ஜனவரி 30 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் (overhead water tank (OHD) operators) ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு-இன் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தூய்மை காவலர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் வழங்க வேண்டும்; பொங்கல் போனஸ் ₹3000 வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ₹3 லட்சம் பணிக்கொடையும் ₹3000 மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை போல, பத்து வருடங்களுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 12,618 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
படிக்க: மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !
“ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கான அரசாணை (நிலை) எண். 303 (நாள்: 11.10.2017) வெளியிடப்பட்டு 63 மாதங்கள் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் நிரந்தரமாக்குவதற்கான அரசாணை (நிலை) எண். 385 (நாள்: 10.01.2010), ₹15000 கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 256 (நாள் 28.05.2021), குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் அரசாணை (நிலை) எண். 62 (2D) (நாள்: 11.10.2017), மாதாமாதம் 5-ஆம் தேதியன்று ஊதியம் வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 89, மேல்நிலை ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணை (நிலை) எண். 20 (நாள்: 04.02.2021) போன்ற பல்வேறு அரசாணைகள் உள்ளன. அவை பின்பற்றப்படுவது தான் இல்லை” என்று தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் சந்தானம் கூறினார்.
“வருகிற தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹1000 – ₹2500 மட்டுமே வழங்கப்படுகிறது; இதனை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று மாநில ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது. 40,276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 40,000-ம் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், பாஜக அரசு 66,025 தூய்மை பணியாளர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்தியது. அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹2600 வழங்குவதற்காக ₹206.04 கோடி நிதியையும் ஒதுக்கியது. அரசு நேரடியாக ஊதியம் வழங்கினால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தூய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதனால் சுய உதவி குழுக்கள் போன்றவற்றின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஊதியத்தை வழங்கி வருகிறது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் ஊதியம் ₹2600-இல் இருந்து ₹3600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
படிக்க: தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக பணி புரியும் ஊழியர்களுக்கு தினசரி கூலியாக ₹451 வழங்கப்படுகிறது. இதில் வாகனம், எரிபொருள், உணவுக்கான செலவுகள் ₹200. மீதம் இருக்கும் ₹250-ஐ கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட 13,000 தொழிலாளர்கள் இதில் பணி புரிகின்றனர். அடுத்த நாள் வேலை இருக்குமா என்ற உத்தரவாதமற்ற நிலையே இவர்கள் நிலை.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (ஓ.எச்.டி) ஆபரேட்டர்களின் அடிப்படை ஊதியத்தை ₹2600-இல் இருந்து ₹4000-ஆக ஏப்ரல் 2021 முதல் வழங்குவதற்கான உத்தரவை முந்தைய அதிமுக அரசாங்கம் பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. சீரான ஊதியம் வழங்க அரசு அக்கறை காட்டுவதில்லை.
திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.
பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்