மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உச்சப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் சேவை சாலையை கப்பலூர் சுங்கச் சாலை நிர்வாகம் அடைக்க முயன்றது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக பின் வாங்கியது டோல்கேட் நிர்வாகம்.
திருமங்கலத்தில் இருந்து கப்பலூர் டோல்கேட்டுக்கு செல்லும் பாதையில் உச்சப்பட்டி தர்மத்துப்பட்டி கிராமத்தின் பாதை இணைப்பு பாதையாக நான்கு வழிச் சாலையில் இணைகிறது.
அந்த இரண்டு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் “சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க இந்த கிராம பாதையை பயன்படுத்துகிறார்கள்” என்று கூறி அந்த பாதையை டோல்கேட் நிர்வாகம் அடாவடியாக அடைக்க முயன்றுள்ளது.
ஏற்கெனவே இந்த நான்கு வழிச் சாலை வந்த பின்பு பல்வேறு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள், நீர்த்தேக்க மற்றும் பாசனப்பகுதிகள்,போக்குவரத்து பகுதிகள், மற்றும் கிராமப்புறங்களில் இருந்து திருமங்கலம் நகருக்கு வரக்கூடிய பல்வேறு இணைப்பு குறுக்கு சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வரம்புக்கு உட்பட்ட அளவில்தான் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
படிக்க: தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்
நகர்ப் பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைக்க வேண்டும். ஆனால், இந்த டோல்கேட் சட்ட விரோதமாக திருமங்கலம் நகர்ப் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக டோல்கேட் எதிர்ப்பு குழு என்ற ஒன்றை உருவாக்கி திருமங்கலம் வியாபாரிகள், அனைத்து வாகன ஓட்டிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புறக்கணிப்பு செய்வதாகவும் அறிவித்திருந்தனர்.
நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருந்த போதும், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தபோதும் அதைப் பற்றி எல்லாம் டோல்கேட் நிர்வாகம் துளியும் பொருட்படுத்தவில்லை.
மேலும் மேலும் மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு மோதல் போக்குகள், சச்சரவுகள் தினந்தோறும் நடந்த வண்ணமே உள்ளன.
படிக்க: சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்
தென்னிந்திய அளவில் இருக்கக் கூடிய டோல்கேட் நிர்வாகத்தில் திருமங்கலம் டோல்கேட் தான் ஒரு அடாவடியான டோல்கேட் என்ற அளவுக்கு மிகவும் மோசமாக குண்டர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுவது என்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது. பொது மக்களும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த கிராம சாலையைப் பயன்படுத்தி கட்டணமின்றி வாகனங்கள் சொல்கிறது என்று ஆத்திரத்தில் கிராமத்துக்கு செல்லும் பாதையே மூடும் அளவுக்கு ஆடாவடியாக டோல்கேட் நிர்வாகம் சென்றுள்ளது.
அதற்காக நெடுஞ்சாலை ஆணையத்திடம் “இந்த பகுதியில் விபத்துகள் அதிகமாக நடப்பதால் தடுப்பு அறன் அமைக்க வேண்டும்” என்று அனுமதி வாங்கிக்கொண்டு, மோசடியாக அந்த கிராம பாதைகளை அடைக்க முயற்சிகளை எடுத்துள்ளது டோல்கேட் நிர்வாகம்.
இதை அறிந்து கொண்ட உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி, கப்பலூர் பொதுமக்கள் உடனடியாக நூற்றுக்கணக்கான பேர் திரண்டு டோல்கேட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
உடனே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசார் டோல்கேட் நிர்வாகத்தின் சார்பாக “அனுமதி வாங்கி தான் இதை செய்கிறார்கள். சட்டப்படி இதை தடுக்க முடியாது. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் இறங்கினர். மக்கள் போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய டோல்கேட் நிர்வாகம் தற்காலிகமாக இந்த பணியை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
டோல்கேட் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அளித்தும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகின்றனர். இந்நிலையில், உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி மக்களின் தற்போதைய போராட்டம் டோல்கேட் நிறுவனம் தற்காலிகமாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு பணியவைத்துள்ளது.
சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த டோல்கேட்டை திருமங்கலம் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தாமல் மக்களுக்கு நிம்மதி ஏற்படாது. ஆகையால் இந்த டோல்கேட்டை அகற்ற விரிந்த அளவில் ஒரு மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்த வேண்டிய தேவை உள்ளது.
களச்செய்தியாளர்,
மதுரை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube