தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான்.

தூய்மை பணியாளர்கள் மீது கிரிஸ்டல் (Krystal) தனியார் நிறுவனம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்தும் உழைப்பு சுரண்டல்!

கோவை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கிரிஸ்டல் நிறுவனத்திற்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

9.02.2023 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மாநகராட்சி நிர்ணயித்த ஊதியத்தை வழங்கவும், பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் மூன்றாவது  நாளாக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூய்மை பணியாளர்களுக்கான புதிய ஊதிய பட்டியல் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தூய்மை பணியாளர்களுக்கு 721 ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பின் வழங்காமல் இருந்ததை அடுத்து, அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 721 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, அதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

ஆனால், பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 420 ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு 721 ரூபாய் வழங்கியுள்ளதாக அரசுக்கு கணக்கு காண்பித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை சமூக நீதி தூய்மை பணியாளர் சங்க தலைவர் கவிதா அவர்கள் கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் “எங்களுக்கு கொடுத்த ஆணையின்படி ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு, கல்லூரி முதல்வர் “நீங்கள் என்ன அரசு ஊழியர்களா உங்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க”, பின், மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆணையையும் கொடுத்துப் பேசும்போதும்  “அப்படியெல்லாம் கொடுக்க உங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

படிக்க: சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் “மருத்துவமனை முதல்வரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒன்றாக தான் இருந்தனர். இப்போது அந்த அரசாணை தெரியாதது போல் எங்களிடம் கேள்வி கேட்கிறார்” என்கிறார் கவிதா அவர்கள்.

இதனை ஒப்பந்த நிறுவனமான கிரிஸ்டல் (Krystal) நிறுவனத்திடம் கூறியதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. “இவர்கள் யாரும் நமக்காக குரல் கொடுக்க மாட்டார்கள், நமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரமாட்டார்கள் நாமே போராடி பெற்றுக் கொள்வோம் என்று இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்று கூறி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

***

தூய்மை பணியாளர்கள் பேசும் போது, “நாங்கள் பணிக்கு சேர்ந்தது இரண்டு வேலைகளுக்கு மட்டுமே, ஆனால் முதல்வரோ எங்களை பல்வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிறார். குறிப்பாக நாங்கள் ஹவுஸ் கீப்பிங் பணி செய்யவே வந்துள்ளோம். ஆனால், மருத்துவமனை முதல்வர் நிர்மலா எங்களை அசிஸ்டன்ட் வேலை, கழிவுகளை அல்லும் வேலை, வெவ்வேறு தளங்களில் உள்ள மருத்துவர்களிடம் கையெழுத்து வாங்குவது என எங்களது பணி நேரம் முடிந்த பின்பும் இந்த வேலைகளை செய்ய நிர்பந்திக்கிறார்” என்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “படித்த மருத்துவர்கள் பயோ மெடிக்கல் வேஷ்டை போடுவதில்லை. கையுறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் கழிவுகள் போடும் இடத்தில் ஊசிகளை ஒரே பெட்டியில் உடைத்துப் போட்டு விடுகின்றனர். நாங்கள் மறுநாள் அந்த குப்பைகளை கைகளால் சுத்தம் செய்யும்போது அது எங்கள் கைகளில் காயத்தை ஏற்படுத்துகிறது”. இதனால் கடந்த மாதம், “சாமிநாதன் என்ற தொழிலாளிக்கு விரலில் நீடில் குத்தியது அதை நீக்கும் போது அவருக்கு ஏற்பட்ட வலி எங்கள் கண்களால் காண முடிந்தது”.

இதனை முறையாக மருத்துவர்களிடம் சென்று கூறினால் “நீங்கள் அந்தப் பணிக்கு தானே வந்தீர்கள் என்று எங்களை இழிவாக பேசுகின்றனர்”.

படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

“உடல் உபாதைகள் மற்றும் குளிப்பதற்கு வழங்கியுள்ள அறையில் குடிநீர் குழாய் முறையாக இல்லை, அந்தக் கழிவறைக்கு நாங்கள் சென்று வந்தால் அனைத்து விதமான நோய்களும் வந்துவிடும்”.

கொடுக்கப்பட்ட அறை உணவு அருந்த முடியாத துர்நாற்றம் வீசும் நிலையிலே இருக்கிறது. ஆனால், “இன்று வரை நாங்கள் அங்கு தான் அமர்ந்து சாப்பிடுகிறோம். அப்படி ஒரு நாள் உணவு அருந்தி கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த  மூர்த்தி  (கல்லூரி நிர்வாகி) உங்களை யாரு இங்க உட்கார்ந்து சாப்பிட சொன்னது, நீங்கெல்லாம் ரோட்ல போய் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று கூறியுள்ளார். அதற்கு தூய்மை பணியாளர்கள் “நீங்கள் முதலில் அங்கு அமர்ந்து சாப்பிட்டு காமிங்க பின்பு நாங்கள் அங்கு சாப்பிடுகிறோம்” என்று கூறி அதிகார திமிருக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

“நாங்கள் பணிக்கு போகும் நேரம் காலை 7 மணி. ஆனால் பணி முடிந்து வீடு செல்வது என்பது எந்த ஒரு நேரம் வரம்பின்றி வேலையில் ஈடுபடுகிறோம்”.

“பலமுறை நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரர் நிறுவனத்திடமும் கூறியும் எந்தவொரு கோரிக்கையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இது எங்களை மனதளவில் பாதிப்படையை செய்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறுகின்றனர்.

***

இப்போராட்டத்தை, சீர்குலைக்கும் வகையில் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணியை தொடர கிரிஸ்டல் நிறுவனம் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதை கேள்விக்கேட்ட போராடும் தூய்மை பணியாளர்களை “நீங்கள் அனைவரும் சேர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியுள்ளீர்கள், உங்களை கைது செய்வோம் மண்டபம் தயாராக உள்ளது” என்று போராட்டத்தை கலைக்க முயற்சித்து போலீசை குவித்து மிரட்டியுள்ளனர்.

“மருத்துவமனைக்கு உள்ளே அமர்ந்து போராடக்கூடாது உங்கள் நிறுவனத்தில் போய் போராடுங்கள்” என்று பெண் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் இந்த மருத்துவமனையில் தான் வேலை செய்கிறோம். அப்படி சொல்லி தான் எங்களை Krystal நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. எனவே நாங்கள் இங்கு அமர்ந்து தான் போராடுவோம். மும்பைக்குச் சென்று அல்ல” என்று அனைவரும் கேள்வி கேட்டவுடன் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இப்படி அவர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டல் நிறுவனத்தின்  மேலாளர் தினேஷ், கவிதா அவர்களை “ஏ கவிதா இங்க வா” என்று ஒருமையில் அழைத்தார். அவர்களிடம் கேட்கும் போது “எப்போதும் இப்படித்தான் எங்களை அழைக்கின்றனர், இவர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் படித்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் எங்களை மனிதனாக கூட மதிப்பதில்லை” என்று வேதனையோடு கூறுகின்றனர்.

***

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான். இந்த அரசு தனியார்மய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதுதான் தூய்மை பணியாளர்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம்.

பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் தனியாருக்கே வழங்குவோம் என்று இந்த அரசு கட்டமைப்பு முதலாளித்துவ உழைப்பு சுரண்டலுக்கு ஆதராவாக நிற்கிறது.

உழைப்பு சுரண்டலுக்கு எதிராக அனைத்து தூய்மை பணியாளர்களையும் களப்போராட்டத்தில் ஒன்று சேர்க்கிறது முதலாளித்துவ விசக்கிருமி. அதை சுத்தம் செய்வது தான் நாம் அனைவரின் கடமையாகும்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க