privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு

மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், செல்லதுரையின் துணைவேந்தர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது

-

துரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இன்று (14.06.2018) இவ்வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு செல்லத்துரையின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தி, பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அதன் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். முதலில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்கபட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற அமர்விற்கு மாற்றப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இந்த வழக்கில் மனுதாரர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு. பிரபு ராஜதுரை அவர்களும், ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதனும் இணைந்து வாதாடினர். இந்த வழக்கில் செல்லதுரைக்கு எதிராக மூன்று முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

முதலாவதாக, துணை வேந்தர் பதவிக்கான தகுதிக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் செல்லத்துரையின் நியமனத்தின் போது அவர் 3 ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணிபுரிந்திருந்தார்.

முன்னாள் முறைகேட்டு துணைவேந்தர் கல்யாணி மதிவாணன்

இரண்டாவதாக, செல்லத்துரை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட போது அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன்  மற்றும் செல்லத்துரை (அப்போதைய பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை செயலர்) உள்ளிட்டோரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு தலைவரும், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சீனிவாசனை, அவர்கள் இருவரும் கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். இது குறித்து அப்போதே மதுரை நாகமலை போலீசு நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மூன்றாவதாக,  தேர்வுக்குழு முறையாகக் கூடி உரிய முறையில் துணைவேந்தர் தேர்வை நடத்தவில்லை.

இவ்விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருவர், நீதிமன்றத்தில் ஆஜராகி ”நாங்கள் செல்லதுரையை முறையாக தேர்வு செய்யவில்லை. அரசின் நிர்பந்தம் காரணமாகவே கையெழுத்திட்டோம்” என்று வாக்குமூலம் தந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பைத் தள்ளி வைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற அமர்வு.

நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க, அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும், பி.பி. செல்லத்துரை

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய நிர்மலாதேவி விவகாரத்திலும் பி.பி. செல்லத்துரையின் பெயர் அடிபட்டது. அவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் இன்று (14.06.2018) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், துணைவேந்தராக பி.பி. செல்லதுரை நியமிக்கப்பட்டது செல்லாது எனக் கூறி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உடனடியாக தேர்வுக் குழு அமைத்து வேறு ஒரு துணைவேந்தரை தெரிவு செய்யும்படி உத்தரவிட்டது.

இத்தீர்ப்பு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. உயர்கல்வித்துறை ஊழல் சம்பந்தப்பட்டுள்ள இவ்வழக்கில், மூத்த வழக்கறிஞர் திரு. பிரபு ராஜதுரை, தனிப்பட்ட ஆர்வம் காட்டி, வழக்குக் கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல், 5 முறைக்கும் அதிகமாக சொந்தப் பணத்தில் சென்னை சென்று வந்து இந்த வழக்கில் வாதாடினார்.

துணைவேந்தர் தகுதி நீக்கம் என்பது உயர்கல்வித்துறை ஊழலுக்கு எதிரான  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நீண்ட போராட்டத்தில் கிடைத்த ஒரு குறிப்பிடத் தகுந்த வெற்றி !

20.06.2018 அன்று புதுப்பிக்கப்பட்ட செய்தி:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து துணை வேந்தர் செல்லத்துரை, உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோரி வழக்கு போட்டார். அப்படி தடை போடக் கூடாது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் லயோனல் அந்தோணிராஜ் மனுவில் தலையீடு செய்தார். இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் துணை வேந்தரின் மனுவை நிராகரித்ததோடு புதிய துணை வேந்தரை தெரிவு செய்வதற்கான குழு தனது பணிகளை தொடரலாம் என உத்தரவு போட்டிருக்கிறது. லயோனல் அந்தோணிராஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே ஆஜரானார்.

தகவல்: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க