பொட்டலூரணி கள ஆய்வு | நெல்லை மக்கள் அதிகாரம்

ஒரு கிராமத்தில் நல்ல காற்றும், நல்ல நீர்நிலையும் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை உணர்ந்தால், இந்த கிராம மக்கள் மீன் கழிவு ஆலைக்கு எதிராக சுய உணர்வோடு போராடுகிறார்கள்.

தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையால் காற்று மாசுபாடு ஏற்பட்டு ஊரில் வாழ முடியாத நிலையில் கடந்த 2021 இல் இருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் மக்களை மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து அவர்களின் போராட்ட நியாயத்தை கேட்டறிந்தார்கள்.

“இந்த ஆலை தொடங்குவதற்கு முன்பாக என்ன பாதிப்பு ஏற்படும் என்று எங்களுக்கு புரியவில்லை. ஆலை தொடங்கிய உடனே இரவு நேரங்களில் அதன் கழிவுகளை திறந்து விடுவது, காற்றடிக்கும் போது அந்த துர்நாற்றங்கள் எங்கள் ஊர் பக்கம் வருவது, இரவு நேரங்களில் வண்டிகளில் அந்த கழிவுகளை ஏற்றி செல்லும் போது ஊர் சாலைகளில் ஒழுகிவிடுவது ஆகியவை எங்களுக்கு அதிகமான துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. வயதானவர்களுக்கு மூச்சு திணறல், வாந்தி, ஒவ்வாமை ஏற்படுவது போன்ற பல தொந்தரவுகள் வந்த பின்தான் நாங்கள் உணர்ந்தோம்” என்று மக்கள் கூறினர்.

இதன்பிறகு தான் வி.ஏ.ஓ, தாசில்தார், கலெக்டர் ஆகியோரிடம் சென்று மக்கள் மனு கொடுத்துள்ளனர். “இந்த தொழிற்சாலையை மூடுங்க. வேற இடத்துக்கு மாத்துங்க. எங்களால அந்த ஊர்ல வாழ முடியல” என்று அதிகாரிகளிடம் மக்கள் கோரியுள்ளனர். வந்து சோதிப்பதாகக் கூறிய அதிகாரிகள் வரவேயில்லை. ஆனால் அதற்கு பின் மேலும் இரண்டு ஆலைகளைத் திறப்பதற்கு இந்த அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. அதிகாரிகள் இதுவரை வந்து ஆலையை சோதிக்காமலும், மக்களுக்கு எந்த பதிலையும் சொல்லாமலும் இருந்துள்ளனர். இதனால், ஊரில் முடிவெடுத்து, அதன் அடிப்படையில் கழிவு மீன்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை மறித்து ஊருக்குள் வரக் கூடாது என்றும், வேறு வழியில் செல்லுமாறும் மக்கள் கூறியுள்ளனர்.

வாகன ஓட்டிகளிடம் மக்கள் அவர்களைத் தாக்கியதாக பொய் புகார் வாங்கிக்கொண்டு, போலீசு 9 பேர் மேல் பொய் வழக்கு போட்டுள்ளது. அடுத்ததாக மக்கள் தங்கள் கோரிக்கையை வெளி உலகத்துக்கு கொண்டு செல்வதற்காக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எங்குமே அனுமதி வழங்கப்படவில்லை.

“எங்களுடைய நியாயத்தை புரிந்து கொண்ட சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் இயக்கத்தினர் எங்களை வந்து பார்த்துவிட்டு, அந்த கோரிக்கையை வெளியே கொண்டு போவதற்கு தூத்துக்குடி சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டத்துக்காக அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் போலீசு அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு போலீசு கூறும் காரணம் வஞ்சகமானதாக இருக்கிறது” என்று மக்கள் கூறினர்.

மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது, கல்வி நிலையம், மருத்துவமனை இருக்கிறது என்று கூறி அனுமதி மறுத்திருக்கிறார்கள். ஆனால் அதே இடத்தில் அதற்கு முன்பும், அதற்கு பின்பும் மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து திமுக அரசும், போலீசுத்துறையும் கூட்டு சேர்ந்து மக்கள் கோரிக்கையை ஏற்று நடத்தும் போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என்று நினைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. போராட்டத்தை இருட்டடிப்பு செய்வதில் போலீசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது.

“எங்கள் நியாயமான போராட்டத்தை ஓடுக்க வேண்டும் என்று ஆலைக்கு விசுவாசமாக இருந்து கொண்டு ராஜசுந்தர் டிஎஸ்பி எங்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

எங்கள் ஊரிலேயே அமர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என பந்தல் போட்டு ஒன்று கூடி அமர்ந்து நாங்கள் பேசினால் அந்த பந்தலை எடுப்பதற்கு போலீசும், வருவாய்த்துறையும் முயற்சித்தார்கள்” என்று மக்கள் தங்கள் வேதனையைப் பதிவு செய்தனர்.


படிக்க: கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!


மக்கள் அதை முறியடித்துள்ளனர்:

இப்படி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளும் திமுக அரசும் செவி சாய்க்காததால் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு கிராம மக்கள் வந்தனர். அனைத்து கட்சிகளையும் அழைத்து கிராமத்தில் பேசினார்கள். “இதில் நாம் கட்சி வேறுபாடு ஜாதி வேறுபாடு பார்க்க கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலைப் புறக்கணித்தால் அந்த செய்தி வெளி உலகத்துக்கு போகும்; நமக்கு நியாயம் கிடைக்கும்” என்று முடிவு செய்து தேர்தலை புறக்கணித்தார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பே புறக்கணிக்கப் போவதாகவும் செய்தியை வெளி உலகத்திற்கு ஊடகங்கள் மூலம் தெரிவித்தனர். ஆனாலும் தேர்தல் நடக்கும் வரையும் எந்த அதிகாரிகளும் எந்த மந்திரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டு போடும் தேதியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

“நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக இரண்டு மாதத்திற்கு முன்பே சொல்லிவிட்டோம் யாரும் வரவில்லை. இப்போது தேர்தலில் ஓட்டு போடும் சமயத்தில் பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை. அதனால் யாரும் இங்கு இப்போது வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். எங்கள் போராட்டத்தையும், எங்கள் வலியையும் புரிந்து கொள்ளாததால் திருப்பி அனுப்பிவிட்டோம்” என்று மக்கள் கூறினர்.

மேலும், “திரும்பிச் சென்ற அமைச்சர், ரவுடிகளை இரண்டு வேன்களிலும் ஏழு, எட்டு பைக்குகளிலும் அனுப்பி வைத்து எங்களை மிரட்டுவதற்கு, தாக்குவதற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இறங்கி எங்களை தாக்க வருவது அறிந்து ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விரட்டினோம். அவர்கள் ஓடிவிட்டனர். போலீசு கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் சத்தம் போட்ட பின் ஒரு வேனை மட்டும் போலீசு பிடித்துக் கொண்டு வந்தது. அதுவும் ஒருவரை மட்டும் கைது செய்து கொண்டு வந்தார்கள். அந்த ஒருவரின் முகத்தையும் எங்களுக்கு காட்டவில்லை. நாங்கள் போலீசு வேனை மறித்து நின்றோம்” என்று கூறினர்.

 

பொட்டலூரணி மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலை

அது மட்டுமல்லாமல் “எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்; 2000 தருகிறோம்’ என்று கம்பெனி சார்பாக முயற்சி செய்தார்கள். தன்மானம், சுயமரியாதை கொண்ட மக்கள் அதை முறியடித்துள்ளனர்.

பக்கத்து ஊரைச் சேர்ந்த ரவுடியை கள்ள ஓட்டு போடுவதற்காக ஓட்டு போடும் பூத்தில் உட்கார வைத்தார்கள். எந்த அதிகாரிகளும் போலீசுத்துறையும் கேட்கவில்லை. மக்கள் அதை தட்டி கேட்டு அவரை வெளியே அனுப்பியுள்ளார்கள். ஆனால், அதற்கும் அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து விட்டார்கள் என்று மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

இந்த தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு தான் சில ஊடகங்கள் வந்து மக்களை பேட்டி எடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய திமுக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்காக எப்படி அந்த ஏழு கிராமத்து மக்களை வஞ்சித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நிற்கிறதோ, அதேபோல் இங்கு இந்த கிராமத்தை வஞ்சித்து ஆலை முதலாளிகளுக்கு துணையாக இருக்கிறது. இவர்களுடைய நியாயமான போராட்டத்தை ஒடுக்குகிறது.

இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். விவசாயம் செய்யும் இடத்தில் வேலை செய்ய முடியாத அளவிற்கு அவ்வளவு துர்நாற்றம் வருகிறது. “இந்த தொழிற்சாலை உள்ளூர்காரர்களுக்கு சொந்தமானது அல்ல. எத்தனையோ நல்ல தொழிற்சாலைகள் இருக்கிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள். இப்படி காற்றை மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலை தான் இங்கு வைக்க வேண்டுமா? ஏன் அவங்க ஊர்ல போய் வைக்க வேண்டியதுதானே?” என்று மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

“கேரளாவில் இருந்து மீன் கழிவை கொண்டு வந்து இங்கு நடத்துவதற்கு தமிழ்நாடும் எங்கள் ஊரும் தான் குப்பை தொட்டியா? இது ஒரு மினி ஸ்டெர்லைட் மாதிரி” என்று அந்த மக்கள் கோபம் கொப்பளிக்க பேசுவதில் இருந்து அவர்களுடைய நியாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நாற்றம் பிடித்த தொழிற்சாலையில் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் யாரும் வேலைக்கு செல்வதில்லை. வட மாநில தொழிலாளர்களை கூட்டிக்கொண்டு வந்து கொத்தடிமை போல் அந்த கூடாரத்துக்குள்ளே அடைத்து வைத்துக் கொண்டு வேலை வாங்குகிறார்கள்.

ஒரு கிராமத்தில் நல்ல காற்றும், நல்ல நீர்நிலையும் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை உணர்ந்தால், இந்த கிராம மக்கள் சுய உணர்வோடு போராடுகிறார்கள். அந்த மீன் கழிவு ஆலையில் அக்கம் பக்கத்தில் சில கிராமங்களில் காசை வாங்கிக்கொண்டு பலர் ஒதுங்கிக் கொண்ட நிலையில் இந்த மக்கள் தன்மானத்தோடு தங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் இந்த தொற்று நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக அதிகார வர்க்கத்திடமும் அரசியல்வாதிகளிடமும் தங்கள் கோரிக்கையை நிலை நாட்டுவதற்காக தொடர் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

“இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பார்கள்; மக்கள் அதிகாரமும் உங்களுக்கு துணை நிற்கும்” என்று நாங்கள் கூறிவிட்டு வந்துள்ளோம்.

ஒட்டுமொத்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் சுற்றுப்புற சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் இந்த போராட்டம் ஒரு முன்னுதாரணமாக மக்களுக்கு வழிகாட்டக்கூடியதாக அமையும் என்று நம்புகிறோம்.


தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க