22.01.2023
இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்!
தமிழ்நாடு அரசே!
விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!
தீண்டாமை குற்றங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதி வெறியர்களின்
அடிப்படை உரிமைகளை ரத்து செய்!
பத்திரிகை செய்தி
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி, இறையூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டு, அவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மனித சமூகமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் கூட இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
போலீஸ் விசாரணையில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்படுவது வெளியாகி அம்பலப்பட்ட பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
படிக்க : புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்
கோவையில் கார் சிலிண்டர் வெடித்தவுடன், தமிழ்நாடு போலீசும் தேசிய புலனாய்வு முகமையும் மேற்கொண்ட அவசர அவசர கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்றன. இந்த விசாரணையை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது போலீசும் அரசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் உணர முடியும்.
தமிழ்நாட்டில், ஆதிக்க சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆணவ படுகொலைகள், தாக்குதல்கள் என மேற்கொண்டு வரும் வன்முறை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற ஒன்றாகும். இந்த நிலையில்தான் அதிக்க சாதி சங்கங்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று இருக்கின்றன. ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே அரசும் போலீசும் இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ம் பி.ஜே.பி.யும் ஆதிக்க சாதி வெறியர்களை வெளிப்படையாகவே ஆதரித்து செயல்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த ஒரு வன்முறை குற்றத்திலும் ஆதிக்க சாதி வெறியர்கள் முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் செயல்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் குறையாமலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆதிக்க சாதி வெறியர்கள், தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தீண்டாமை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பி.சி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.
படிக்க : குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ
தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். அவர்களை ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிப்பு செய்ய வேண்டும். அவர்கள் மீதான குற்றங்கள் உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் இந்த சமூகத்துக்கே எதிரான குற்றங்களாக வரையறுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக பள்ளிக்கூடம் கட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனியாக தண்ணீர்த்தொட்டி அமைப்பது போன்றவை அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கின்றது.
அதே வேளையில், மேற்கண்ட கோரிக்கைகள் சமூக ரீதியாக மக்களிடத்திலே சிந்தனை மாற்றம் வரும் வகையில் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் போராட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321