31.01.2023

தொடரும் ஆதிக்க சாதி வெறியர்களின் வெறியாட்டம்! சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு மீண்டும் ஓர் உதாரணம்!

கண்டன அறிக்கை

சேலம் மாவட்டம், திருமலைகிரி ஊரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அது, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 26.01.2023 அன்று மாலை பிரவீன்குமார் என்ற பட்டியலின சமூகத்தை (பறையர்) சேர்ந்த மாணவன் வழிபட கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வன்னியர் சாதியை  சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். அந்த மாணவனை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

தி.மு.க-ஐ சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 27.01.2023 இவரது தலைமையில் கோவிலுக்கு அருகில் பெற்றோருடன் மாணவனை வரவழைத்துள்ளனர். ஆதிக்க சாதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கீழ்தரமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளான் ஆதிக்க சாதிவெறி மாணிக்கம்.

எங்கள பகைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தொழில் பண்ண முடியாது, ஊருல இருக்கவே முடியாது. அருகிலிருந்த மற்றொருவர் சாதி வெறியுடன் “இவன் யாரோ சொல்லி கொடுத்துதான் கோவிலுக்கு உள்ளே வந்திருக்கான் யாரு சொன்னதுனு சொல்லு, நா பாத்துக்கிறேன்” என்று ஆதிக்க சாதி திமிரோடு பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியுள்ளான்.

28.01.2023 அன்று காவல்துறை இரு தரப்பு மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவிட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் தான் அப்பகுதி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோ 30.01.2023 அன்று சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதப் பொருளானது. இந்த ஆதிக்க சாதி வெறியனை “உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்காவிட்டால் திராவிட மாடல் ஆட்சி என்பதை தீண்டாமை மாடல் ஆட்சி என பொதுவில் அம்பலப்படுத்துவோம்” என்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதோடு அல்லாமல் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்ப்பவர்கள் இந்த சாதிவெறியனை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தி ஊரைவிட்டு அடித்து விரட்டியாக வேண்டும் என்று கொந்தளிக்க தொடங்கினர்.


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இதன் விளைவே  தி.மு.க, ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்தது. அப்போதும் எதிர்ப்புகுரல்கள் அடங்கவில்லை. மக்கள் மத்தியிலும், கூட்டணி கட்சியினர், ஜனநாயக சக்திகள் மத்தியிலும் இருந்து நெருக்கடி வந்த பின்னரே கைது நடந்துள்ளது.

இந்த திராவிட மாடல் ஆட்சி சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எதிரானது அல்ல,  தகவல் தெரிந்த உடனே சாதிவெறியனை கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக கோவிலுக்குள் சென்று வழிபடுவதை உறுதிபடுத்தி அதிகாரிகள் கண்கானிக்க வேண்டும்.

***

குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் புதுகோட்டை வேங்கைவயல், மதுரை காயம்பட்டி, விருத்தாசலம் சாத்தக்கூடல், சேலம்  என ஆதிக்க சாதியினரின் வெறியாட்டம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இது ஒவ்வொரு ஊரிலும் நடப்பது தான் என்று கடந்துசெல்லாமல், அரசின் கவனத்திற்கு வரும் இதுபோன்ற சாதிவெறி சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும்.

கோவிலுக்குள் நுழைந்த மாணவன், சாதி இல்லாத சமூகமாக மாற வேண்டும் என்றுகூட கருதியிருக்கலாம். ஆனால் இந்த பார்ப்பனிய சித்தாந்தமும் வருணாசிரம கோட்பாடும் மீண்டும் அந்த சாதி என்னும் சாக்கடைக்குள்ளேயே பட்டியலின மக்களை தள்ளிவிடுகிறது.


படிக்க: சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!


இன்று, பல கிராமங்களில் சாதி பிரிவினையை வளர்ப்பதும், கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே. பட்டியலின மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே பிரச்சினையை வளர்க்கும் நபர்களை தீனிப்போட்டு வளர்த்து வருகிறது காவி கும்பல்.

இதுபோன்ற சாதிவெறியர்களையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

ஆதிக்க சாதி வெறியர்களையும் அவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிப்போம்!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க