கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கான தொடர் போராட்டங்களை சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் ஒன்றுபடுவோம்!
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியானது சாலை விதிகளை மீறி ஊரின் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளது. அத்துடன் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வணிக வாகனங்கள் மீது அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகமானது கடந்த முறை நான்காண்டுகளில் சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கு 2 முதல் 4 லட்சம் வரை கட்டணத்தை ஒரு வாரத்தில் செலுத்துமாறு அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜூலை இரண்டாம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகமானது உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி வழியாக செல்லும் சேவை சாலையை அடைக்க தடுப்புகளை அமைத்தது. எதற்கு சேவை சாலையினை அடைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக சுங்கச்சாவடியை கடக்க விரும்பாத வாகனங்கள் சேவை சாலையினை பயன்படுத்தி உச்சப்பட்டி தர்மத்துப்பட்டி வழியாக பிரதானசாலையினை அடையும். இதனால் அதிருப்தி அடைந்த சுங்கச்சாவடி நிர்வாகம் சேவை சாலையினை அடைத்தது.
இதனை அறிந்த சுற்று வட்டார மக்கள் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்ட குழுவினர், வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் வணிகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலிலும் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 50 பேர் போலீசால் கைது செய்யப்பட்டனர் மக்களின் போராட்டங்கள் மூலமாக சேவை சாலையினை அடைக்கும் முயற்சியை நிர்வாகம் கைவிட்டது.
படிக்க: டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் | விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
இம்மாதிரியான சுங்கச்சாவடிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் ஜூலை 8 ஆம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு மாதாந்திர 34% சலுகை கட்டணம் ரத்து செய்யப்பட்டு, 50% வாகன கட்டணம் பத்தாம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்ட குழு அமைப்பாளர் ராஜா கூறுகையில் வணிக வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்கப்பட்டால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் வர்த்தகத்தை நம்பி வேலை செய்யும் மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். மேலும், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் சிட்கோவிலுள்ள பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் என்றும், கட்டண உயர்வுக்கு எதிராக சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் வணிகர்கள், வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் மறியல், முற்றுகைப் போராட்டங்களை பெரிய அளவில் நடத்துவோம் என்றும், இதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுமாயின் அதற்கு சுங்கச்சாவடி நிர்வாகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
ஏன் இந்த போராட்டம்? குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாசிச மோடி அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய், 70 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையும் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் நாடு முழுவதும் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்த நிலையில் அது மக்களவைத் தேர்தலில் தன்னுடைய வாக்கு சதவீதத்தை குறைத்து விடும் என்று பாசிச கும்பல் அஞ்சியது. அதனால் தற்காலிகமாக கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.
ஆனால் ஜூன் 1 தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜூன் 3 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டண உயர்வை நாடு முழுக்க அமல்படுத்தியது பாசிச மோடி அரசு.
படிக்க: திருமங்கலம் டோல்கேட்டின் அடாவடித்தனம் – முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் தொழிலாளர்கள் கூறுகையில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. ஆனால் மாறாக 50% கட்டணம் வசூலிப்பதால் எங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். ஒருபுறம் டீசல் பெட்ரோல் விலை உயர்வு, மற்றொருபுறம் சுங்க கட்டணம் உயர்வு; எங்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர்.
சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? முக்கியமாக 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒத்தக்கடை வந்த ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடியை அகற்றுவேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதி தற்போது என்னவானது? ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் சுங்கச்சாவடியை அகற்றுவதற்கு இந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? ஓட்டுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி எந்த பயனும் இல்லை; போராட்டங்கள் மூலமே நமக்கான தீர்வை பெற முடியும் என்று தொடர் போராட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இன்று சுங்கச்சாவடிக்கு எதிராகவும் கட்டண உயர்வுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகள், வாகன ஓட்டுநர் சங்கங்கள், வணிகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இந்த மாதிரியான தொடர் போராட்டங்கள் மூலமே சுங்கச்சாவடிகளையும், பாசிச மோடி அரசு அமல்படுத்திய கட்டண உயர்வையும் ரத்து செய்ய முடியும். அதற்காக மக்களுடன் களத்தில் ஒன்றுபடுவோம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube