இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்

உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.

மார்ச் 27 அன்று அகில இந்திய ரயில் இயக்கும் ஊழியர்கள் சங்கம் (AILRSA – All India Loco Running Staff Association) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட லோகோ பைலட் (என்ஜின் டிரைவர்) மற்றும் உதவி பைலட்டுகள் கலந்து கொண்டனர். ரயில்வேவின் 68 பிரிவுகளிலிருந்து ஊழியர்கள் வந்திருந்தனர். பல பிராந்தியங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்து உரையாற்றினர்.

இச்சங்கம் நடத்துகின்ற போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கும் வகையில் மஸ்தூர் ஏக்தா கமிட்டி, சி.ஐ.டி.யு, ஐ.எஃப்.டி.யூ. மற்றும் பிகுல் மஸ்தூர் தோஸ்தா ஆகிய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். பல்வேறு கோரிக்கைகளுடன் பலரும் ரயில்வே துறையில் தனியார் மயமாக்கத்தை எதிர்த்துப் பேசினர்.

மிகச் சிறிய எண்ணிக்கையில் நாடு தழுவிய அளவில் பரவிக் கிடப்பதுடன் தனித்தனியாகப் பணி புரியும் இந்த லோகோ பைலட்டுகள் நாடு தழுவிய முறையில் சங்கமாக அணிதிரண்டிருப்பதே பெருத்த வரவேற்புக்குரியதாகும்.

நியாயமான தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தங்களின் போராட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் என்ஜின்களில் தங்களுக்கு கழிப்பறை வசதி வேண்டும் என்கிற அடிப்படை கோரிக்கையைக் கூட பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இன்னும் நிறைவேற்றவில்லை என்பது எவ்வளவு அவலம்.

உயர்மட்ட குழுவின் (High power committee) பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.

நம் நாட்டில் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக சிக்னல்கள் உள்ளிட்டு பலவிதமான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தொடர்ந்து பெரிய ரயில் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல நூறு பயணிகள் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.

அரசாங்கமோ அமைச்சர்களோ அப்பொழுது மட்டும் ஹெலிகாப்டரில் பறப்பதும் தனி விமானத்தில் பார்வையிடுவதும் என்று பரபரப்பு கிளப்பி பின்னர் எப்போதும் போல அதே பழைய நடைமுறையில் எல்லாம் இயங்கவிடப்படுகின்றன. பயணிகளாகிய மக்களும் அதற்கு மேல் எதுவும் செய்வதறியாமல் ‘கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு’ பயணத்தைத் தொடர்கின்றனர்.

அது போன்ற எத்தனையோ பல சிக்கலான நிலைமைகளில் பைலட்டுகளின் சாதுரியமான செயல்பாடுகள்தான் விபத்துகளைத் தவிர்த்திருக்கின்றன. அப்படிப்பட்டவர்களைத் தெரிந்தே அயற்சிக்கு உட்படுத்துவது அறிவீனம் மட்டுமல்ல மக்களைப் பற்றி சிறிதும் அக்கறையற்ற ஆணவமாகும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க