சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்

இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது.

துரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் பெங்களூரு –  கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், கடந்த 13 ஆண்டுகளாக சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் நகர் எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது.

இந்த சுங்கச்சாவடி வந்ததிலிருந்து வாகன ஓட்டிகளுக்கும்  சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது மாதாந்திர அனுமதி சீட்டு (பாஸ்) எடுக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கட்டணம் செலுத்த மறுத்தால் திமிர்த்தனமாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்கின்றனர்.

மேலும் வேலையாட்கள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து ரவுடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுங்கச்சாவடியை வேறு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்தது. இந்த நிறுவனம் வந்ததிலிருந்து இந்த சுங்கச்சாவடி பிரச்சனை மீண்டும் அதிகமாகி உள்ளது. இதனைக் கண்டித்து 22/11/2022 அன்று திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என நிறுவனம் ஒப்புக்கொண்டது.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை


சுங்கச்சாவடியில் இதற்கு பிறகு கடந்த சில மாதங்களாக மீண்டும் இப்பிரச்சனை தலைதூக்கியது. மீண்டும் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனைக் கண்டித்து சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.

அது தொடர்பாக இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மு. சாந்தி தலைமை வகித்தார். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோட்டாட்சியர் ஆதார் அட்டையை காட்டி சுங்க கட்டணம் இல்லாமல் உள்ளூர் வாகனங்கள் செல்லலாம் என தெரிவித்தார். இது தவறும் பட்சத்தில் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிப்போம், ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம் என்றனர் பொதுமக்கள்.

இந்த கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதே காரணம் எனக் கூறி வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர். மேலும் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டு சுங்கச்சாவடி நிர்வாகம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராமல் இருந்ததால், பேச்சுவார்த்தை நிறைவடைந்து வெளியே வந்து வாய்மொழியாக அறிவித்து விட்டு வெளியேற முயற்சித்தனர்.

வாய்வழியாக வந்த எந்த உத்தரவையும் இந்த சுங்கச்சாவடி நிர்வாகம் மதித்ததேயில்லை. எனவே வெளியே  வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாகராஜனின் காரை போராட்டக் குழுவினர் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து திட்ட இயக்குனர் மீண்டும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குள் சென்றனர் இதனைத் தொடர்ந்து காரை சிறைப் பிடித்தவர்களிடம் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கார் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து திட்ட இயக்குனர் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் புறப்பட்டு சென்றனர்.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!


மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது. இதில் எஸ் கே எம், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் நாகராஜ் மற்றும் தோழர் பரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலைகளை தனியார்மயப்படுத்தி நாடெங்கும் உள்ள சாலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் அன்றாடம் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். அடிக்கடி வரும் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டங்களால்  அவ்வப்போது தீர்வுகள் கிடைத்தாலும், சாலைகளை தனியாரிடமிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு வந்தாலொழிய இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க