350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் போர்க்குணம் நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கோ இப்போராட்டம் தென்படவேயில்லை.

0

புது டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் (பல்நோக்கு மருத்துவமனை) தூய்மைப் பணியாளர்கள் ஜுன் 1, 2022 முதல் தற்போது வரை 350 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு, மே 31 அன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கிட்டத்தட்ட 400 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இத்தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு அமர்த்தக்கோரி நாள்தோறும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, ஒப்பந்ததாரர்கள் மாற்றப்படும்போது தொழிலாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதையும்மீறி, 400 பேரில் 150 பேருக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது; அதுவும் ₹30,000 லஞ்சம் பெறப்பட்ட பின்பே வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் வழங்காத 250 பேருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்ததிலிருந்து உரிமை மறுக்கப்பட்ட இத்தொழிலாளர்கள் டிசம்பர் 2017-இல் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்-இன் (All India Central Council for Trade Unions – AICCTU) கீழ் கலாவதி சரண் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் (Kalawati Saran Contract Karamchari Union) அமைக்கப்பட்ட பின்னர்தான் சில உரிமைகளை பெற்றுள்ளனர்.

சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பாக, ஒப்பந்ததாரர்களும் மருத்துவமனையும் கூட்டு சேர்ந்துகொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை முறையாக வழங்காமல் இருந்தனர். குறைந்தபட்ச ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே வழங்கி வந்தனர். பல சட்ட வழக்குகளுக்கு பின்பு தான், 2019-ஆம் ஆண்டில் ஊதியம் உயர்த்தப்பட்டது.


படிக்க: தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!


டிசம்பர் 29, 2021 அன்று மண்டல தொழிலாளர் ஆணையர் (RLC(C)) தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்படாத ஊதியத்தை (unpaid wages) வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், வழங்கப்பட வேண்டிய ₹1.61 கோடி ஊதிய பாக்கி தற்போது வரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தான், கொரோனா தொற்று காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த 400 தூய்மை பணியாளர்கள் மே 31, 2022 அன்று தீடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

கொரோனா தொற்று காலத்தின்போது, இத்தொழிலாளர்களை கடுமையாக சுரண்டியது மருத்துவமனை நிர்வாகம். எந்நேரமும் இவர்களின் சேவை தேவைப்படும் என்பதால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியிலேயே தூங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவக் கழிவுகளை வெறும் கைகளில் கையாளும் அவலநிலையில் தான் தொழிலாளர்கள் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தங்கள் உரிமைகளை கேட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான், அவர்களை நீக்கும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்ததாரரை மாற்றியுள்ளது. தொழிலாளர் ஒற்றுமையை உடைப்பதற்காகவே சுலப் இன்டர்நேஷனல் (Sulabh International) என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு பதிலாக கோரக் செக்யூரிட்டி (Gorakh Security) என்ற புதிய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டுள்ளார்.


படிக்க: தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!


போராட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இத்தொழிலாளர்கள் பலமுறை போலீசு அடக்குமுறையை சந்தித்துள்ளனர். ஜூன் 20, 2022 அன்று எண்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு 10 முதல் 15 தொழிலாளர்கள் மட்டுமே மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே போராட அனுமதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய ஒரு வருடமாக போராடிவரும் இத்தொழிலாளர்கள், தங்களின் உணவுத் தேவைக்காக மருத்துவமனை முன்பாக உள்ள லங்கரை சார்ந்து உள்ளனர். லங்கர் (langar) என்பது சீக்கிய சமய வழிபாட்டுத் தலமான குருத்துவாராக்களில் உணவு வழங்கும் சமையல் கூடம். இதே நிலை நீடித்தால், தங்கள் குழந்தைகள் திருடர்களாக மாறும் அவலநிலைதான் ஏற்படும் என்று போராடும் தொழிலாளி ஒருவர் வேதனையுடன் கூறுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு அவல நிலையிலும், தங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் போர்க்குணம் நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கோ இப்போராட்டம் தென்படவேயில்லை.

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்திற்கு பணிக்கமர்த்தப்பட்டு ஈ.எஸ்.ஐ – பி.எஃப் போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படாமல் மனிதத்தன்மையற்ற முறையில் ஒட்டச் சுரண்டப்படுவது கலாவதி சரண் மருத்துவமனையில் மட்டும் நடப்பதில்லை. நாடு முழுவதும் இத்தொழிலாளர் விரோதப்போக்கு காணப்படுகிறது. ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் வரை தொழிலாளர்களுக்கு விடிவேதும் இல்லை.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க