13.03.2025

வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!

மக்கள் விரோத சுங்கச்சாவடிகளை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்!

பத்திரிகை செய்தி

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமலேயே இந்த இரு வழிச்சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மக்கள் எதிர்ப்பை மீறி 12.03.2025 அன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சென்னை பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் குறித்த காலம் முடிந்தும் மக்களிடம் பணத்தை கொள்ளை அடித்து வருகின்றன. மேலும் திருமங்கலம் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக ஒன்றிய அரசு மாநில அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சாலை அமைக்கும் பணியை அரசு கைகழுவி தனியாருக்கு ஒப்படைத்தது. குறிப்பிட்ட ஆண்டுகளில் சாலை பணியை முடித்து அதற்குண்டான செலவீனத்தை குறிப்பிட்ட ஆண்டுகளில் எடுத்துவிட்டு மீண்டும் சாலையை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அதன் விதி. இதன்படி இந்த நாட்டில் எங்கேயும் சுங்கச்சாவடிகள் செயல்படுவதில்லை.

பணத்தை கட்டி விட்டு பயணம் செய்ய வேண்டும் என்ற விதியினால் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் முன் தொகையாக மக்களால் கட்டப்படுகின்றன. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறும் தொகை மிக மிக அதிகம். ஆனால் சாலை வசதிகள் எதுவும் இன்றி பராமரிப்பு ஏதுமின்றி பல நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.

ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது. மேலும் சுங்கச்சாவடிக்கு எதிராகப் போராடிய வத்தலகுண்டு பகுதி மக்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க