கடந்த 25 வருடங்களாக திருநெல்வேலியில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்கிவருகிறது பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை. இங்கு 100 கடைகள் உள்ளன. சுமார் 130 விவசாயிகள் இதில் பதிவு செய்துள்ளனர். சிவந்திப்பட்டி, கொடிக்குளம், குத்துக்கல், அகரம், வல்லநாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை அன்றாடம் பறித்து இந்த உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இடைத்தரகர்கள் இல்லாமல் தாங்களே நேரடியாக விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் தருவதாகவும் உழவர் சந்தைகள் அமைந்துள்ளன. பசுமையான காய்கறிகள் கிடைப்பதால் மகாராஜா நகர், தியாகராஜா நகர் உள்ளிட்ட நகர்ப்புறத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் உழவர் சந்தைக்கு வந்து வாங்கிச் செல்லவே விரும்புகின்றனர்.
மக்களுக்குப் பயன் தரக் கூடியதாக உள்ள இந்த உழவர் சந்தைக்கு தற்போது மாவட்ட நிர்வாகமே பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ரயில்வே பாலம் உழவர் சந்தையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வரக்கூடிய வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் காரணம் கூறப்பட்டது.
சந்தையின் வாயிற்கதவு அமைந்திருக்கும் இடத்தில், கால்நடைகள் உள்ளே சென்றுவிடாமல் இருப்பதற்காக இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த கம்பிகள் துருப்பிடித்துவிட்டதால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் போவதாகக் கூறி கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வாயிற்கதவை இழுத்து மூடியது உழவர் சந்தை நிர்வாகம். பின்வாசல் குறுகிய பாதையை உடையது. இது மக்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இதனால் மக்கள் வருவது குறைந்து வியாபாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் உழவர் சந்தையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளாமல் அவை சேர்ந்து துர்நாற்றம் அடிக்கிறது. நாய் போன்ற விலங்குகளின் கழிவுகள் அதனுடன் சேர்ந்து விவசாயிகள் மற்றும் மக்களுக்குத் தொற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து காவலரை நியமித்து வாகன நெரிசலைச் சீரமைப்பது; உடனடியாக நடைபாதையைச் சீரமைப்பது; கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது; இவையொன்றும் மாயாஜால வித்தையல்ல. முடியாத காரியமுமல்ல. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதைச் செய்ய மறுக்கிறது; உழவர் சந்தை நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
படிக்க: பொட்டலூரணி கள ஆய்வு | நெல்லை மக்கள் அதிகாரம்
இதனால் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள் உட்பட சுமார் 200 பேர் ஒன்றிணைந்து கடையடைப்பு நடத்தி கடந்த நவம்பர் 11ஆம் தேதி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள்..
- சந்தையின் மெயின் கேட்-ஐ உடனே சீரமைத்துத் திறக்க வேண்டும்
- ஒரு மாதமாக அள்ளப்படாமல் கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும்
- போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய தகுதி வாய்ந்த பாதுகாவலர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை உடனடியாகக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான விவசாயிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“மனு கொடுத்து ஒரு வார காலம் கடந்துவிட்ட போதிலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; எங்களுக்கு முறையாக எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை” என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
“உழவர் சந்தையில் மட்டும் தான் லாபத்தை எதிர்பார்க்காமல் சேவை நோக்குடன் பொது மக்களுக்குக் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை விற்று வருகிறோம். எனவே தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டு,சந்தையைச் சீராக இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயி சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“சந்தையின் மேம்பாட்டிற்காக ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரவில்லை. என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதைக் கண்டுகொண்டு அதற்குத் தீர்வு காண வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பே ஆகும் ” என்று ராமலட்சுமி கூறுகிறார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
படிக்க: நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு
ஆனால் விவசாயிகள், பொதுமக்களின் நியாயமான, எளிமையான இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் புறந்தள்ளுவதை உற்று நோக்கினால் சந்தையை இழுத்து மூடும் சதி இருப்பதாக ஐயம் எழுகிறது.
ஸ்மார்ட்சிட்டியின் பெயரில் பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஜங்சன் பேருந்து நிலையம் ஆகிய மக்கள் பயன்பாட்டுக்கு உரிய இடங்கள் சுருக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்கான தளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாளை மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடைகளில் பலமடங்கு டெபாசிட் மற்றும் வாடகை உயர இருக்கிறது. இது சிறு வியாபாரிகளின் தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக உள்ளதாக பாளை மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நயினார் குளம் சீரமைத்து போட்டிங் விட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நயினார்குளம் மார்கெட்டை வேறிடத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் மாவட்ட நிர்வாகத்திற்கு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அடிப்படையில் டவுண் போஸ் மார்க்கெட் சிதைக்கப்பட்டு வியாபாரிகள் ஏற்கெனவே நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில்தான் தற்போது மகாராஜா நகர் உழவர் சந்தையைப் பராமரிக்காமல் சீரழிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி, ஒரே நாடு ஒரே சந்தை, மின்னணு வேளாண் சந்தை (eNAM e-National Agricultural Marketing) போன்ற கார்ப்பரேட் நலத்திட்டங்களை அமல்படுத்தத் துடித்து வருகிறது மோடி தலைமையிலான பாசிசக் கும்பல். நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை நசுக்கி ஒட்டுமொத்த சந்தையை கார்ப்பரேட் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பதே இத்திட்டங்களின் நோக்கமாகும். வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள வணிகக் கட்டமைப்புகளைச் சிதைத்து அதன்மூலம் மக்களை கார்ப்பரேட்களின் பக்கம் திசைதிருப்ப எத்தனிக்கிறது. இது விவசாயிகள் மட்டுமின்றி உழைக்கும் மக்கள் அனைவரையும் வஞ்சிக்கும் செயலாகும். இவற்றில் பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அம்சங்களாகும்.
இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது முதுகில் குத்திய மோடி தலைமையிலான பாசிசக் கும்பலை எதிர்த்து, இன்றும் தங்களது உரிமைகளுக்காக உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள், உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். பாசிசத்தை வேரறுக்கும் போராட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ளும்போது மட்டுமே நமது உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். இதுவே இந்த தருணத்தின் உடனடித் தேவையாகும்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram