கொல்கத்தாவில் கழிவுநீர் வடிகால் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் குழாய் உடைந்ததில் கழிவு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று (பிப்ரவரி 2) கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான பந்தலா தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் வடிகால் குழாய் மற்றும் கழிவு நீர்த் தொட்டியில் உள்ள ரசாயன கழிவுகளை முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் இன்று காலை 9 மணிக்கு கைகளால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென குழாய் உடைந்ததில் 10 அடி உயரத்திலிருந்து கழிவு நீர் தொட்டியில் விழுந்த மூன்று தொழிலாளர்களும் ரசாயன கழிவு நீரில் மூழ்கி கொடூரமான முறையில் இறந்துள்ளனர்.
ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பற்றியோ அவர்களின் குடும்பங்களைப் பற்றியோ அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அதன் காரணமாகவே கழிவு நீர்த் தொட்டியில் விழுந்த நான்கு மணி நேரத்திற்குப் பின்பு அதாவது மதியம் 1:30 மணிக்குத் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மூன்று தொழிலாளர்களையும் சடலமாக மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கிவிடுவார்கள் என்கிற அச்சத்தில் அப்பகுதியைப் பார்வையிட வந்த மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று செய்தியாளர்களிடமும், உள்ளூர் மக்களிடமும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது வரை கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் உடைந்த வடிகால் குழாய் யாருடைய வரம்பிற்குள் வருகிறது என்று தற்போது வரை தெரிவிக்கவில்லை. மூன்று தொழிலாளர்களின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாறாக போலீசார் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தொழிலாளர்கள் கழிவு நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா அல்லது விசவாயு தாக்கி உயிரிழந்தார்களா என்பது தெரியவரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கும் விதமாக அயோக்கியத்தன பதிலைத் தெரிவித்துள்ளனர்.
படிக்க: துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்
சமீபத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விவாதத்தில் கழிவு நீர் பாதைகள் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்வதற்கு ரோபோக்களை பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கடந்த 29 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதி சுதன்ஷூ துலியா தலைமையிலான அமர்வு கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு பெரு நகரங்களில் கைகளால் துப்புரவு மற்றும் கழிவு நீரைச் சுத்தம் செய்வதற்கு முழுமையாகத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நடைமுறையை நிறுத்தும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எப்போது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பதை விளக்கி பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆறு பெரு நகரங்களின் நகராட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு நாட்களுக்குள்ளாகவே மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசானது கைகளைப் பயன்படுத்தி கழிவுநீர் வடிகால் குழாயைத் துப்புரவு செய்யும் வேலையில் மூன்று தொழிலாளர்களை ஈடுபடுத்தி அவர்களைப் படுகொலை செய்துள்ளது.
துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை. இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைத் துப்புரவு பணியிலேயே இருத்தி வைப்பதற்கான நடவடிக்கையாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram