து ஆர்ப்பாட்டம்.

துரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனம் செல்லாது என்று 26-06-2014 அன்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். இதனால் ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது. மேலும் அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். ஏற்கனவே நாறிப்போயுள்ள பல்கலையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையில் கல்யாணி மதிவாணன் தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய் உள்ளது. ஆனால் கல்யாணி மதிவாணன் பொய்சொல்லி அரசை ஏமாற்றி பதவியைப் பெற்றுள்ளதால் அவர் வாதம் எடுபடாது. கல்யாணிக்கு எதிராக உத்தரவு பெற்ற பேராசிரியர்களும் உச்ச நீதிமன்றம் சென்று கல்யாணியை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர். எந்தவகையிலும் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், “நேற்று தானே தீர்ப்பு வந்திருக்கிறது அதற்குள் நடைவடிக்கை எடுக்க சொல்லி அரசை வலியுறுத்துவது சரியில்லை” என்று கூறினார். கல்யாணி மதிவாணனை நீக்கக் கோரி ம.உ.பா. மையம் சார்பில் சுவரொட்டி ஒட்டியவர்களை நாகமலை போலீசு கைது செய்து பதவி போன பின்பும் கல்யாணிக்கு விசுவாசம் காட்டியது. முன்தாக பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் கல்யாணியால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியற்றவர்கள், ஊழல் வாதிகள், கிரிமினல்கள் குறுக்கு வழியில் பதவியில் அமர்ந்து கொண்டு அசிங்கபடுத்துகிறதற்கும் அவமானப்படுவதற்கும் கல்யாணி மதிவாணன் ஓர் எடுத்துக்காட்டு. எப்படியானாலும் இனி ம.கா.பல்கலையில் தகுதியற்றவர்கள் நுழையும் எண்ணம் ஏற்படக்கூடாது என்ற வகையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு

அனுப்புநர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு &
மதுரை காமராஜர் பல்கலை பாதுகாப்புக் குழு சார்பாக
ம.லயோனல் அந்தோனிராஜ் & கே.எம்.விஜய குமார்
150-இ, ஏரிக்கரை சாலை,
கே.கே.நகர்,
மதுரை-20.

பெறுநர்
உயர்திரு தலைமைச்செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

வழியாக
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

அய்யா,

பொருள் – சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை W.P.No..11350/12 & W.P.No.3318/13 நாள் 26.06.2014 வழக்குகளின் தீர்ப்புப்படி

1. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே துணைவேந்தர் பதவியிலிருந்து விலக்கவும்

2. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் தமிழக அரசு துணைவேந்தருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது எனக் கோரியும்

3. மதுரை காமராஜர் பல்கலையில் தற்போது நடைபெற்றுவரும் பேராசிரியர்கள்-அலுவலகப் பணியாளர் நியமனங்களை உடனே நிறுத்த வேண்டுமெனவும் —– வலியுறுத்தி மனு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பணியாற்றிவரும் கல்யாணி மதிவாணன் அவர்கள் உரிய கல்வித்தகுதி இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மேற்படி துணைவேந்தர் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கண்டவாறு துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது அவரை, அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட W.P.No.11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை

கிளையின் நீதிபதிகள் வி.இராமசுப்ரமணியன்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று 26.06.2014-ல் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி தீர்ப்பில் UGC விதிமுறைகளின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும், ஆனால் தற்போதைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் இணைப் பேராசியராக மட்டுமே சென்னை எத்திராஜூ கல்லூரியில் பணிபுரிந்துள்ளார்.ஆனால் தான் இணைப் பேராசிரியர் என்பதை மறைத்து தனது கல்வித்தகுதியை பேராசிரியர் என மோசடியாகக் குறிப்பிட்டு தேர்வுக்குழுவையும்-அரசையும் ஏமாற்றி துணைவேந்தர் பதவியைப் பெற்றுள்ளார்.ஆகவே முறைகேடான வழியில் பெறப்பட்ட கல்யாணி மதிவாணனின் நியமனம் செல்லாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக WRIT OF QUO WARRANTO வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டால், தீர்ப்பு நீதிமன்றத்தில் சொல்லப்பட்டவுடன் அமலுக்கு வந்து விடும் என்பதே சட்ட நிலை. ஆக,சட்டப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் அவர்கள் நேற்று 26.06.2014-லேயே பதவி விலகி இருக்க வேண்டும் {அல்லது} தமிழக அரசு அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் தற்போதுவரை சட்டமுரணான நிலையே தொடர்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மேற்படி கல்யாணி மதிவாணன் தரப்பு உச்சநீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைபெற முயற்சித்து வருகிறது.அவ்வாறு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகவிருக்கும் வழக்கறிஞர் மேற்படி கல்யாணி மதிவாணனுக்கு ஆதரவாக வாதிடாமல் உயர் கல்வி நிறுவனமான மதுரை காமராஜர் பல்கலையின் மாண்பினை காப்பாற்றும் பொருட்டு, நியாயத்தின் பக்கம் நின்று உண்மை நிலையினை நீதிமன்றத்தில் எடுத்தியம்ப வேண்டும்.மேலும் தமிழக அரசு சார்பில் இவ்வழக்கில் மேல்முறையீடு எதுவும் செய்யக் கூடாது.ஏனெனில் கல்யாணி மதிவாணன் தனது விண்ணப்பத்திலேயே தான் பேராசிரியர் எனக் குறிப்பிட்டு தேர்வுக்குழுவை ஏமாற்றியுள்ளார்.இதனால் உரிய கல்வித்தகுதி இருந்த ஏராளமான கல்வியாளர்கள் தேர்வு பெறாமல் போயுள்ளனர்.இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிக்கு தமிழக அரசு ஆதரவளிக்கக் கூடாது.

மேலும் தற்போது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பேராசிரியர் – அலுவலகப் பணியாளர் என அனைத்துப் பணிகளும் ஏலம் விடப்படுகிறது. பதிவாளர் பதவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தட்டிக் கேட்டால் பேராசியர்கள், மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். உயர்கல்வி நிலையம் ஊழல் வாதிகளின் கூடாரமாய், மாற்றப்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது நடைபெற்று வரும் பணிநியமனங்களை உடனே நிறுத்த பல்கலை பதிவாளருக்கு தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 16.05.2014 அன்று, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கூலிப்படை ஏவி விடப்பட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் சீனிவாசனின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு தற்போது வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகிறார். பேராசிரியர் சீனிவாசனை கொலை செய்ய கூலிப்படையை ஏவியவர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014-ன் கீழ் பிரிவுகள்: 294(b), 324, 307, 109 I.P.C. –ன் படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் முதல் குற்றவாளியாக மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளார். குற்ற எண்.216/2014 வழக்கின் இதர குற்றவாளிகள் பதிவாளர் முத்து மாணிக்கம், பி.ஆர்.ஓ.அறிவழகன், செல்லத்துரை, எஸ்.வி.கே.செல்வராஜ் ஆகியோரும் தினமும் பல்கலை கழகத்திற்க்கு வந்து செல்கின்றனர். மேற்படி நபர்கள் எவரும் சட்டத்தை மதித்து இன்று வரை முன்ஜாமீன்மனு கூடத் தாக்கல் செய்யவில்லை. காவல்துறையும் மேற்படி நபர்களை கைது செய்ய மறுக்கிறது.உடனே இவர்களைக் கைது செய்ய வேண்டும்.

ஆகவே தமிழக அரசு உடனே இப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை W.P.No..11350/12 & W.P.No.3318/13 நாள் 26.06.2014 வழக்குகளின் தீர்ப்புப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே துணைவேந்தர் பதவியிலிருந்து விலக்குமாறும், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் தமிழக அரசு துணைவேந்தருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது எனவும், மதுரை காமராஜர் பல்கலையில் தற்போது நடைபெற்றுவரும் பேராசிரியர்கள் – அலுவலகப் பணியாளர் நியமனங்களை உடனே நிறுத்த வேண்டுமெனவும் கோருகிறோம்.

மதுரை
27.06.2014
இப்படிக்கு

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க