ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது

டெல்லி புராரி மருத்துவமனையில் (Burari Hospital) அரவிந்த் கெஜ்ரிவால் அரசை எதிர்த்து துப்புரவுத் தொழிலாளர்கள் பத்து நாட்களாக போராட்டம் நடத்தினர். ஜனவரி 23 அன்று கெஜ்ரிவாலின் உருவப்படத்தை வைத்து சவ ஊர்வலம் நடத்தியும், தங்கள் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

”டெல்லி அரசு மருத்துவமனையில் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு துப்புரவுப் பணிகளைக் கையாளும் ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை. உரிய தேதியில் சம்பளத்தை பெறுவதற்கே போராட வேண்டிய நிலைதான் உள்ளது. மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள மேற்பார்வையாளர்களின் தயவில் தான் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற நிலை உள்ளது” என்று சஃபாய் கம்கர் யூனியன் (Safai Kamgar Union – SKU) தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் கெளதம் கூறினார்.

மேலும் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஹரிஷ் கெளதம் கூறியதாவது:
”மருத்துவமனையில் உள்ள அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது. அதாவது சில சமயங்களில்  ₹8,000, சில சமயங்களில் ₹11,000 என்ற அளவில் தான் கொடுத்துள்ளது. சம்பளத்தை உரிய தேதியிலும் கொடுப்பதில்லை. ஊதியம் வழங்குதல் சட்டம், 1936 இன் படி, முந்தைய மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 7 அல்லது 10 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்த நிறுவனம் துப்புரவுத் தொழிலாளர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை, ஜனவரி 19, 2024 அன்று தான் கொடுத்தது. அதுவும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிறகு தான்.

தொழிலாளர்களின் புகார்களுக்கு  ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் தீர்வு காணாமல், புகார் அளித்தவர்களை பணி நீக்கம் செய்துவிடுகிறது. ஒப்பந்த நிறுவனங்களின் சுரண்டல் நடைமுறைகளையும், பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கடந்த ஆண்டு, ஒப்பந்த நிறுவனத்தின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பெண் துப்புரவுத் தொழிலாளர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இரண்டு எஃப்ஐஆர்கள் டெல்லி போலீசால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டெல்லி போலீசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தை (குறிப்பாக வால்மீகி சமூகத்தை) சேர்ந்தவர்கள். பெரும்பாலும் இந்தத் தொழிலாளர்கள் தங்களை பணிக்கமர்த்துபவர்களால் சாதிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்த ஒப்பந்த நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ₹30,000 முதல் ₹40,000 வரை லஞ்சம் வாங்குவதும் நடக்கிறது. நீங்கள் தொகையைச் செலுத்தவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்காது என்று வேலை தேடி வருபவர்களிடம் கூறி லஞ்சம் வாங்குகின்றனர்.”


படிக்க: 350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!


மருத்துவமனை வளாகத்திலும், முதலமைச்சரின் இல்லத்திலும் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது போலீசு நடவடிக்கை ஏவப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்த சில தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி நடத்தி கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்துள்ளது.

டெல்லி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் ஒப்பந்த நிறுவனங்கள் எதேச்சதிகாரமான முறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதையும் பணிநீக்கம் செய்வதையும் ஒப்புக்கொண்டார். அரசு நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமானாலும் புதிய ஒப்பந்த நிறுவனங்களை பணியமர்த்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினரைக் கட்டாயம் தக்கவைக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த உத்தரவு எங்குமே பின்பற்றப்படுவதில்லை.

குளோபல் வென்ச்சர்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 25 அன்று தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆனால் இப்பிரச்சனை குறித்து சுகாதார அமைச்சர் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

இந்த அவலநிலை என்பது டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் சந்திப்பது மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையும் இது தான்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க